விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே புலியூரான்- பி.தொட்டியாங்குளம் இடையிலான ரயில்வே மேம்பால தண்டவாளத்தில் கடந்த செப்.,25-ம் தேதி காலை பயங்கர காயங்களுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற திருச்சுழி போலீஸார், ரயில்வே தண்டவாளத்தில் இறந்துகிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில் இறந்த நபர், திருச்சுழியை அடுத்த ஆலடிப்பட்டி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் (50) என்பதும் டீ மாஸ்டராக வேலைபார்த்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் அன்பரசனின் உடலில் காணப்பட்ட ஆழமான காயங்களை வைத்து, அவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் சந்தேகம்வராமல் இருப்பதற்காக உடலை ரயில்வே தண்டவாளத்தில் கொலையாளிகள் வீசிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகக் கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதற்காக திருச்சுழி சரக காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. சின்னகட்டங்குடியைச் சேர்ந்த பாண்டி முருகன் (25) என்பவரைச் சந்தேகத்தின்பேரில் பிடித்து, தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார் அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில், ``அன்பரசன், டீக்கடையில் வேலைபார்த்து வந்த நிலையில், அவருக்கு பாண்டிமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பேரில் நண்பர்களான இருவரும் சம்பவத்தன்று ஒன்றாகச் சேர்ந்து சின்னகட்டங்குடி பகுதியிலுள்ள பாண்டிமுருகனுக்குச் சொந்தமான தோப்பு வீட்டில் வைத்து மது அருந்தியிருக்கின்றனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த பாண்டிமுருகன், தனது அருகே கிடந்த கட்டையை எடுத்து அன்பரசனை தலையில் பயங்கரமாகத் தாக்கியிருக்கிறார். இதனால் தலையில் பலத்த அடிப்பட்டு அன்பரசன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அன்பரசன் உயிரிழந்ததால் பதறிப்போன பாண்டிமுருகன், நடந்த விவரங்களைத் தன்னுடைய சகோதரர்களிடம் கூறியிருக்கிறார். அதன்பேரில் அங்குவந்த கட்டங்குடியைச் சேர்ந்த வீரபாண்டி (32), ராஜபாண்டி (27), மாதவன் (23), அன்பழகன் (32) உட்பட 5 பேரும் சேர்ந்து இறந்துகிடந்த அன்பரசனை டூவீலரில் தூக்கிச்சென்று விருதுநகர் - மானாமதுரை செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் வீசிச் சென்றிருக்கின்றனர். யாருக்கும் சந்தேகம் வராதவாறு ஊரில் மிக சாதாரணமாக நடந்துகொண்டவர்கள், அடுத்த நாளே தலைமறைவாகினர்.
இதில் முதற்கட்டமாக பாண்டிமுருகன் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் கொலைவழக்கில் சம்பந்தப்பட்ட அவரின் சகோதரர்களான வீரபாண்டி, ராஜபாண்டி, மாதவன், அன்பழகன் ஆகியோர் இன்று (05-10-2023) கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
source https://www.vikatan.com/crime/thiruchuli-tea-master-murdered-by-his-own-friend
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக