Ad

புதன், 8 மார்ச், 2023

``திமுக ஆட்சிக்கு எதிராக சதி; முதல்வர் சொன்னது உண்மைதான்” - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மகளிர் தினம் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இதில் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ``ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் 10-ஆம் தேதி சென்னையில் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொள்ள இருக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் என்னிடம் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன்.

கேக் ஊட்டி விடும் எம்.எல்.ஏ.இளங்கோவன்.

கழிவுநீர் பிரச்னை, சாலை வசதி உள்ளி்ட்ட பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், `தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சதி நடக்கிறது’ என்று கூறியுள்ளார். அவர் கூறியிருப்பது உண்மைதான். பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வளர முடியாது என்பதால் அவர்கள் பல்வேறு சதிகளை செய்து தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள். ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்து, இல்லாத பிரச்னைகளை தூண்டி விட்டு புதிய பிரச்னைகளை எழுப்பி தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுவதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எந்த ஆபத்தும் இன்றி பாதுகாப்புடன் உள்ளனர். அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் தங்கி வேலை பணிபுரிவதன் மூலம் தொழில் நடத்துபவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளனர். தமிழ்நாட்டில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. எனவே தமிழக மக்கள் பா.ஜ.க.வின் சதியை முறியடிப்பார்கள். இதுபோன்ற பொய்யான வதந்திகளை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வட மாநிலத்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. சீமான் - அண்ணாமலை போன்றோரின் கருத்துகளை மக்கள் நம்பமாட்டார்கள். அதற்கு மக்கள் பலியாகவும் மாட்டார்கள்.

கேக் வெட்டும் எம்.எல்.ஏ.இளங்கோவன்

ஈரோடு மாவட்டத்தில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரை கடலில் கலக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு ஆராய்ந்து  கொண்டு இருக்கிறது. ஈரோட்டில் போக்குவரத்து நெரிசலை போக்க, மேட்டூர் ரோடு வரை மேம்பாலம் அமைக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கனிமார்க்கெட் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிக வளாகத்துக்கு மிக அதிகமான வாடகை நிர்ணயம் செய்துள்ளதால் சிறு வியாபாரிகளால் அங்கு கடை எடுத்து நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் ஜவுளி வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும்.
எனது வீடு உள்பட ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏராளமான குடியிருப்புகள் பட்டா இல்லாமல் உள்ளன. மக்கள் வசிக்கும் பல்வேறு குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக அமைச்சர் முத்துசாமியுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான சட்டப்பேரவை அலுவலகம் ரூ. 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்தப் பணி நிறைவு பெற்றதும் எம்.எல்.ஏ. அலுவலகம் அங்கு செயல்படத் தொடங்கும்” என்றார்.

ஆர்ப்பாட்டம்

``’நீண்ட நாள்களாக காங்கிரஸ் கட்சிக்காக உழைத்திருப்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், சென்னை சத்தியமூர்த்தி பவனில் அழுதபடி பேட்டியளித்தாரே” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த இளங்கோவன், ``வயிற்றுவலி இருந்த காரணத்தால், மக்கள்ராஜன் சத்தியமூர்த்தி பவனில் அழுதார்” என்றார் கிண்டலாக. இதைதொடர்ந்து எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/evks-ilangovan-says-bjp-conspiracy-to-dissolve-dmk-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக