ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து நடந்தும் "UPSC மற்றும் TNPSC GROUP I, II தேர்வுகளில் வெல்வது எப்படி?" என்ற ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் இம்மாதம் 11-ம் தேதி மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் Dr. K.பிர்தௌஸ் பாத்திமா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.
TNPSC தேர்வில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார் அவர். "என்னுடைய சொந்த ஊர் தென்காசி. நான் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியில் முதுகலை படிப்பு படித்தேன். ஆரம்பத்தில் UPSC தேர்வெழுதி வெற்றிப் பெறவேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. 2007-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்தேன். வேலை கிடைத்துவிட்டால் வெளியூருக்குச் சென்று பணியாற்றும் வேண்டியிருக்கும் என்பதால் தேர்வை எழுதவில்லை. ஆனாலும் கலெக்டராக வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. குடும்பச் சூழ்நிலை காரணமாக, சித்தா படிப்பை முடித்துவிட்டு கிளினிக்கில் பணியாற்றத் தொடங்கினேன். 2013-ல் திருமணமான பிறகும் இதே பணியைச் செய்து வந்தேன். என்னுடைய ஆர்வத்தைப் புரிந்துகொண்ட என் கணவர், TNPSC குரூப்-1 தேர்வை எழுதச் சொன்னார். கிளினிக்கில் பணியாற்றிக்கொண்டே, அவ்வப்போது தேர்வுக்கும் படித்து வந்தேன்.
இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, 34 வயதில் TNPSC குரூப் 1 தேர்விற்கு முதல் முறையாக விண்ணப்பித்தேன். முதல் முயற்சியிலேயே ப்ரிலிம்ஸ் தேர்வில் வெற்றி பெற்று விட்டேன். மெய்ன்ஸ் தேர்வு எழுதுவதற்குக் குறுகிய காலமே இருந்ததால் பதற்றமாக இருந்தது. தேர்வுக்கு அதிகம் படிக்கவும், நன்றாக எழுதவும் வேண்டும். கடந்த 7 வருடங்களாக மருத்துவராகப் பணியாற்றி வந்ததால், அதிகம் எழுதும் பழக்கமே இல்லாமல் இருந்தது. கல்லூரியில் படித்தபோது இருந்த நினைவாற்றலும், அதை எழுத்தாக மாற்றக் கூடிய எழுத்தாற்றலும் மீண்டும் வருமா என்ற சந்தேகம் மனதில் இருந்தது. ஆனாலும், கடுமையாகப் பயிற்சி செய்து மெய்ன்ஸ் தேர்வுக்கு மூன்று மாதங்களில் தயாரானேன். அம்மா, அப்பா, கணவர் என எல்லோரும் பெரிதும் ஊக்கமளித்தனர். இந்த ஊக்கத்தினால்தான், தேர்வில் வெற்றிப் பெற முடிந்தது.
அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. நாம் சேவை செய்வதற்காகத்தான் இப்பணியில் இருக்கிறோம் என்ற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். தேர்வுக்குத் தயாராவதற்கு முன்பு, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் தயாராக வேண்டும். நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டு பக்குவப்பட்ட பின்னர் தேர்வு எழுதுவது பயனுள்ளதாக இருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் நடக்கக்கூடிய தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும். என்னுடைய 34-வது வயதில், முதலும் கடைசியுமான வாய்ப்பில் என்னால் வெற்றி பெற முடிந்தது. வயது குறைவாக இருந்தாலும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும்" என்று நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசினார் பிர்தௌஸ்.
இலவச பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கான Registration Link இதோ...
source https://www.vikatan.com/education/career/ananda-vikatan-one-day-free-workshop-for-upsc-aspirants
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக