Ad

வெள்ளி, 29 ஜூலை, 2022

ஒன் பை டூ

பரந்தாமன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.

“அர்த்தமற்ற கேள்வி. தமிழிசை இங்கே இந்தித் திணிப்பே நடக்கவில்லை என்கிறாரா... இன்றளவும் மத்திய அரசின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்குக்கூட, திட்டங்களின் பெயர் இந்தியில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய அரசு மீண்டும் மீண்டும் இந்தியில்தான் பதில் அனுப்பிக்கொண்டிருக்கிறது. மாநில மொழிகளில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்போதும்கூட வங்கிகளிலுள்ள படிவங்களில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. நாடாளுமன்றங்களில் 15 மொழிகளை மொழிபெயர்ப்பதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. இப்படி மத்திய அரசு ஏதாவது ஒரு வழியில் இந்தியைத் திணித்துக் கொண்டும், கட்டாயமாக்கிக்கொண்டும்தான் இருக்கிறது. தேசியமொழி என்று இல்லாத ஒரு மொழியை இவர்களின் தேவைக்காகத் தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். தேசிய கல்விக் கொள்கை, நவோதயா பள்ளி என்று ஏதாவது ஒரு வழியில் இந்தியைக் கொண்டுவர வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். சம்ஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை ஒப்பிட்டால், மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி மிகவும் குறைவு. இப்படி, திணிப்புகளையும் பாரபட்சங்களையும் வைத்துக்கொண்டு ‘இந்தித் திணிப்பு இல்லை’ என்று சொல்வதற்கு எப்படி அவர்களால் முடிகிறது... சகோதரி தமிழிசை, அவரின் தந்தை குமரி அனந்தனின் மகளாகத் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு இருக்கிறதா இல்லையா என்பதைச் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும். ஆளுநராக இருக்கும் அவர், தனது பதவி சுயலாபத்துக்காக இப்படியெல்லாம் பேசுவது நாகரிகம் கிடையாது.”

பரந்தாமன்
நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.

“உண்மையை உடைத்துச் சொல்லியிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில், கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும்தான் மாநில மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்வியாகட்டும், பணியாகட்டும்... அனைத்துத் தேர்வுகளும் மாநில மொழிகளில் நடத்தப்படுவதை நாம் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தியை அதிகாரபூர்வ அலுவல் மொழியாக அறிவித்த பிறகு, அந்த மொழியை மேம்படுத்த தனித்துறையை ஏற்படுத்தியது, தி.மு.க கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிதான். இந்தி மொழி வளர்ச்சிக்கான குழுவில் தி.மு.க உறுப்பினர்கள் யாரும் இருந்தது கிடையாது என்று தி.மு.க-வினரால் மறுக்க முடியுமா... காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில், மாநில மொழிகளுக்கு இடம் கிடையாது. ஆனால், பா.ஜ.க கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய வரலாற்றில் வேறு எந்தப் பிரதமரும் இதுவரை செய்திராத வகையில், தமிழ் மொழி, தமிழ் அறிஞர்களின் பெருமை குறித்தும், தமிழ் மொழியின் பெருமை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதற்காகவும் எங்கு சென்றாலும் தமிழிலும், தமிழ் மொழி குறித்தும் பேசிக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. நவோதயா பள்ளிகளில் தாய்மொழிவழிக் கல்விதான் கற்பிக்கப்படும் என நீதிமன்றத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும், திணிக்கப்படாத இந்தியை வைத்து இவர்கள் அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற அக்கறை பா.ஜ.க-வினருக்கு மட்டுமே மிக அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.”



source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-tamilisai-comment-of-hindi-imposition

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக