Ad

ஞாயிறு, 14 மே, 2023

‘எங்க அடையாளமே நெய் ரோஸ்ட்தான்!’ - திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பலரும், தரிசனத்தை முடித்துவிட்டு நேராக பார்த்தசாரதி விலாஸிற்கு ஒரு விசிட் அடிக்காமல் திரும்புவதில்லை.

50 ரூபாய்க்கு சுடச்சுட முறுகலான நெய் ரோஸ்ட், 20 ரூபாய்க்கு மிருதுவான சாம்பார் வடை என சுவையிலும், விலையிலும் தனித்து நிற்கும் பார்த்தசாரதி விலாஸுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. காரசாரமாக இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியோர் வரை எல்லோரும் சாப்பிடும் வகையில் பக்குவமாகத் தயாரித்துப் பரிமாறுகிறார்கள். தன்னுடைய 80-வது வயதிலும் தரம் குறையாமல் தனியொரு அடையாளத்தை வைத்துள்ள பார்த்தசாரதி விலாஸுக்கு, மழை பொழிந்த ஒரு காலை வேளையில் கிளம்பினோம். சிம்பிளான கடையின் பெயர்ப் பலகை, சுவர் நிறைய சாமி படங்கள், மர டேபிள் – நாற்காலி என ஹோட்டலுக்குள் நுழையும்போதே அந்தச் சூழல் நம்மை கடந்த காலத்திற்கு இழுத்துச் சென்றது.

கல்லாவில் உட்கார்ந்திருந்த உரிமையாளர் வைத்தியநாதனிடம் பேசினோம்.

திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ்

``ஒரு முதலாளிக்கு நல்ல வேலைக்காரனும், அகிலாண்டேஸ்வரியின் அனுக்கிரகமும் இருந்ததுன்னா, அவன் எங்கயோ போயிடுவான். அந்த இரண்டும் எனக்குக் கிடைச்சதாலதான், இன்னைக்கு இந்த ஹோட்டல் இந்த அளவுக்கு பெருசா வளர்ந்திருக்கு. எங்களுடைய பூர்வீகம் பாலக்காடு. என் அப்பா அனந்த நாராயண அய்யர், 18 வயசுல தமிழ்நாட்டுக்கு வந்து ஹோட்டல்ல வேலை பார்க்க ஆரம்பிச்சாங்க. அவருக்கு சொந்தமா கடை வைக்கணும்னு ஆசை வந்ததும், 1943-ல் இங்கிருந்து 10 கடை தள்ளி சின்னதா பார்த்தசாரதி விலாஸ் ஹோட்டலை ஆரம்பிச்சாரு. அப்பாவோட கைப்பக்குவத்தில் கடையில நல்ல வியாபாரம் ஆக ஆரம்பிச்சது. 20 வருஷத்துக்குப் பிறகு, 1963-ல் இந்த இடத்தை சொந்தமா வாங்கி பெருசா ஹோட்டல் போட்டாங்க.

அப்பா, ஹோட்டல் தொழில்ல சாதிக்கணும்னு தீவிரமாக இருந்ததால, அவரோட 51-வது வயசுலதான் கல்யாணமே செஞ்சிக்கிட்டாரு. அப்பாவுக்கு வயசானதால, நான் 1980-ல பி.காம் படிச்சு முடிச்சதும் அவருக்கு உதவியாக ஹோட்டல் வேலையைப் பார்க்க ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல எனக்கும் ஹோட்டல் வேலையில் பெரிய ஆர்வம் வந்துடுச்சு.

2001-ல் உடல்நிலை சரியில்லாம அப்பா காலமாகிவிட்டார். அதன்பிறகு அப்பாவோட பாரம்பரியத்தை அப்படியே கெட்டியாப் பிடிச்சு, நான்தான் இந்த பார்த்தசாரதி விலாஸை நடத்திக்கிட்டு இருக்கேன்'' என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``எங்க கடையோட வாடிக்கையாளர்கள் வயித்துக்கு எந்தப் பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னு தோசை மாவுல சோடா உப்பு சேர்க்காததுல ஆரம்பிச்சு, அஜினோமோட்டோ, கலர் என எதையுமே நாங்க சேர்க்கிறது இல்லை. எங்க சாப்பாட்டோட சுவையில் நாங்க ரொம்ப கவனமாக இருக்கோம். அதனால்தான் இன்னைக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வராங்க. காலையில 5.15-க்குக் கடையைத் திறக்குறப்ப எங்ககிட்ட சுடச்சுட ரவா பொங்கல் கிடைக்கும். அதுக்கு செம டிமாண்ட். ஒரு மணி நேரத்திலேயே எல்லாம் வித்திடும். அதுபோக இட்லி, வடை, சாம்பார் வடை, நெய் ரோஸ்ட், பூரின்னு காலையில 11 மணி வரைக்கும் கிடைக்கும். எங்க கடையில ஒன்லி டிபன்தான். அதனால 11 மணிக்குக் கடையை மூடிட்டு மறுபடியும் மதியம் 3 மணிக்குக் கடையைத் திறந்து இரவு 9 மணி வரை நடத்துவோம்.

சாயங்கால நேரத்துல சப்பாத்தி, நாண், பன்னீர் பட்டர் மசாலாவும் கிடைக்கும். ஆனா, எங்க கடையோட அடையாளமே நாங்க மொறு மொறுன்னு கொடுக்கிற நெய் ரோஸ்ட்தான். 50 ரூபாய்க்கு எங்களை மாதிரி சுவையான நெய் ரோஸ்ட்டை திருச்சியில் யாருமே கொடுக்கலை.

திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ்

நயமான உளுத்தம் பருப்பையும், தரமான அரிசியையும் சேர்த்து அரைத்த தோசை மாவில், வெண்ணெயை வாங்கி நாங்களே காய்ச்சி எடுத்த நெய்யை ஊத்தி, மொறு மொறுன்னு நெய் ரோஸ்ட் கொடுக்குறோம். எல்லாரும் எங்களோட நெய் ரோஸ்ட்டை சாப்பிட்டுட்டு, ‘சூப்பர்…சூப்பர்’ன்னு சொல்லிச் சொல்லியே, எங்க நெய் ரோஸ்ட்டுக்கு ‘சூப்பர்’ன்னே பேர் வந்துடுச்சு. இன்னைக்கு எங்க கடைக்கு வர்ற கஸ்டமர்ஸ், ‘மொறுமொறுன்னு ஒரு சூப்பர் கொடுங்க’ன்னுதான் சொல்றாங்க.

இன்னைக்கு 100 ரூபாய்க்கு கம்மியா எந்த ஹோட்டல்லேயும் நெய் ரோஸ்ட் இல்ல. அப்படியிருக்க, எங்களோட 50 ரூபாய் நெய் ரோஸ்ட்டை மக்கள் விரும்பிச் சாப்பிடுறாங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு 45 பைசாவில் இருந்து எங்க கடையில நெய் ரோஸ்ட் கொடுத்தோம். கடந்த ஆறு வருஷமா விலையேத்தாம 50 ரூபாய்க்கே கொடுத்திட்டு இருக்கோம். அதேமாதிரி சாம்பார் வடை 20 ரூபாய்தான். காபி 15 ரூபாய்தான். குடும்பமாக வர்றவங்க கம்மியான விலை இருக்கறதால, திருப்தியா சாப்பிட்டுட்டுப் போறாங்க.

Iவைத்தியநாதன்

ஒரு கிலோ அரிசிக்குக் கால் கிலோ உளுந்து சேர்த்து நாங்க தோசை மாவு ஆட்டுறோம். உளுந்து முக்கால் மணி நேரத்துக்கு மேல ஊற வைக்கக் கூடாது. மாவை அரைச்சதும் எதையும் கலக்காமல் 3 மணி நேரத்துக்குப் பின்னாடி தோசை ஊத்துறோம். அதேமாதிரி வடைக்கு மாவை ஆட்டியதும் உடனே எண்ணெயில் பொரிச்சு எடுக்கணும். அப்பதான் வடை மொறு மொறுன்னு வரும்.

எங்க வாடிக்கையாளர்கள் உடலுக்கு எங்களுடைய உணவு எந்த சிரமத்தையும் கொடுத்திடக் கூடாதுங்கறதுல மிகவும் கவனமா இருக்கோம். அதேபோல அன்னன்னைக்குக் காய்கறி வாங்குறோம். சாம்பாருக்கும் நாங்க எந்த விதமான பொடியையும் சேர்க்கிறதில்லை. மல்லி, வெந்தயம், மிளகாய், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு எல்லாத்தையும் வறுத்து அரைச்ச பொடியைத்தான் பயன்படுத்துறோம். இதெல்லாம் போக இட்லி மிளகாய்ப் பொடி, சாம்பார்ப் பொடி, ரசப் பொடி, பருப்புப் பொடி, தேங்காய் கார சாதப் பொடி போன்றவற்றையும் நாங்களே தயாரிச்சு விற்பனைக்கு வச்சிருக்கோம்.

திருவானைக்காவல் பார்த்தசாரதி விலாஸ்

1965 காலகட்டத்துல காமராஜர் அய்யா எங்க ஹோட்டல்ல வந்து சாப்பிட்டுட்டுப் போனதாக என் அப்பா சொல்லியிருக்காங்க. அதேபோல, சமீபத்தில்கூட நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், சின்னி ஜெயந்த் எல்லாம் வந்து சாப்பிட்டுட்டுப் போனாங்க. இன்னைக்கும் எங்க கடையில சாப்பிடுற கஸ்டமர்ஸ் பலரும் ‘எங்க ஊர்ல வந்து ஒரு கடையைப் போடுங்க’ன்னு சொல்றாங்க. ஆனா, இருக்க இந்த ஒரு கடையைச் சிறப்பாக, எந்தக் குறையும் இல்லாம நடத்தினாலே போதும்னு நான் நினைக்கிறேன்.

நிறைய பேர் சாப்பிட்டுட்டு திருப்தியா நல்ல டேஸ்ட், கட்டுப்படியாகும் விலைன்னு சொல்றப்ப, எனக்கு மனசு அவ்ளோ சந்தோஷமா இருக்கும். அப்பா 2001-ல் காலமானார். அடுத்த கொஞ்ச நாள்ல எங்க ஹோட்டலைப் பற்றி ஆனந்த விகடன்ல சின்னதா ஒரு கார்ட்டூன் போட்டிருந்தாங்க. அதுதான் எங்க கடைக்குப் பெரிய வெளிச்சத்தைக் கொடுத்தது. அதுக்குப் பின்னாடிதான் எங்க ஹோட்டல் எல்லாருக்கும் தெரியவந்து ரொம்ப பிரபலம் ஆனது. இன்னைக்கு திருச்சியில் பார்த்தசாரதி விலாஸ் ஹோட்டலுக்கு இருக்க மரியாதையையும், இந்தப் புகழ் எல்லாத்தையும் அப்பா பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

ஆத்மார்த்தமே ஒரு தொழிலுக்கு ஆதாயம்!



source https://www.vikatan.com/food/recipes/trichy-tiruvanaikoil-parthasarathy-vilas

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக