Ad

வெள்ளி, 22 ஜூலை, 2022

தொல்லுயிர் படிமங்கள்... வயதை இப்படித்தான் கண்டுபிடிக்கிறார்கள்!

பெரம்பலூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காரை. இந்த கிராமத்தில் வெள்ளைக் களிமண் பாளம் பாளமாக அதிகளவில் கிடைக்கிறது. இங்குள்ள வெள்ளை களிமண்ணில் தாவர தொல்லுயிர் படிமங்கள் அதிகமாக பதிந்துள்ளன.

இந்த தாவர தொல்லுயிர் படிமங்களை வெளியே எடுப்பது ஒரு கலை. அதிர்ஷ்டவசமாக இந்த களிமண் பல அடுக்குகளாக உள்ளது. கிட்டத்தட்ட இந்த அடுக்குகள் ஒரு புத்தகத்தில் உள்ள காகிதங்கள் போன்றது. நாம் ஒரு அடுக்கை கவனமாகப் புத்தகத்தின் பக்கத்தைப் புரட்டுவது போல் பிரித்தால், உள்ளே 20 கோடி ஆண்டுகள் பழமையான தாவர தொல்லுயிர் படிமங்களைப் பார்க்கலாம். ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது பக்கம் பக்கமாகப் புரட்டுகிறோம். இங்கேயும் அதே போல் சுண்ணாம்பு களிமண் அடுக்கை, அடுக்கடுக்காகப் பிரித்து உள்ளே இருக்கும் பழமையான தாவர தொல்லுயிர் படிமங்களை ஆவணப்படுத்தலாம்.

பெரம்பலூர் ஆட்சியர் வெங்கடப்பிரியாவிடம் தொல்லுயிர் படிமம் ஒன்றை கொடுத்த போது.

இங்குக் கிடைக்கும் தாவர தொல்லுயிர் படிமங்கள் உலக பிரபலமானது. காரையில் ஒரு மணி நேரம் தேடினால் ஒன்று அல்லது இரண்டு தாவரங்களின் படிமம் எப்படியும் கிடைக்கும். என்னிடம் இந்த வகை தொல்லுயிர் படிமங்கள் பல உள்ளன. ஒருமுறை இவ்வாறு சேகரித்த தாவரங்களின் படிமங்களை முகநூலில் நான் பகிர்ந்தேன். அதைப் பார்த்த நிறைய வெளிநாட்டு அறிஞர்கள் ஆராய்ச்சி செய்ய தங்களது விருப்பத்தை தெரிவித்தனர். இவர்கள்தான் இந்த தாவர படிமங்களை சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கணித்தனர்.

இதில் வேதனை என்னவென்றால் சிமெண்ட் தொழிற்சாலைகளால் இந்த கிராமத்தில் உள்ள வெள்ளைக் களிமண் பாளம் பாளமாக வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் காரையில் வெள்ளைக் களிமண் படிவம் அழிந்துவிடும் சூழல் உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ஜி.வி.ஆர்.பிரசாத் என்பவர் அப்பகுதியில் பல சுறா பற்களைக் கண்டுபிடித்துள்ளார். இப்பகுதியில் உள்ள சுறா மீனின் ஒரு பல் ஒரு அங்குல அளவில் இருக்கும். அவரிடம் கைநிறைய சுறா பற்கள் உள்ளன. சிறிய சுறா பற்கள், அம்மோனைட்டுகள் போன்ற உயிரினங்களின் புதைபடிமங்கள் இப்பகுதியில் அதிகமாக இருப்பதால், அந்தப் பகுதி இவ்வுயிரிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்க வேண்டும் என்று நான் கணிக்கிறேன். நானும் அந்த பகுதியில் சுறா பல் ஒன்றைக் கண்டெடுத்தேன்.

அரியலூரில் இரண்டு தினங்கள் அலுவலக நிமித்தமாக தங்க வேண்டியதிருந்தது. முதல்நாள் என் வேலையை நான் சில மணி நேரத்தில் முடித்துவிட்டேன். வேலை முடிந்ததும் நேரம் போகவில்லை.

தொல்லுயிர் படிமங்கள்

இந்த ஊரில் என்ன சிறப்பு எனத் தேட ஆரம்பித்தேன். இந்த பகுதியில் நிறைய தொல்லுயிர் படிமங்கள் இருக்கும் என்று சொன்னார்கள். உடனே ஒரு தொல்லுயிர் படிமத்தையாவது பார்க்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதற்காக ஒரு சிமெண்ட் தொழிற்சாலையின் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தைப் பார்க்கச் சென்றேன். சுரங்கத்தின் வாசலிலேயே எனக்கு நிறைய தொல்லுயிர் படிமங்கள் கிடைத்தன. நான் அதற்கு முன் தொல்லுயிர் படிமங்களைப் பார்த்ததில்லை. ஆனால் உயிர் தொழில் நுட்பத்துறையில் சுமார் 30 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்த அனுபவத்தில் எவையெல்லாம் ஒரு உயிரியின் வடிவில் உள்ளதோ அவற்றையெல்லாம் சேகரித்தேன். சுமார் 30 வகை தொல்லுயிர் படிமங்கள் சிக்கியது.

எனக்கு நடக்கப் பிடிக்கும். என் உடல்நிலைக்கு இது தேவையும் கூட. அதனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடக்க அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தேன். பேச்சுத்துணைக்காக என்னுடன் ஒரு மாணவனையும் அழைத்துச் செல்வது வழக்கம்.

காலை ஆறுமணி முதல் மாலை ஆறுமணி வரை காலாற நடப்போம். நிறைய தொல்லுயிர் படிமங்கள் கிடைத்தன. வயலின் வரப்பில் பல அபூர்வ தொல்லுயிர் படிமங்கள் கிடைத்தன. இது வரை மொத்தம் 700 கிலோமீட்டர் தொலைவிற்கும் மேலாக இந்த இரு மாவட்டப் பகுதிகளில் நடந்திருப்போம். இதனால் சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட தொல்லுயிர் படிமங்களை சேகரிக்க முடிந்தது.

தொல்லுயிர் படிமங்களை ஆர்வமுடன் சேகரித்து வரும் மாணவி அஸ்வதா பிஜு

தொல்லுயிர் படிமங்களின் வயதை எப்படி கண்டறிகின்றனர் ?

தொல்லியல்துறையில் கார்பன் 14 தொழில் நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இறந்த தாவர மற்றும் பிற உயிரிகள் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடமுடியும். இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகபட்சமாக 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உயிரிகளின் வயதைக் கணக்கிடலாம். இதற்கும் பழமையானவற்றிற்கு இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த முடியாது. மாறாக, தொல்லுயிர் படிமங்களின் வயதை யுரேனியம் 238 ஐசோடோப்பு மற்றும் ஈயம் 206 ஆகியவற்றின் அளவை கணக்கிட்டுத்தான் இந்த உயிரிகள் வாழ்ந்த காலத்தைக் கண்டறிய முடிகிறது.

தொடர்ந்து தொல்லுயிர் படிமங்களை அறிவோம்.



source https://www.vikatan.com/news/environment/fossils-this-is-how-they-find-age

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக