Ad

வெள்ளி, 20 அக்டோபர், 2023

``தன்பாலின திருமண தீர்ப்பு; எங்களுக்கு ஏமாற்றமே..." - தடகள வீராங்கனை டூட்டி சந்த் வருத்தம்!

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்வது மற்றும் குழந்தையைத் தத்தெடுப்பதற்கான அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

பல தன்பாலின தம்பதிகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Rainbow Flag

இந்த நிலையில் இந்திய தடகள வீராங்கனையான டூட்டி சந்த் (Dutee Chand) உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த தன் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ``நான் என் பார்ட்னர் மோனாலிசாவை திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டு இருந்தேன். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என் அனைத்து திட்டங்களையும் சீர்குலைத்துள்ளது. 

நான் ஐந்து வருடங்களாக மோனாலிசாவுடன் வாழ்ந்து வருகிறேன். நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறோம், பெரியவர்களாகிய நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளை எடுக்க எங்களுக்கு முழு உரிமை உள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணங்களை அனுமதிக்கும் சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றும் என நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றோர் உரையாடலில், ``தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கும் உரிமை இருப்பதைப் போல, அவர்கள் விரும்பும் நபரைத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை இருக்க வேண்டும். 

டூட்டி சந்த்

நாங்கள் யாரையும் எங்களுடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வற்புறுத்தவில்லை. நாங்கள் அதை எங்கள் விருப்பப்படி செய்கிறோம். நம் விருப்பப்படி வாழ்க்கையை நடத்த நாமும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். 

பல நாடுகள் ஏற்கெனவே தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை சட்டபூர்வமாக்கியுள்ளன. இந்தியாவில் அதை சட்டபூர்வமாக்குவதில் என்ன பிரச்னை?’’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்வது மற்றும் குழந்தையைத் தத்தெடுப்பதற்கான அங்கீகாரத்தை உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?!



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/i-was-planning-to-marry-my-partner-athlete-dutee-chand-regrets

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக