Ad

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

`யெகோவா சாட்சிகள் சபையில் தேசதுரோகத்தை போதிக்கின்றனர்’ - குண்டுவைத்ததாக சரணடைந்தவர் வெளியிட்ட வீடியோ

கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் `சாம்றா இண்டர்நேஷனல் கிறிஸ்தவ கன்வென்சன்’ சென்டரில் யாக்கோபா சாட்சிகள் சபைகளின் மாநாடு கடந்த 27-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. அந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கூடியிருந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்துகொண்டிருந்த சமயத்தில் காலை சுமார் 9.40 மணியளவில் அடுத்தடுத்து மூன்று பகுதிகளில் குண்டுகள் வெடித்துள்ளன. வெடித்த பகுதியில் தீ பற்றி எரிந்தது. அதில் பெரும்பாவூரைச் சேர்ந்த லெயோனா பவுலேஸ்(60) என்ற பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் சிகிச்சையில் இருந்த தொடுபுழாவைச் சேர்ந்த குமாரி புஷ்பன்(53), மலையாற்றூரைச் சேர்ந்த லிபினா(12) ஆகியோர் உயிரந்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் காயம் அடைந்த 36 பேர், வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நிலையில், `குண்டு வெடிப்பில் ஈடுபட்டது நான் தான்’ எனக்கூறிக்கொண்டு திருச்சூர் கொடகரா காவல் நிலையத்தில் மார்ட்டின் என்பவர் சர்ணடைந்துள்ளார். தன்னை கொச்சியைச் சேர்ந்தவன் என அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் சரணடைந்துள்ளார். அவர் சரணடையும் முன்பு ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், "எனது பெயர் மார்ட்டின். இப்போது நடந்த ஒரு சம்பவத்தை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

களமசேரி வெடிகுண்டு வெடிப்பு

யெகோவா சாட்சிகள்  நடத்திய கன்வென்ஷனில் வெடிகுண்டு வெடித்ததையும் அதைத்தொடர்ந்து மோசமான சில சம்பவங்கள் நடந்தன. என்ன நடந்தது என எனக்கு முழுமையாக தெரியவில்லை. ஆனாலும் நடந்திருக்கும் என்ற உறுதி எனக்கு இருக்கிறது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் தான் அங்கு குண்டுவெடிப்பு நடத்தியது. எதற்காக நான் குண்டுவெடிப்பை செய்தேன் என்பதை உங்களுக்கு உணர்த்துவதற்காகவும், எதற்காக அந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தினேன் என்பதை விளக்குவதற்காகவே நான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன். 16 ஆண்டுகளாக நானும் அந்த சபையில் உறுப்பினராக இருந்தேன். முதலில் நான் இதை சீரியசாக எடுக்காமல், நகைச்சுவையாக நினைத்தே இயங்கினேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இது மிக தவறான ஒரு நடவடிக்கை என உணர்ந்து கொண்டேன். அவர்கள் போதிப்பது மிகவும் தேச துரோக செயல் என உணர்ந்து கொண்டேன்.

இதை நீங்கள் திருத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் பலமுறை எடுத்து கூறினேன். ஆனால் அவர்கள் யாரும் அதை செய்ய தயாராக இல்லை. ஒரு நாட்டில் நாம் வாழ்கின்றோம். அந்த நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் மோசமாக 'வேசி சமூகம், நாசமாக போகும் சாதியினர், அவர்களுடன் சேரக்கூடாது, அவர்களுடன் உணவு உண்ணக்கூடாது' என்றும் சொன்னார்கள். இது தவறான பிரசாரம் என எனக்கு புரிந்தது. நான்கு வயது நர்சரி படிக்கும் குழந்தையிடம் உங்களுடன் படிக்கும் சக மாணவர்கள் தரும் மிட்டாயை வாங்கி சாப்பிடக்கூடாது என அவர்கள் சொல்லுகிறார்கள். 50 குழந்தைகள் உள்ள வகுப்பில் 49 குழந்தைகள் மிட்டாய் சாப்பிடும்போது, இந்த ஒரு குழந்தையின் நிலையை நினைத்துப்பாருங்கள். பெற்றோர் நான்கு வயது முதல் குழந்தையின் மூளையில் விஷத்தை ஊசியாக செலுத்துகிறார்கள்.

வெடிகுண்டு வைத்ததாக சரணடைந்த மார்ட்டின் வீடியோவில் பேசும் காட்சி

தேசிய கீதம் பாடக்கூடாது என குழந்தைகளிடம் போதிக்கிறார்கள். ஆசிரியர் ஆகுவதற்கு கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இதெல்லாம் அழிந்துபோகும் ஜனங்கள் செய்யும் செயல் எனக்கூறுகின்றனர். நமக்கு ஒரு நம்பிக்கை இருப்பதில் தவறு இல்லை. நாம் இந்த பூமியில் வாழுகிறோம், இறக்கிறோம். எல்லா மனிதர்களும் மரணித்துபோவார்கள் நாம் மட்டும் வாழ்ந்துகொண்டிருப்போம் என போதிக்கிறார்கள். 850 கோடி மக்கள் நாசமாக போகவேண்டும் என விரும்பும் அவர்களை நாம் என்னச் செய்வது. தவறான பிரசாரத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்தே ஆகவேண்டும். எனக்கு ஆரம்பத்தில் இது புரியவில்லை. இது நாட்டுக்கு ஆபத்தானது என எனக்கு புரிந்ததால்தான் நான் இப்படி ஒரு முடிவு எடுக்கவேண்டியது வந்தது.

அரசியல் கட்சிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காது. மதம் என்றால் எல்லாருக்கும் பயம். நீங்கள் கண் திறக்க வேண்டும். இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்புபவர்களை நீங்கள் கட்டுப்படுத்தாமல் இருந்தால், என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள் உயிரைக் கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. அருகில் நிற்கும் உங்கள் சகோதரனையும், தாயையும், குழந்தையையும் வேசி சமூகம் என பட்டப்பெயர் சூட்டலாமா? ஒருவர்கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் அவர்கள் கருத்துதான் சரி என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும். யெகோவா சாட்சிகளே உங்கள் கருத்து தவறானது. மற்றவர்களுக்கு உதவி செய்யமாட்டார்கள், மரியாதை செலுத்தமாட்டார்கள்.

களமசேரி யெகோவா சாட்சிகள் கிறிஸ்தவ கன்வென்சனில் வெடிகுண்டு வெடித்த காட்சி

மிகவும் சிந்தித்துத்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். தவறான அவர்களின் நடவடிக்கை நம் நாட்டில் முடிவை அடைந்தே தீரும். அவர்களின் கொள்கையை நான் எதிர்க்கிறேன். அவர்கள் இந்த நாட்டுக்கு தேவையில்லாதவர்கள் என நான் நினைக்கிறேன். நான் உடனே போலீஸில் சரணடையப்போகிறேன். எப்படி இந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தேன் என்பதற்கான பார்முலாவை நீங்கள் ஒளிபரப்பு செய்யக்கூடாது. அது அது மிகவும் ஆபத்தானது. சாதரண மனிதர்களுக்கு அது தெரிந்தால் பெரிய அளவில் ஆபத்தை விளைவிக்கும். தயவுசெய்து மீடியாக்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ வெடிகுண்டு வெடிக்கச் செய்ததத்கான வழிமுறைகளை டெலிகாஸ் செய்யக்கூடாது" என அவர் வீடியோவில் கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரித்த போலீஸ் மார்ட்டினின் முழு பெயர் டொமினிக் மார்ட்டின் எனவும், அவர் ரிமோட் மூலம் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகமுதற்கட்ட விசாரணையில் கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/crime/bomb-blast-kerala-the-man-who-surrendered-released-a-video

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக