Ad

ஞாயிறு, 5 மார்ச், 2023

சத்தியமங்கலம்: காட்டு யானை தாக்கி திமுக பிரமுகர் உட்பட இருவர் பலி!

சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டங்கூட்டமாக வசிக்கின்றன. காளி திம்பம் வனச்சாலை, கடம்பூர் வனச்சாலையையொட்டி பகல் நேரத்திலேயே யானைகள் சுற்றித் திரிவதை பார்க்கலாம். இந்த வனச்சாலையின் வழியாக வாகனங்களில் செல்வோரை காட்டு யானைகள் தாக்கும் சம்பவம் அவ்வப்போது நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது.

நேற்று மதியம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியிலுள்ள குன்றி மலை கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க.வைச் சேர்ந்த சத்தி வடக்கு ஒன்றியப் பொருளாளர் பொம்மே கவுடர் (60) தன் இரு சக்கர வாகனத்தில் குன்றியிலிருந்து மாக்கம்பாளையம் செல்வதற்காக வனப்பகுதியில் உள்ள கரடு முரடான மண் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

யானைகள்

அப்போது வனப்பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டு யானை அவ்வழியே சென்ற பொம்மே கவுடரை கண்டதும் ஆக்ரோஷத்தில் அதிவேகமாக துரத்திச் சென்றது. பதற்றத்தில் நிலை தடுமாறி தன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பொம்மே கவுடர் எழுந்து தப்பியோட முயற்சித்தார். அதற்குள் அவரை நெருங்கிய யானை தன் தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது.

அப்போது அந்த வழியே இன்னொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபருடன் வந்த குன்றி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்துமாரி (57) என்பவர் பொம்மே கவுடரை யானை தாக்குவதை கண்டு அச்சமடைந்தார். அதனால் வாகனத்தை திருப்பிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். இதைக் கண்ட அந்த காட்டு யானை அவர்களது வாகனத்தையும் துரத்தியது. ஒரு கட்டத்தில் பைக்கில் இருந்து இறங்கி ஓட இருவரும் முயற்சித்தனர். அப்போதுு சித்துமாரியை தும்பிக்கையால் தூக்கி, கீழே போட்டு மிதித்தது. அவருடன் வந்த வாலிபர் மட்டும் அங்கிருந்து தப்பினார்.

திமுக பிரமுகர் பொம்மே கவுடர்

யானை தாக்கியதில் பொம்மே கவுடர், சித்துமாரி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தகவல் அறிந்த கடம்பூர் சரக வனத்துறையினரும், கடம்பூர் போலீஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று யானை தாக்கி உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத வனத்துறை அதிகாரி ஒருவர், ``வனப்பகுதியில் யானைகள் நிற்பது தெரிந்தால் அதன் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும். காட்டு யானைகள் சில நேரங்களில் மூர்க்கமாக இருக்கும். அதை அறியாமல் அதன் அருகே சென்றால், நம்மைத் தாக்க வருவதாகக் கருதி அருகே செல்வோரை துரத்தி தாக்க முயற்சிக்கும்.

சாலையோரம் நிற்கும் யானைக்கூட்டம்

எனவே வனப்பகுதி வழியே இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் யானைகள் நிற்பதைக் கண்டால் அந்த யானை அங்கிருந்து கடந்து செல்லும் வரை பொறுமையாக காத்திருந்த பின்னரே செல்ல வேண்டும். யானையை நோக்கி சத்தமிட்டாலோ, அதற்கு இடையூறு ஏற்படுத்தினாலோ பார்வையாளர்களை துரத்த வாய்ப்பிருக்கிறது. யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். முதற்கட்ட நிவாரணத் தொகையாக திங்கள்கிழமை ரூ. 50,000 வீதம் இருவரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

ஒரே நேரத்தில் இருவரை யானை மிதித்து கொன்ற சம்பவம் கடம்பூர் மலைப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/environment/two-killed-in-wild-elephant-attack-in-sathyamangalam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக