2015-ம் ஆண்டுக்குப் பிறகு, கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் இறப்புகள் ஐந்து மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலநிலை மாற்றத்தால் வருடத்தின் சராசரி வெயில் காலம் நீண்டு வருவதாகவும் ஆய்வு முடிவுகள் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றன.
எனவே, மே மாதத்தோடு கோடை கழன்று சென்றுவிடுமென நினைக்காமல் ஒவ்வொருவரும் வெயிலின் கடும் பாதிப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
அதிக பாதிப்புக்குள்ளாகும் பெண்கள்
ஆண்களைவிட பெண்களுக்குதான் கோடைக்காலம் சற்றே சிரமமான நிகழ்வு. உடையில் ஆரம்பித்து உடல்வலிமை வரை எல்லாவற்றிலும் ஆண்களிடம் இருந்து வேறுபட்டும், சில நேரங்களில் பலவீனப்பட்டும் நிற்கிறார்கள்.
பெண்களுக்கென்றே மற்றுமொரு பிரத்யேக பிரச்னை சமயலறை. வெப்பத்தில் உணவோடு சேர்ந்து சமைப்பவர்களும் வேகும் அறை. சமையல் வேலைகளை சீக்கிரம் முடித்துக் கொள்ளும் வகையில் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் கடுமையான உடல் செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்கேற்றவாறு நேரத்தையும் வேலைகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். வேலையோ, ஓய்வோ நல்ல காற்றோட்டமான அறைகளில் இருத்தல் வேண்டும்.
வெப்ப ரத்த வகை உயிரினங்கள்
உலகில் உள்ள உயிரினங்கள், உடல் வெப்பத்தைக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று குளிர் ரத்தவகை உயிரினங்கள், மற்றொன்று வெப்ப ரத்தவகை உயிரினங்கள். குளிர் ரத்த உயிரினங்களின் உடல் வெப்பநிலை எப்போதும் நிலையானதாக, ஒரே அளவில் இருக்காது.
வெளிப்புற சூழ்நிலையில் உள்ள வெப்பநிலையை ஒத்து இவ்வுயிரினங்களின் உடல் வெப்பநிலை மாறும். மீன், முதலை, தவளை, பல்லி வகைகள் போன்றவை குளிர் ரத்த உயிரினங்களுக்கு உதாரணங்கள். சில உயிரினங்கள் தங்களைச் சுற்றியுள்ள வெப்பநிலைக்கு ஏற்ப, தன் உடலின் நிறத்தை மாற்றி உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்திக் கொள்கின்றன. உதாரணம் பச்சோந்தி.
வெப்ப ரத்த வகை உயிரினங்கள், வெளிப்புற சூழ்நிலைக்கேற்ப வெப்பநிலையைத் தகவமைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றவையல்ல. பசு, புலி, சிங்கம், நாய் என பிற பாலூட்டிகள் அனைத்தும் இவ்வகையைச் சேர்ந்தவையை. பறவைகளும் இவ்வகையே. மனிதர்களும் வெப்ப ரத்த வகை உயிரினங்கள் எனும் வகைப்பாட்டில் அடங்கிப் போகின்றனர்.
உடலில் ஏற்படும் நீரிழப்பு
வெப்ப ரத்த வகை உயிரினங்களின் உடல் வெப்பநிலை ஒரே அளவில்தான் இருக்கும். வெளிப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப உடல் வெப்பம் மாறுபடாது. நம்முடைய உடல் வெப்ப அளவு எப்போதுமே 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் (37 டிகிரி செல்சியஸ்) அளவில் இருக்க வேண்டும்.
கொஞ்சம் கூடினாலும் காய்ச்சல் வந்துவிட்டது என்று சிகிச்சை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். வெயிலின் தாக்கத்தால் உடலின் வெப்பநிலை, மிகக் குறைந்த நேரத்தில் அளவுக்கு அதிகமாக உயரும் பட்சத்தில் அது உயிருக்கே உலை வைப்பதாக அமையக்கூடும்.
கோடைக்காலத்தில் ஏற்படும் உடல் அசதி, உடல் பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, தசை இறுக்கம், குமட்டல் போன்றவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில், அவை உடலின் நீரிழப்பினாலோ, அதீத வெப்பத்தினாலோ உடல் பாதிக்கப்படுவதைக் குறிப்பவை. இத்தகைய நிலைகளில் மருத்துவ உதவியை நாடவும் தயங்கக் கூடாது.
பெண்கள் முக்கியமாக கர்ப்பிணிகள், உடல் பலவீனமானவர்கள், இதய, சிறுநீரக மற்ற பிற உறுப்புகளில் நோய்கள், சர்க்கரை, உயர்ரத்த அழுத்தம், புற்றுநோய், காசநோய் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகள், முதியோர், மனநோயாளிகள், வெளி வேலை செய்பவர்கள் ஆகியோர் கொளுத்தும் வெயிலில் எளிதில் பாதிக்கப்படலாம்.
வெப்பத்தை சமன்படுத்தும் வியர்வை
உடலின் வெப்பத்தைக் கூடாமலும் குறையாமலும் பார்த்துக் கொள்ளும் அமைப்பும் செயல்பாடுகளும் நம் உடலில் இயற்கையாகவே அமைந்துள்ளன. அவைதான் வியர்வையும் சுவாசமும்.
வியர்வை... உடல் உள்ளே உள்ள நீரை எடுத்து, சருமத்தின் வழியாக நீர்த்துளிகளாய் வெளிப்படுத்துவதாகும். வியர்வை ஆவியாவதன் மூலம் சருமத்தின் மற்றும் உடலின் வெப்பம் கூடாமல் தவிர்க்கச் செய்கிறது. எனவே, உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம்.
இல்லையெனில், உடல் வெளி வெப்பத்தினின்று தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தடுமாறக்கூடும். இதற்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான செயல் என்னவெனில், அவ்வப்போது தேவையான அளவுக்கு நீர் அருந்துவதாகும்.
தண்ணீராக மட்டுமல்லாமல், பழச்சாறு, மோர், இளநீர், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களின் கூழ் போன்றவற்றையும் அருந்தலாம். வெளியில் செல்பவர்கள் எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது அவசியம். நீரின்றி அமையாது உலகு... மட்டுமல்ல, உடலும்கூட என்பதை உணர்ந்து செயல்படுவது சிறந்தது.
உணவு, உடையில் கவனம் தேவை
அடுத்து, சுவாசம்... உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு அளிப்பதோடு, உடலின் வெப்ப நிலையை சமன்படுத்தும் வேலையையும் சேர்த்தே செய்கிறது. இவை மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு தகவமைப்பு முறைகளையும் உடல் கொண்டுள்ளது.
உணவைப் பொறுத்தவரையில், எளிதாக செரிமானமாகக்கூடிய உணவுகள் சிறந்தவை. கடினமான உணவுகள் மந்தமாக உணர வைப்பதுடன், உடலின் வெப்ப நிலையை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன.
அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளும் இதே விளைவை ஏற்படுத்தக்கூடியவை. மேலும் நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், முள்ளங்கி, வெள்ளரி போன்ற காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி போன்ற பழங்கள் ஆகியவற்றையும் நேரடியாக உண்பதும் நல்லது. மது, குளிர்பானங்கள், புகைபிடித்தல், அதிகப்படியான தேநீர், காபி போன்றவற்றைத் தவிர்ப்பது. இவையெல்லாம் உடலில் நீர் இழப்பைத் தூண்டுபவை.
அடுத்து உடை. இதற்கு மிகமுக்கிய பங்கு உண்டு. ஏனெனில் உடலை, உடலின் சருமத்தை ஒட்டி இருக்கும் முதல் வெளி உலகம் அதுதான். முக்கியமாக உடை சருமத்திலிருந்து வெளிவரும் வியர்வையைத் தடை செய்யும் விதத்தில் இருக்கக் கூடாது. தளர்வான உடையாக இருப்பது வியர்வை தடையின்றி வெளியேற ஏதுவாக இருக்கும். பருத்தி போன்ற ஆடைகள் எளிதில் வியர்வையை உறிஞ்சி உலரச் செய்யும். வெளிர் நிற உடைகளை அணிவது நலம்.
வெளிர் நிறங்கள் வெப்பத்தை உள் நிறுத்தாமல் பிரதிபலிக்கக் கூடியவை. கறுப்பு போன்ற அடர்நிற உடைகள் வெப்பத்தை இழுத்து தன்னுள் நிறுத்திக்கொள்ளும் இயல்பை உடையவை. வெயில் காலங்களில் குடைகளைப் பயன்படுத்தும்போதும் நிறங்களின் இயல்பை மனதில் நிறுத்தி, பயன்படுத்துவது நல்லது.
கோடைக்காலத்தில் அனைவருமே தினமும் இரண்டு முறை குளித்தல் சருமப் பாதுகாப்புக்கு சிறந்தது. வெளியில் செல்லும்போது குடை, தொப்பி, கண்களுக்கு குளிர் கண்ணாடி ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
- மருத்துவர் த.ரா.செந்தில்
துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள்
திருப்பத்தூர் மாவட்டம்.
source https://www.vikatan.com/health/why-is-summer-getting-longer
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக