தனிமனிதர்களின் பொருளாதார நிலை குறித்து சமீப காலமாக வரும் சில புள்ளிவிவரங்கள் நம்மை அதிர்ச்சி அடையச் செய்வதாகவே இருக்கின்றன. சில நாள்களுக்குமுன் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்ட, தனிநபர்கள் வாங்கிய கடன் குறித்த புள்ளிவிவரங்கள் அப்படிப்பட்டவைதான்.
கடந்த ஓராண்டுக் காலத்தில் பர்சனல் லோன்கள் 30.7% அதிகரித்துள்ளன. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பர்சனல் கடன்களின் மதிப்பு 36.47 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 47.70 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கிரெடிட் கார்டு கடன்களின் மதிப்பு சுமார் 1.68 லட்சம் கோடி ரூபாய். இதுவே கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் கிரெடிட் கார்டு கடன்களின் மதிப்பு சுமார் 2.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது வரலாறு காணாத உச்சம் ஆகும்.
நம் நாட்டில் ஒருபக்கம் பொருளாதாரம் நன்கு வளர்ச்சி அடைந்து, தனிமனிதர் களின் வருமானம் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகரித்துவரும் வேளையில், இன்னொரு பக்கம், மக்கள் வாங்கும் கடன்களின் அளவும் அதிகரித்துவருவது எந்த வகையிலும் ஆரோக்கியமான வளர்ச்சியாக நாம் பார்க்க முடியாது.
முன்பெல்லாம் வருமானம் எந்த அளவில் இருந்ததோ, அந்த அளவிலேயே செலவுகளை வைத்துக்கொண்டார்கள் நமக்கு முன்பிருந்தவர்கள். வருமானம் குறைவாக இருந்தாலும், அதில் கொஞ்சம் பணத்தையாவது மிச்சம் பிடித்து சேமிக்க நினைத்து, சிக்கனமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைக்குக் கடன் வாங்கி வாழ்க்கை நடத்துவது சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வாழ்க்கை முறையாக மாறியிருப்பதுடன், அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்வதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் மாறியிருக்கிறார்கள். திருமணத்தை நடத்த கடன், வாகனம் வாங்க கடன், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்க கடன் என அத்தனை விஷயங் களையும் கடன் வாங்கியே சமாளிக்கும் நிலைக்கு இன்றைக்குப் பலரும் வந்து விட்டார்கள் என்பதை வேதனையுடன் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.
பார்த்ததை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையும், வட்டியாகக் கட்டும் பணம் பற்றி எந்த அக்கறையும் இல்லாததும்தான் இந்த மோசமான நிலைக்கு முக்கியமான காரணம். ‘தனிமனிதர்கள் நாசமானாலும் பரவாயில்லை; அவர்களிடம் இருந்து கிடைக்கும் வட்டிதான் நமக்கு முக்கியம்’ என்று நினைக்கும் கந்துவட்டி நிறுவனங்களின் பேராசையும் மக்களை இந்தக் கடன் புதைகுழியில் மாட்டவைத்து சீரழித்துக்கொண்டிருக்கின்றன!
கழுத்தை நெரிக்கும் இந்தக் கடன் சுமையில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட, நம் வரவு-செலவு கணக்கை சரியாக அமைத்துக்கொள்வதன்மூலம், கடன் இல்லாத ஒரு வாழ்க்கையை நம்மால் நிச்சயமாக வாழ முடியும். நிதி நிர்வாகத்தை சரியாகப் புரிந்துகொண்டு நம் செலவுகளை சரியாக அமைத்துக்கொண்டால், கடன் என்கிற பிரச்னை நம்மில் யாருக்கும் வராது என்பது நிச்சயம்!
- ஆசிரியர்
source https://www.vikatan.com/personal-finance/money/credit-card-loan-and-increase-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக