உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்த விவசாயத் துறையின் வளர்ச்சி முக்கிய காரணமாகும். விவசாய வளர்ச்சிக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது நீர்ப்பாசனம் ஆகும். 2022-23 காலகட்டத்தில் இந்தியாவில் நீர்ப்பாசனம் அதிகரித்துள்ளதாக நிதி ஆயோக் கூறுகிறது.
நிதி ஆயோக் அறிக்கையில், ``இந்தியாவில் மொத்தமாக சாகுபடியில் உள்ள 141 மில்லியன் ஹெக்டேரில், தோராயமாக 73 மில்லியன் ஹெக்டேர் அல்லது 52% சாகுபடி நிலங்கள் நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றுள்ளது.
2016-ல் 41% விவசாய பரப்பு நீர்ப்பாசனம் பெற்றிருந்தது, அந்த அளவைவிட இப்போது நீர்ப்பாசன பரப்பு அதிகரித்துள்ளது.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வறண்ட நிலப் பகுதிகளில் நீர்ப்பாசனப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நீர்ப்பாசன பரப்பை விரிவுபடுத்துவதன்மூலம் வறண்ட கோடைக்காலம் மற்றும் பருவமழை மாற்றத்தால் அதிகரித்து வரும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
PMKSY-AIBP திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் 21 முன்னுரிமை நீர்ப்பாசனத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் 17 வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.
இதனால் மாநிலத்தின் ஒட்டுமொத்த நீர்ப்பாசனப் பரப்பில் 16% அதிகரித்தது. நாட்டின் மொத்த நீர் பயன்பாட்டில், விவசாய பயன்பாட்டுக்கு 80% வரை தேவையுள்ளது. அதாவது, ஆண்டுக்கு 700 பில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவையுள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் காரீஃப் அல்லது கோடையில் விதைக்கப்பட்ட பயிர்களின் தேவைக்கு நீர்ப்பாசனம் செய்வது அவசியமானது.
போதிய பருவமழை இல்லாவிட்டால் விவசாய வருமானம் பாதிக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கிராமப்புற பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதல் காரணமாகப் பருவமழை மாறுகிறது, அதனால் பருவம் மாறி மழை பெய்வதால் பயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
2018-19-ம் நிதியாண்டில், வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) மற்றும் அரசாங்கத்தின் கூட்டாண்மை மூலம் நுண்ணீர் பாசன நிதி (எம்ஐஎஃப்) நிறுவப்பட்டது. நுண்ணீர் பாசன முயற்சிகளுக்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் மாநிலங்களுக்கு உதவுவதற்காக 5,000 கோடி ரூபாய் நிதியுடன் MIF-ஐ மத்திய அரசு உருவாக்கியது.
நாட்டில் உள்ள விளை நிலங்களில் சுமார் 60% நீர்ப்பாசன வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது என ஜல் சக்தி அமைச்சகம் கூறுகிறது. நீரியல் மற்றும் புவியியல் கட்டுப்பாடுகள் காரணமாக சில பகுதிகளில் நீர்ப்பாசன வலையமைப்புகளை நிறுவுவது சாத்தியமில்லாமல் போகிறது. எனவே, சுமார் 40% சாகுபடி பரப்பு மழையை நம்பியே தொடர்ந்து இருக்கிறது என்பதையும், நாம் நினைவில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
source https://www.vikatan.com/agriculture/farming/irrigated-agricultural-land-has-increased-to-over-50-40-depends-on-rain
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக