Ad

வியாழன், 11 மே, 2023

'துர்பாக்கியம், சாபக்கேடு' - ஆளுநர் ஆர்.என்.ரவியை விளாசிய வைகோ

ம.தி.மு.க., மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் கட்டியுள்ள திருமண மண்டபத்தை திறந்து வைக்க, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும், அவரின் மகன் துரை வைகோவும் திருச்சிக்கு வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் வைகோ செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, "ம.தி.மு.க., அமைப்புத் தேர்தல் 80 சதவிகிதம் முடிந்துவிட்டது. எல்லாம் சுமுகமாக, ஒற்றுமையாக நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை அமைப்புகள் இல்லாத இடத்திலும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. ம.தி.மு.க., புதிய ஊக்கம் கொண்டு வளர ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் ம.தி.மு.க., பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

வைகோ

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை இல்லாத ஒரு துர்பாக்கியம், சாபக்கேடு இப்போது இருக்கக்கூடிய ஆளுநர் ஆர்.என் ரவி தான். அவர் தனக்கு இல்லாத அதிகாரங்களை தானே எடுத்துக் கொண்டு, அவரே ஆட்சி நடத்துவதைப் போல செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியானது, இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக இருக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனை எல்லோரும் பாராட்டுகின்ற நேரத்தில், ஆளுநர் குறுக்கே புகுந்து உளறிக் கொண்டிருக்கிறார்.

ஆளுனரின் எந்த வார்த்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் இந்துத்துவா ஏஜென்டாக செயல்பட விரும்பினால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம். ஆளுநர் ஆளுநராக நடந்து கொள்ளவில்லை. அவர் பா.ஜ.க.வின் ஏஜென்ட் ஆக செயல்பட்டு வருகிறார். இது போன்ற நிலை இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதே இல்லை. இந்த தான்தோன்றிப் போக்கு சரியல்ல . ஆளுநர் அவரது பதவியில் நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட தமிழக முதலமைச்சர் எல்லா விதமான யோசனையும் செய்து செயல்படுத்துகிறார். எது நல்லதோ அதை அவர் செய்து வருகிறார் . எல்லா துறைகளும் சிறப்பாக இருக்கும் வகையில், திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார். மக்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/vaiko-slams-governor-in-trichy-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக