Ad

வெள்ளி, 8 ஜூலை, 2022

எடப்பாடிக்கு நெருக்கடி தர கொடநாடு விவகாரத்தைக் கையிலெடுத்த பன்னீர் தரப்பு! - முடிவுதான் என்ன?

ஜெயலலிதாவின் அடையாளமாக இருந்த கொடநாடு பங்களாவில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலிருந்தபோது கொலை, கொள்ளை நடந்து நாட்டையே உலுக்கியது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் ஓப்பனாகவே பேசினர். அதேபோல, கொடநாடு கொள்ளை, கொலை மர்மங்களை தி.மு.க ஆட்சி அமைந்ததும் விசாரிப்போம் என்று தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

கொடநாடு வழக்கு

அதன்படி, ஆட்சி அமைந்ததும் கொடநாடு விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை விசாரணையை வேகப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்துக்கு வெளியே அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ``அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் இது'' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கூற, "மடியில் கனமிருந்தால்தான் வழியில் பயம் இருக்கும்'' என்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுக்க என்று இந்த விவகாரம் சூடுபிடித்தது.

அதேபோல, கட்சிக்குள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகளுக்கிடையே உரசல் ஏற்படும்போதெல்லாம் கொடநாடு விவகாரத்தை ஓ.பி.எஸ் தரப்பு சமூக வலைதளங்களில் கொளுத்திப்போடுவதும் அவ்வப்போது நடந்துவந்தன. இதற்கிடையே, கொடநாடு விவகாரத்தை தி.மு.க அரசு ஆர்வம் காட்டுவதைக் குறைத்தது.

அதிமுக

கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி முதல் அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகி, கைகலப்பும் அரங்கேறி, தற்போது நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளாக யுத்தம் நடைபெற்றுவருகிறது. தீர்ப்புகளும் ஒன்றன் பின் ஒன்றாக எடப்பாடிக்குச் சாதகமாக வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கண்ணன் என்பவரிடம் போலீஸார் கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் வைத்து இரண்டு நாள்கள் விசாரணை நடத்தியதால், மீண்டும் கொடநாடு விவகாரம் பேசுபொருளானது.

அதன்படி, ஓபிஎஸ்-ஸின் இளைய மகனான ஜெயபிரதீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நீதி வேண்டும்! எங்களின் குடும்ப தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

ஓபிஎஸ். - இபிஎஸ்

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழ்நாடு மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு தமிழ்நாடு அரசை அஇஅதிமுக இயக்கத்தின் உண்மைத் தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும், வருத்தத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு எடப்பாடி தரப்பிலிருந்து மிகக் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது ஒற்றைத் தலைமை விவகாரத்துக்குள் கூடுதல் மசாலாவைத் தூவிவிட்டது.

அதேபோல, எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கவே கொடநாடு விவகாரத்தை அரசு மூலம் ஓபிஎஸ் தரப்பு கிளறிவிட்டதாக எடப்பாடி தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது குறித்து ஓ.பி.எஸ் தரப்பு நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, "கொடநாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கச் சொல்லி நாங்கள் கூறினால், எடப்பாடி தரப்பு முண்டியடித்து எதிர்வினையாற்றுகிறது. அவர்கள் தவறு செய்யவில்லையென்றால், அம்மா வாழ்ந்த கோயில், கொடநாட்டில் கொள்ளை, கொலைச் சம்பவத்துக்கு ஏன் எங்களுக்கு எதிராகப் பேச வேண்டும்?

ஓபிஎஸ்

அரசுக்கு அவர்கள் அழுத்தம் கொடுக்கவேண்டியதுதானே... இவை எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். இதிலிருந்தே அவர்களின் முகமூடி அவிழ்ந்துவிட்டது. கொடநாடு விவகாரத்தில் அரசு தற்போது சிலரை விசாரித்துவருகிறது. விசாரணை வேகத்தை அதிகரிக்கவே, ஓபிஎஸ் மகன் அரசுக்குக் கோரிக்கை வைத்தார். இதில் எந்த உள்நோக்கமுமில்லை" என்றனர்.

இது குறித்து எடப்பாடி தரப்பு மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். "கொடநாடு விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காகவே தி.மு.க அரசு பயன்படுத்துகிறது. திட்டமிட்டே எடப்பாடியாரைச் சிக்க முனைகிறது. இதில் இப்போது ஓ.பி.எஸ் தரப்பும் இணைந்திருக்கிறது. தி.மு.க-வுடனான அவர்களது மறைமுக உறவு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. தற்போது எங்களின் முழு நோக்கமும் பொதுக்குழுவைத் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்பதுதான். கொடநாடு வழக்கு மட்டுமல்ல... எத்தனை வழக்குகள் வந்தாலும் அண்ணன் எடப்பாடியார் அ.தி.மு.க பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர், அனைத்தையும் வென்று காட்டுவார்" என்றனர் அதீத நம்பிக்கையுடன்.

பொள்ளாச்சி ஜெயராமன்

இது குறித்து சமீபத்தில் பொள்ளாச்சி ஜெயராமனிடம், “கொடநாடு கொலை வழக்கு தன்னைச் சுற்றி வளைப்பதால்தான், தலைமைப் பதவியை அடைய இ.பி.எஸ் அவசரப்படுகிறார் என்று கூறப்படுகிறதே...” என்று கேட்டிருந்தோம்.

“இது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. கொடநாடு விவகாரத்துக்கும், ஒற்றைத் தலைமைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இ.பி.எஸ் கொடநாடு கொள்ளைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்தால், அரசு நடவடிக்கை எடுக்கட்டும். ஆதாரம் இருந்தால், அவர்கள் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்?” என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-ops-side-took-up-the-kodanadu-issue-to-put-pressure-on-edappadi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக