Ad

வியாழன், 11 மே, 2023

Doctor Vikatan: அந்தரங்கப் பகுதியில் அதீத வறட்சி... குணப்படுத்த வழிகள் உண்டா?

Doctor Vikatan: என் வயது 52. கடந்த சில மாதங்களாக வெஜைனா பகுதியில் அதீத வறட்சியை உணர்கிறேன். திடீரென ஏற்பட்ட இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்? இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா? வெஜைனா பகுதியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல் அறுவை சிகிச்சை மருத்துவருமான சந்தியா வாசன்.

மகப்பேறு & அழகியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சந்தியா வாசன் | சென்னை

வெஜைனா பகுதியில் ஏற்படும் வறட்சியானது 90 சதவிகிதப் பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்தில் தான் வரும். மெனோபாஸ் காலத்தில் பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவு குறையத் தொடங்கும். குறிப்பாக ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறையும்போது வெஜைனா பகுதியில் வறட்சியை உணர்வார்கள்.

இந்த வறட்சியைத் தவிர்க்க, வெஜைனா பகுதியை வெந்நீரில் கழுவக்கூடாது. அது வறட்சியை இன்னும் அதிகமாக்கும். தவிர அந்தப் பகுதியில் கிருமிநாசினியோ, தேங்காய் எண்ணெயோ, வேறு எதுவுமோ உபயோகித்து சுத்தப்படுத்தக் கூடாது. வெஜைனா பகுதியை சுத்தப்படுத்தவென இன்று பிரத்யேக வாஷ் கிடைக்கிறது. அதை உபயோகிக்கலாம். சாதாரண தண்ணீரில்தான் சுத்தப்படுத்த வேண்டும்.

மருத்துவரை அணுகி, உங்களுக்கேற்ற வெஜைனல் லூப்ரிகன்ட் பற்றி தெரிந்து கொண்டு உபயோகிக்கலாம். முகத்துக்கு மாய்ஸ்ச்சரைசர் உபயோகிப்பதுபோலத்தான், வெஜைனா பகுதிக்கு லூப்ரிகன்ட் உபயோகிப்பதும். இந்த லூப்ரிகன்ட்டுகள் பிறப்புறுப்புப் பகுதியை வறண்டுபோகாமல் வைத்திருக்கும். பூப்பெய்தியதில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் இதை உபயோகிக்கலாம். தினமும் இருமுறை உபயோகிக்கலாம்.

வெஜைனா பகுதியின் ஆரோக்கியம் என்பது மிகமிக முக்கியமானது. பல பெண்களும் போதிய விழிப்புணர்வு இல்லாமல், சோப் உபயோகித்து அந்தப் பகுதியைச் சுத்தம் செய்வார்கள். அப்படிச் செய்வதால் அந்தப் பகுதியின் இயற்கையான ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, இன்ஃபெக்ஷன் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்ஃபெக்ஷனை தடுக்கிறேன் என்ற பெயரில் வெஜைனா பகுதியில் கிருமி நாசினிகளை உபயோகிப்பார்கள். உப்புத் தண்ணீரில் கழுவுவார்கள். இதெல்லாம் அந்தப் பகுதியின் ஆரோக்கியத்தை மேலும் பாதிக்கும்.

வெஜைனா

வறட்சியைப் போக்க சிலர் தேங்காய் எண்ணெய் உபயோகிக்கிறார்கள். அதுவும் தவறு. அதீத சுத்தமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, உள்ளாடைகளை கிருமிநாசினி கொண்டு துவைப்பதெல்லாம் கூடாது. குளித்து முடித்ததும், கழிவறை பயன்படுத்தி முடித்ததும் அந்தரங்க உறுப்புகளின் ஈரம்போகத் துடைத்துவிட்டுதான் உள்ளாடைகளை அணிய வேண்டும். தளர்வான உள்ளாடைகளாக இருக்க வேண்டியது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/women/doctor-vikatan-extreme-dryness-in-private-area-are-there-ways-to-cure-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக