டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க
``ஆட்சி நிர்வாகத்தைப்போலவே காவிரி விவகாரத்திலும் தி.மு.க அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. தி.மு.க கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் அரசுதான் கர்நாடகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இதுவரை அந்த அரசை எதிர்த்து ஏதாவது பேசியதுண்டா தி.மு.க அரசு... காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரையை கர்நாடக முதல்வர் திட்டவட்டமாக மறுத்துவருகிறார். அது குறித்து தமிழக பொம்மை முதல்வர் எந்த எதிர்க்கருத்தும் தெரிவிக்கவில்லை.
`மேக்கேதாட்டூவில் அணை கட்டியே தீருவோம்’ என்கிறார்கள்... அதற்கும் தி.மு.க எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. அங்கே டெல்டாவில் விவசாயிகளின் பயிர் கருகும் நிலையில் இருக்கிறது. தண்ணீர் வரவில்லையென்றால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதுகுறித்தெல்லாம் தி.மு.க அரசுக்கு எந்தக் கவலையுமில்லை. எப்படி ஊழல் செய்வது... கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு அடுத்த தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துகிறார்கள். 2004-ம் ஆண்டு இதே பிரச்னையை அம்மா அரசு அதிரடியாகக் கையாண்டது. ‘அன்றைய முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை’ என்று நீதிமன்றம் வாயிலாகவும், மக்கள் மன்றம் வாயிலாகவும் கர்நாடக அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார் அம்மா. அதன் பிறகே தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைத்தது. ஆனால், தமிழ்நாட்டை ஆளும் இந்த விளம்பர அரசு, ஒரு கண்டனம் தெரிவிக்கக்கூட அஞ்சி, தொடர்ந்து மௌனம் சாதித்துவருகிறது.
’’தமிழன் பிரசன்னா, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க
``தமிழ்நாட்டு மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் எந்தப் பிரச்னையிலும், எந்தக் காலத்திலும் தி.மு.க மௌனம் காத்த வரலாறே கிடையாது. காவிரி விவகாரம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்காலப் பிரச்னை. காவிரி நடுவர் மன்றம் அமைக்க, டெல்லிக்கு நடையாக நடந்து தமிழகத்தின் நீர் உரிமையை நிலைநாட்டியவர் தலைவர் கலைஞர்தான். இப்போதுகூட ஒன்றிய அமைச்சரைச் சந்தித்துப் பேசி, நீதிமன்றத்தில் போராடி, தமிழகத்துக்கான நீரை வழங்க உத்தரவு பெற்றிருக்கிறோம். கர்நாடக அரசு தண்ணீர் தர மறுத்தால், அதையும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியும் வெற்றி காண்போம். அம்மையார் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு, ஊழல் வழக்கில் கைதாகி கர்நாடக சிறையிலடைக்கப்பட்டபோது, ‘காவிரியை வெச்சுக்கோ, அம்மாவைக் குடு’ என்று போஸ்டர் அடித்த அ.தி.மு.க-வினருக்கு காவிரி விவகாரம் குறித்துப் பேச என்ன அருகதை இருக்கிறது... அ.தி.மு.க ஆட்சியில் ஆறு ஆண்டுகளாகக் காவிரிநீர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவில்லை. சட்ட அறிவின்றி, மாநில உரிமையையும் அவர்கள் விட்டுக் கொடுத்ததால், செயற்கை வறட்சி ஏற்பட்டு டெல்டா விவசாயிகள் 217 பேர் தற்கொலை செய்துகொண்டதும், எலிக்கறி தின்றதும், கஞ்சித் தொட்டி திறந்ததும் தமிழ்நாட்டில் நடந்தது. அ.தி.மு.க-போலன்றி, தி.மு.க அரசு எல்லாச் சூழலிலும் விவசாயிகளுடன் துணை நிற்கும், விவசாயிகள் உரிமை காக்கும். காவிரி நீருக்காக அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எடுக்கவேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் தி.மு.க அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது!’’
source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-tamil-nadu-government-activities-about-cauvery-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக