உலகக்கோப்பையில் இரண்டு நாள்களுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தைத் தோற்கடித்து அதிர்ச்சியளித்த நிலையில், இன்று தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி அதிர்ச்சியளித்திருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவே அதிரடியாக ஆடி 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வென்றிருந்தது. இலங்கைக்கு எதிரான போட்டியில் 400 ரன்களுக்கும் மேல் அடித்து இமாலய வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், இப்போது நெதர்லாந்துக்கு எதிராக முழுமையாகத் திணறி 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்திருக்கிறது.
தரம்சாலா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமாதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். போட்டி தொடங்கியபோது ஆரம்பத்தில் இந்தப் போட்டி நெதர்லாந்து பக்கமாகச் செல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், ஒரு கட்டத்தில் நெதர்லாந்து அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. மழையினால் ஓவர்களும் குறைக்கப்பட்டிருந்தன. 43 ஓவர்கள் போட்டி என்பதால் இன்னும் அழுத்தம் அதிகம் இருக்கக்கூடும் என்பதால் நெதர்லாந்து வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றே தோன்றியது.
ஆனால், அந்த அணி 50-4 என்கிற கட்டத்திலிருந்து 245-8 என்ற நிலைக்கு வந்து சேர்ந்தது. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்கார்ட் எட்வர்ட்ஸ்தான் 69 பந்துகளில் 78 ரன்களை அடித்திருந்தார். வாண்டர் மெர்வ்வும் இவருடன் சேர்ந்து 29 ரன்களை அடித்திருந்தார்.
இந்தக் கூட்டணிதான் நெதர்லாந்தை எழுச்சி பெற செய்தது. இருவரும் சேர்ந்து 64 ரன்களை எடுத்திருந்தனர். எட்வர்ட்ஸ் கடைசி வரைக்குமே ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்கா சார்பில் யான்சன், ரபாடா, இங்கிடி என வழக்கம்போல வேகக் கூட்டணி கலக்கியிருந்தது.
தென்னாப்பிரிக்க அணிக்கு டார்கெட் 246. பேட்டிங்கில் கலக்கியதைப் போலவே பௌலிங்கிலும் கலக்கினார் வாண்டர் மெர்வ். நல்ல ஃபார்மில் கடந்த இரண்டு போட்டிகளிலுமே சதமடித்திருந்த குவிண்டன் டீகாக்கை தான் வீசிய முதல் பந்திலேயே போல்டாக்கி வெளியேற்றினார் மெர்வ். கூடவே வாண்டர் டஸனின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்காவின் வீழ்ச்சி அங்கேயே தொடங்கிவிட்டது. வரிசையாக விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தன. மில்லர் கொஞ்சம் தாக்குப்பிடித்தார். ஆனால், அவராலுமே ஆறுதலாக 43 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. வான் பீக்கின் பந்துவீச்சில் ஸ்டம்பைப் பறிகொடுத்து வெளியேறினார். 42.5 ஓவர்களில் 207 ரன்களில் தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட் ஆனது. நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்
தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரு அணியிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து நெதர்லாந்தும் ஒரு அப்செட்டை நிகழ்த்தி இந்தத் தொடரை மேலும் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறது.
source https://sports.vikatan.com/cricket/icc-world-cup-2023-netherland-beats-south-africa-and-creates-the-next-upset
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக