இன்று பலரும் பயன்படுத்தும் ஒரு வார்த்தை பித்ரு தோஷம்.
ஒரு சிலருக்கு வாழ்வில் செல்வம், பதவி, கல்வி எல்லாம் இருக்கும். ஆனால் குடும்பத்தில் நடக்கவேண்டிய சுபகாரியங்கள் நடைபெறாமல் தடைபட்டுக்கொண்டே செல்லும். வீட்டில் குழப்பம், தேவையற்ற சச்சரவு ஆகியன வந்துபோகும். இப்படிப்பட்டவர்கள் ஜோதிடரை அணுகித் தங்கள் ஜாதகத்தைக் காட்டினால் நூற்றில் 90 % பேருக்கு பித்ரு தோஷம் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்வார்கள்.
பித்ரு தோஷம் ஏன் ஏற்படுகிறது?
நாம் இந்த உலகில் வந்து பிறந்ததற்கு முதற் காரணம் நம் பெற்றோர்கள். நம்மை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு, அவர்கள் வாழும்போது உரிய மரியாதைகள் செய்து கௌரவித்து முதுமையில் அவர்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து மனம் குளிரச் செய்ய வேண்டும். இது கடமை. இதில் எவரும் தவறக்கூடாது. அவ்வாறு தவறினால் நம் பெற்றோர் மனம் வருந்தவில்லை என்றாலும் இயற்கை அவற்றுக்குரிய தண்டனையை நிச்சயம் நமக்குக் கொடுத்தே தீரும்.
அடுத்து அவர்கள் இந்த ஸ்தூல உடலை விட்டு சூட்சும உடலை அடைந்தபிறகும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ரு காரியங்களைத் தவறாமல் செய்ய வேண்டும். அமாவாசை தோறும் அவர்களுக்கு எள்ளும் தண்ணீரும் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை அவர்கள் இறந்த திதி அன்று அவர்களை நினைத்துப் படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் நிச்சயம் பித்ரு தோஷம் நமக்கு ஏற்படும்.
பித்ரு லோகத்தில் ஒரு நாள் என்பது நம் உலகத்தில் 365 நாள்கள். எனவே, அவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது முறையாகப் படையல் இட்டு நாம் உணவு வழங்கினால் அவர்கள் ஒவ்வொரு நாளும் பட்டினியில்லாமல் வாழ்வார்கள் என்பது பொருள். கூடுமானவரை தினமும் காக்கைக்கு உணவிட்டுப் பின் உண்ண வேண்டும். இவை அனைத்தையும் செய்யத் தவறினால் நமக்குப் பித்ரு தோஷம் ஏற்படும்.
மேலும் நம் முன்னோர்கள் முறையாக கர்மா காரியங்களைச் செய்யாமல் விட்டிருந்தாலும் நமக்கு பித்ரு தோஷம் ஏற்படும். அவர்கள் வாங்கிய சொத்துக்களும் கடன்களும் நமக்கு உரிமையாவதைப்போல அவர்களின் கர்மாக்களும் நமக்குச் சேர்கின்றன.
பித்ருதோஷம் தீர்க்க 3 அமாவாசைகள்
ஓர் ஆண்டில் 12 அமாவாசைகள் வரும். அவற்றில் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் அமாவாசைகள் முக்கியமானவை. இந்த மூன்று அமாவாசைகளிலும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை மிகவும் முக்கியமானது. நம் முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூலோகம் வந்து நாம் தரும் தர்ப்பணங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்பது நம்பிக்கை. மகாளயபட்சத்தின் 15 நாள்களும் நம் பித்ருக்கள் இந்த பூமியில்தான் வாசம் செய்கிறார்கள். எனவே 15 நாள்களும் தர்ப்பணம் செய்வது சிறப்பு. இயலாதவர்கள் மகாளய அமாவாசை அன்று தவறாமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டியது அவசியம்.
பித்ரு தோஷம் தீர்க்கும் தானங்கள்
மகாளய அமாவாசை நாளில் அனைவரும் தானம் செய்ய வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யும் தானம் நாள்பட்ட பித்ருக் கடனைக் கரைக்கும். முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத்தரும். அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன என்பது குறித்து ஜோதிடர் பாரதிஶ்ரீதரிடம் கேட்டோம்.
மேஷம்
ராசியில் குரு அமர்ந்திரும் இந்த அமாவாசை தினத்தில் சனிபகவான் 10 ம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சனிக்கிழமையில் இந்த அமாவாசை நிகழ்கிறது. எனவே ஆஞ்சநேயர் ஆலயத்துக்குக் கறுப்பு உழுந்து தானம் கொடுப்பது சிறந்த பரிகாரமாகும். இதன் மூலம் பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் வளங்கள் சேரும்.
ரிஷபம்
12 - ல் குரு இருக்கும் இந்த அமாவாசை நாளில் ரிஷப ராசி அன்பர்கள் சிவாலயம் சென்று பச்சரிசி, வெல்லம் ஆகியன தானம் கொடுங்கள். பித்ரு காரியங்கள் முடித்து சிவாலயம் சென்று தானம் கொடுத்து வழிபாடு செய்வதன் மூலம் தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி சுபம் உண்டாகும்.
மிதுனம்
10 - ல் ராகு 11 - ல் குரு அமர்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் நிகழும் அமாவாசை தினம் இது என்பதால் இந்த நாளில் தவறாமல் முன்னோர்களை வழிபட்டுப் பிறகு பெருமாள் ஆலயம் சென்று வழிபாடு செய்வது நல்லது. பெருமாள் ஆலயத்தில் இருக்கும் கருட பகவானுக்கு தீபம் ஏற்றியும் தீபத்துக்கு நெய் தானமாகவும் வழங்கி வந்தால் சுப காரியத்தடைகள் நீங்கும். மக்கட் செல்வம் எதிர்பார்த்தவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்.
கடகம்
7- ல் சனி அமர்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஐயப்பனை வழிபடுவது விசேஷம். இந்த அமாவாசை நாளில் தந்தை இல்லாதவர்கள் தவறாமல் தர்ப்பணம் செய்து வழிபடுங்கள். மேலும் ஐயப்பன் கோயிலுக்கு நெய் மற்றும் அபிஷேகப் பொருள்களை தானமாகக் கொடுங்கள். பணவரவில் இருந்த தடைகளை முன்னோர்கள் நீக்கி செல்வ வளம் தருவார்கள்.
சிம்மம்
ராசிக்கு இரண்டாம் இடத்தில் கேதுவோடு சூரியன் சந்திரன் இணைந்திருக்கிறார்கள். எனவே இந்தக் காலகட்டத்தில் செய்யும் வழிபாடுகள் நற்பலன்களைக் கொடுக்கும். தீய பலன்களைத் தவிர்க்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த நாளில் சிவன் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது. தயிர்சாதம் அன்னதானம் செய்வதன் மூலம் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து சத்ருக்களின் சூழ்ச்சிகளில் இருந்து நம்மைக் காத்தருள்வார்கள்.
கன்னி
இந்த அமாவாசை நாளில் ராசியிலேயே கேது, சூரியன், சந்திரன், புதன் ஆகிய நான்கு ராசிகள் அமர்ந்திருக்கிறார்கள். எனவே முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியவர்கள் இந்த நாளைத் தவறவிடக் கூடாது. இந்த நாளில் செய்யும் பித்ருகாரியம் சகல நலன்களையும் பெற்றுத்தரும். கன்னி ராசிக்காரர்கள் வீரபத்திரர் சந்நிதி இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வெற்றிலை மாலை சாத்தி வழிபடுவது வேலையில் இருந்த பிரச்னைகளை நீக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராசியில் 12 - ம் இடத்தில் நான்கு கிரக சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இந்த நாளில் பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பு. செவ்வரளி மலர் சமர்ப்பணம் மிகவும் உகந்தது. இவர்கள் ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்வது நல்லது. இதன்மூலம் தூக்கமின்மையால் அவதிப்பட்டுவரும் துலாராசிக்காரர்கள் நலம் பெறுவார்கள்.
விருச்சிகம்
பித்ருக்களின் சாபங்கள் தீர விருச்சிக ராசிக்காரர்கள் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. மகாளய அமாவாசை நாளில் முன்னோர்கள் வழிபாடுகளை முடித்து அருகில் இருக்கும் அரசமரத்தடி விநாயகரை தரிசனம் செய்து அவருக்கு மலர்கள் சாத்தி வழிபடுவது விசேஷம். மனக் கலக்கங்கள் தீரும். புண்ணிய பலன்கள் பெருகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த அமாவாசை நாளில் முன்னோர் வழிபாட்டோடு குல தெய்வ வழிபாட்டையும் தவறாமல் செய்வது நல்லது. இருக்கும் ஊரின் எல்லை தெய்வத்தை இந்த நாளில் தரிசித்து வணங்குங்கள். ஆலயத்தில் பணி செய்யும் சேவகர்களுக்கு உதவுங்கள். உடல் நலம் சார்ந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும்.
மகரம்
ராசியில் சனி, 3 -ல் ராகு, 4 - ல் குரு என கிரக சஞ்சாரங்களால் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகித் தவிக்கும் மகர ராசிக்காரகள் இந்த அமாவாசை நாளில் அனுமன் ஆலயம் சென்று வழிபடுங்கள். அனுமனுக்கு வெண்ணெய் சமர்ப்பிப்பது விசேஷம். செந்தூரக் காப்பு இட்டு அனுமனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்.
கும்பம்
இரண்டில் ராகு, 12 - ல் சனி என முன்னும் பின்னும் கிரகங்கள் இருக்க நிறைய தர்ம சங்கடங்களை அனுபவித்துவரும் கும்ப ராசிக்காரர்கள் இந்த அமாவாசை நாளில் கறுப்பு உழுந்து, பச்சரிசி, நல்லெண்ணய் இந்த மூன்று பொருள்களையும் ஆலயங்களுக்கு தானம் கொடுப்பது நல்லது. இதன் மூலம் சனி பகவானின் தொல்லைகள் நீங்கும். பித்ருக்களின் ஆசியும் கைகூடும்.
மீனம்
ராசியிலேயே ராகு அமர்ந்திருக்கும் மீன ராசிக்காரர்கள் நரசிம்மர் ஆலயம் சென்று வழிபடுங்கள். ஆலயத்துக்கு வெல்லம் மற்றும் ஏலக்காய் தானம் கொடுங்கள். வாழ்வில் உண்டாகும் காரியத்தடைகள் நீங்கி வெற்றிகள் குவிய நரசிம்மர் அருள்புரிவார்.
source https://www.vikatan.com/spiritual/festivals/mahalaya-amavasai-how-to-worship-our-ancesters
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக