தி.மு.க தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தரப்புக்கும், தெற்கு மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே கோஷ்டிப்பூசல் இருந்து வருகிறது. ஏற்கெனவே கட்சித் தலைமை இரு மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து, கண்டித்திருந்தது.
இந்த நிலையில் தி.மு.க தேனி வடக்கு, தெற்கு மாவட்டங்களின் செயற்குழுக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ``தங்க தமிழ்ச்செல்வன், ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஒரே காரில் வரும் அளவுக்கு ஒற்றுமையாக இருக்கின்றனர். அவர்கள் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் நேரடியாகப் பேசிக்கொள்ள வேண்டும். இடையே இருக்கும் புரோக்கர்களின் பேச்சைக் கேட்கக் கூடாது. இவர்கள் இரண்டு பேருக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை. அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களுக்குத்தான் கருத்துவேறுபாடு உள்ளது. இந்த மாவட்டத்தில் இல்லாத கோஷ்டிப்பூசலா... மு.மேத்தா, கம்பம் ராஜா போன்றவர்கள் இருந்தபோதும் கோஷ்டிப்பூசல் இருந்தது.
எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகியோர் இடையே, இருவர்கள் செய்த சதி வேலைதான் கட்சியின் பிளவுக்குக் காரணமானது. இந்த மாவட்டத்தில் இருக்கும் ஒரே பிரச்னை ஈகோ-தான். ஈகோவை விட்டுவிட்டு, தலைவர் மட்டும்தான் முக்கியம் என நினைத்துச் செயல்படுங்கள். இந்தக் கூட்டத்துக்கு வரும்போது தலைவர், `தேனியில் என்ன நடக்கிறது என்பதை விசாரித்து வந்து சொல்லுங்கள்' எனக்கூறி அனுப்பினார். நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடியும். நாரதர் வேலை பார்ப்பவர்கள், கோஷ்டி உருவாக்குபவர்களைப் புறந்தள்ள வேண்டும்.
முதலில் பேனரிலிருந்துதான் பிரச்னை தொடங்குகிறது. பெயர்களைச் சிறிதாகப் போடுவது, படங்களைச் சிறிதாகப் போடுவது என ஆரம்பிக்கிறது. ஒரு மாவட்டச் செயலாளர் தன் படத்தையும், தன் மகன் படத்தையும் பெரிதாகப் போட்டுவிட்டு, கலைஞர், அண்ணா ஆகியோரின் படத்தை பாஸ்போர்ட் அளவுக்குப் போட்டிருந்தார். இது தொடர்பாக கண்டனம் தெரிவிக்குமாறு கலைஞரிடம் கூறினேன். அதற்கு அவர், `சும்மா இருய்யா... கண்டித்தால், நம்ம படத்தைப் போடுவதையே நிறுத்திவிடுவார்கள்' என்றார் வேடிக்கையாக.
கட்சியைவிட்டு பல ஆண்டுகளாக ஒதுங்கியிருப்பவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை கட்சிக் கூட்டத்துக்கு அழைத்து வாருங்கள். அவர்களுக்குப் பதவி கிடைக்காமல் இருக்கலாம், அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கலாம். அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுங்கள். தேர்தல் நேரத்தில் எவன் எவன் கால்களிலோ விழுகிறோம். நம் கட்சிக்காரன் காலில் விழுந்தால் என்ன தவறு" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ``தங்த தமிழ்ச்செல்வன்தான், `தேனி மாவட்டப் பிரச்னைக்குக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதுபோல பிரச்னைகள் உள்ள பிற மாவட்டங்களில் கூட்டம் நடத்தி, பிரச்னையைத் தீர்க்க வேண்டும்' எனக் கூறினார். அதன்படி இன்று தேனியில் முதல் கூட்டம் போடப்பட்டிருக்கிறது. அடுத்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் இது போன்ற கூட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்டப் பொறுப்பாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமி, பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் மற்றும் ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-organizational-secretary-rs-bharathi-held-meeting-with-theni-district-secretaries
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக