Ad

வியாழன், 11 மே, 2023

`உண்மையான மதிப்பெண்தான் என்ன?’- தமிழில் 138; 514 மதிப்பெண் பெற்றும் தோல்வி குறித்து மாணவி புகார் மனு

தமிழ் பாடத்துக்கு 138 (!) மதிப்பெண் உட்பட மொத்தம் 514 மதிப்பெண்கள் வழங்கி, தோல்வியடைந்ததாக மதிப்பெண் பட்டியல் வெளியானதால், சம்பந்தப்பட்ட மாணவி குழப்பமடைந்துள்ள சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியான ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில், திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்திருந்ததை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் பல மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து ஆச்சர்யம் ஏற்படுத்தியுள்ளார்கள்.

ஆர்த்தி

மதுரை மாவட்டத்தில் ப்ளஸ் டூ தேர்வில் 95.84 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தனக்குக் குழப்பமான மதிப்பெண் பட்டியல் வந்துள்ளதாக ஆர்த்தி என்ற மாணவி புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே சூரக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மனைவி ஆர்த்தி, கடந்த 2021-ம் ஆண்டில் ப்ளஸ் ஒன் படித்த நிலையில் குடும்பச்சூழல் காரணமாக திருமணம் செய்ததால், படிப்பை தொடர முடியவில்லை.

கல்வி பாதிக்கக்கூடாது என்பதால், தனியாக பயிற்சி எடுத்து இந்தாண்டு ப்ளஸ் டூ-வை தனித்தேர்வாக எழுதினார். ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஆன்லைனில் அவ்ருடைய தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தமிழில் 100-க்கு 138, ஆங்கிலத்தில் 100-க்கு 92, கணிதத்தில் 100-க்கு 56, இயற்பியலில் 100-க்கு 75, வேதியியலில் 100-க்கு 71, உயர்கணிதத்தில் 100-க்கு 82 மதிப்பெண்கள் பெற்றதாக வந்த மதிப்பெண் பட்டியலில், நான்கு பாடங்களில் தோல்வி என்றும் முடிவு வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதிர்ச்சியடைந்த ஆர்த்தி, ஆன்லைன் மதிப்பெண் பட்டியலை எடுத்துக்கொண்டு திருப்பரங்குன்றம் தேவஸ்தான பள்ளியில் காண்பித்தபோது உரிய விளக்கம் அளிக்காமல் இருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

மதிப்பெண் பட்டியல்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்த்தி, ``தமிழ் பாடத்திற்கு எனக்கு 138 மதிப்பெண்கள் அளித்துள்ளனர். நான் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் என்னுடைய உண்மையான மதிப்பெண்களை தெரிந்தால் மட்டுமே உயர் கல்வியில் பயில முடியும், அல்லது மீண்டும் பொதுத்தேர்வு எழுத முடியும். ஆனால், குழப்பத்தில் ஆழ்த்துவது போன்ற முடிவுகள் வெளியாகி இருப்பது எனக்கு வேதனையை அளித்துள்ளது. அதுமட்டுமன்றி 600 க்கு 514 மதிப்பெண் அளித்துள்ள நிலையில் நான்கு பாடங்களில் தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் மிகவும் வேதனையில் உள்ளேன்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் கேட்டதற்கு "இதுகுறித்து மேலே ரிப்போர்ட் அனுப்பியுள்ளோம். முழுமையான மதிப்பெண் பட்டியல் வந்ததும் அடுத்த கட்டமாக முடிவு செய்வோம்" என்றனர்.

மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால், ஒவ்வொரு மதிப்பெண்ணையும் உன்னிப்பாக கவனித்து கணக்கிட வேண்டிய பொதுத்தேர்வுத்துறை அலுவலர்கள் தேர்வு முடிவில் அலட்சியமாக தவறு செய்யலாமா?



source https://www.vikatan.com/education/school-education/wrong-mark-sheet-issued-to-madurai-student

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக