Ad

வெள்ளி, 2 ஜூன், 2023

தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றியா..?

சிங்கப்பூர், ஜப்பானுக்கு 9 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுவிட்டுத் திரும்பியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘‘குறைந்தபட்சம் ரூ.3,000 கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம்’’ என்று சொன்ன தமிழக முதல்வர், ரூ.3,233 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளைப் பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறார்.

தமிழக முதல்வரின் இந்தப் பயணத்தைப் பாராட்ட வேண்டிய அதே சமயத் தில், சில கேள்விகள் எழுந்திருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. இந்தப் பயணத்தில் ஐ.பி நிறுவனம், டைசல் நிறுவனம், ஹோம்ரான் ஹெல்த்கேர் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுடன் ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் சொல்லி இருக்கிறார்.

கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து ரூ.8,000 கோடிக்கு மேல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டார். அதைவிட முதல்வர் ஸ்டாலின் தற்போது போட்டிருக்கும் ஒப்பந்தங்களின் தொகை சுமார் 5,000 கோடி குறைவாகவே இருக்கிறது.

8,000 கோடியோ... 3,233 கோடியோ... வெளிநாட்டு முதலீடுகள் பற்றி இப்படி ஆயிரக்கணக்கான கோடிகளுக்கு அறிவிப்புகள்தான் வருகின்றனவே தவிர, அந்த அறிவிப்பு எந்தளவுக்கு நிஜமாகி, அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கத் தொடங்கியது என்பது பற்றி பெரிய அளவில் தகவல்கள் எந்த ஆட்சியிலும் வெளியாவதில்லையே... அது ஏன்?

வெளிநாட்டில் இருந்து தொழில் முதலீடுகளைக் கொண்டுவருவது, அவசியம் செய்ய வேண்டிய விஷயம்தான். அதே சமயம், தமிழகத்தில் தொழில் சூழலை மேம்படுத்துவதில் இன்னும் அதிகமான அக்கறையைக் காட்டுவதும் அவசியம் அல்லவா? இன்றைய நிலையில், வெளிநாட்டு நிறுவனங்கள் நமது மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கான இடத்தைத் தர உதவி செய்வது, பிற அனுமதிகளை கூடிய விரைவில் தருவது, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது என்பது போன்ற விஷயங்களில் அதிக அக்கறை காட்டலாமே! தொழில் சூழல் நன்றாக இருக்கும்பட்சத்தில், வெளிநாட்டு நிறுவனங்கள் நமது மாநிலத்துக்கு வர மாட்டோம் என்று ஏன் சொல்லப்போகிறார்கள்? அவர்கள் வேறு மாநிலங்களைத் தேடிச் செல்வதில் இருந்தே நமது மாநிலத்தில் இன்னும் வசதிகளை எதிர்பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

வெளிநாட்டு முதலீடு குறித்த தகவல்களை அடிக்கடி வெளியிடுவதால் மட்டுமே, மக்கள் மனதில் இடம்பிடித்துவிட முடியாது. அவற்றின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் எந்தளவுக்கு உருவாகி, மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைச் சொல்வதன்மூலமே மக்கள் மனதில் இடம்பிடிக்க முடியும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு நடந்தால் சரி!

- ஆசிரியர்



source https://www.vikatan.com/crime/money/tamil-nadu-chief-minister-stalin-singapore-japan-investment-tour

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக