ஒரு நாட்டின் தொன்மைக்கும் அந்த நாட்டு மக்கள் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பு உண்டு. உணவுகளின் வகைகளில் இந்தியாவும் சீனாவும் ஒன்றுக்கு ஒன்று சலைத்ததில்லை. சீனாவிலும் உணவுகளின் வகைகள் ஏராளம். இது மாதிரி நிறைய உணவுவகைகளைக் கொண்ட நாடுகள் வேறு இல்லை எனலாம். மேலும் இந்தியாவும் சீனாவும் நீண்ட வரலாற்றைக் கொண்ட நாடுகள்.
இந்தியாவைப் பொருத்தமட்டில் உணவுப்பழக்கம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. ஏன்? உணவு வகைகள் ஊருக்கு ஊர் மாறுபடுகிறது என்றால் மிகையாகாது. குறிப்பாகத் திருநெல்வேலி லாலா கடை இனிப்பு மற்றும் கார திண்பண்ட வகைகள் தமிழகத்தில் பெயர் பெற்றவை. சமையலில் திருநெல்வேலி அவியல் மற்றும் சொதிக்குப் பெயர்பெற்றது.
சொதி, அவியல் மற்றும் இஞ்சி துவையலுடன் கூடிய சாப்பாடு பாரம்பரியமிக்க உணவு மற்றும் திருநெல்வேலியில் இது ஒரு பெருமைமிக்க மதிய உணவாகும்.
பாரம்பரிய உணவு
சொதி தேங்காய்ப் பாலில் செய்தது. அவியல் பல காய்களை நுட்பத்துடன் நறுக்கி, தேங்காய்த் துருவல் நிறையக் கலந்து சமைத்தது. இத்துடன் இணைவது இஞ்சித் துவையல்.
தேவையான அளவு கொழுப்பு உடலுக்கு மிகவும் அவசியம். தேங்காய்ப் பாலில் செய்த சொதியில் நிறையக் கொழுப்புச் சத்து உள்ளது. இந்த வகை கொழுப்பை saturated fat என அழைப்பார்கள். இது இரத்தத்தில் கொலஸ்டிராலை அதிகப்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்தவல்லது.
இந்த நிலையில் சோற்றில் இருப்பது முற்றிலும் மாவுப் பொருள். இந்த மாவுப் பொருளும் தேங்காய்ப் பாலில் செய்த சொதியில் நிறைந்துள்ள கொழுப்புச் சத்தும் இணைந்தால் கிடைக்கும் சக்தி இளவயதினருக்குப் பொருத்தமானதுதான். ஆனால் ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு இந்த சக்திமிக்க உணவு ஏற்புடையதாக இருக்காது. இதற்குக் காரணம் நம்மிடையே ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்தில் ஒன்பது பேருக்குச் சர்க்கரை நோய் உள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது . இந்த நிலையில் இவ்வளவு மாவுப் பொருளும் கொழுப்பும் நிறைந்த சொதி விருந்து ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உகந்ததாக இருக்கவாய்ப்பில்லை எனத் தோன்றும்.
ஆனால்சொதியுடன் இஞ்சி துவையல் பரிமாறப்படுகிறது. இஞ்சி இரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க வல்லது. மேலும் இஞ்சி சாப்பிட்டால் இரத்த கொழுப்பின் அளவும் கட்டுக்குள் வருகிறது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது .
இஞ்சியின் இந்த மகிமையை 2015-ம் ஆண்டுதான் அறிவியல் பூர்வமாகச் சர்க்கரை நோயாளிகளுக்குக் கொடுத்துக் கண்டறியப்பட்டுள்ளது ! அதே நேரத்தில் சொதியுடன் இஞ்சித் துவையல் சேர்த்துச் சாப்பிடுவது திருநெல்வேலியில் கால காலமாக நடந்து வருகிறது. சொதி சாப்பாட்டால் ஏற்றப்படும் இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த இஞ்சிதான் சரியாக இருக்கும் எனத் திருநெல்வேலி மக்களுக்கு முன்னதாகவே தெரிந்திருக்கிறது.
இந்த நுட்பம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? எப்போது கண்டறியப்பட்டது? இந்த கேள்விகளுக்கு என்னிடம் தற்போது பதிலில்லை. ஆனால் இந்த உணவுப் பழக்கம் பல நூற்றாண்டுக்கு முந்தையது என நான் உறுதியாக நம்புகிறேன்.
நவீன மருத்துவ முன்னேற்றத்தையும் திருநெல்வேலி பாரம்பரிய உணவையும் ஒரு சேர பார்க்கும் போது வியப்பாக உள்ளது !!
இஞ்சி
சொதியுடன் இஞ்சி சேர்த்துச் சாப்பிடுவது பல ஆய்வுகள் செய்து கண்டறியப்பட்ட நவீன மருத்துவ தொழில்நுட்பத்திற்கு இணையானது. திருநெல்வேலியில் பல நூற்றாண்டுக்கு முன்னதாகவே அறிவியல் பூர்வமாகச் சிறந்த ஒரு உணவு முறையை வடிவமைத்துள்ளனர். சொதியுடன் இஞ்சித் துவையல் இணைந்திருப்பதைக் கண்டு பூரிப்படைகிறேன் மற்றும் பெருமையடைகிறேன்.
மேலும் வாரம் ஒரு முறை இஞ்சிச் சாறு அருந்தும் வழக்கம் தென் தமிழகத்தில் பரவலாக உள்ளது. நல்ல விருந்து சாப்பாட்டுக்குப் பின் ஒரு இஞ்சி மிட்டாய் சாப்பிட்டால் போதும் நன்றாக ஜீரணமாகும் என்ற நம்பிக்கையும் தென்மாவட்டத்தில் உள்ளது. இது வெறும் நம்பிக்கை மட்டும் இல்லை அறிவியல் பூர்வமான உண்மை !!
இஞ்சி சாப்பிட்டால் இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவு கட்டுப்படுவதை திருநெல்வேலிக்காரர்கள் யாரும் கண்டறியவில்லை. மாறாக இரான் தலைநகரமான டெகரானில் உள்ள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் நபிசே கன்டோஷி ( Nafiseh Khondouzi) குழுவினர்தான் கண்டறிந்துள்ளனர். இது விளக்குவது என்னவென்றால் வளைகுடா நாடுகளிலும் இஞ்சி முக்கியமானதாக இருக்கிறது என்பதுதான்.
ஆவணப்படுத்த வேண்டும்
திருநெல்வேலி சித்தா மருத்துவர் மற்றும் பேராசிரியர் சுபாஸ் சந்திரனிடம் இஞ்சியின் இந்த மருத்துவ குணாதிசயங்கள் பற்றிப் கேட்டேன். அவர் இஞ்சி இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதும் சிறந்த அருமருந்து என தொன்மையான சித்தமருத்துவ குறிப்புகள் நிறைய உள்ளன என தெரிவித்தார். ஆனால் இந்த மருத்துவ குறிப்புகள் எதுவும் மருத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளாகவோ அல்லது காப்புரிமை ஆவணங்களாகவோ இல்லை என்றார்.
இந்த நிலையில் நவின அறிவியல் முன்னேற்றங்களைப் பற்றி படிக்கும் போது ஏதோ இரானிய ஆராய்ச்சியாளர் நபிசே கன்டோஷி குழுவினர்தான் முதன் முதலில் இதனை கண்டறிந்தாக அறிய முடிகிறது. ஆனால் நம் அரிய மற்றும் மகத்துவம் வாய்ந்த மருத்துவக் குறிப்புகள் ஓலை சுவடிகள் மற்றும் பழைய புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இவை சில தனி நபர்களின் வீடுகளிலும் மற்றும் சில நூலகங்களில் மட்டும் உள்ளது.
இதனை அறிவியல் சமுகம் முற்றுலும் ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தகைய மருத்துவக் குறிப்புகளை முறைப்படி சோதனை செய்து ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் காப்புரிமைகளாக எழுதி ஆவணப்படுத்த வேண்டும். இல்லை என்றால் இது மருத்துவ குறிப்புகள் மட்டுமேயன்றி கண்டுபிடிப்புகள் இல்லை என உலகநாடுகளால் நிராகரிக்கப்படும். மேலும் படிப்படியாக இந்த மருத்துவக் குறிப்புகள் கசிந்து பிற நாட்டவர்கள் ஆராய்ச்சி கட்டுரையாகவோ அல்லது காப்புரிமையாகவோ பதிவிட்டு அபகரித்துக் கொள்ளும் நிலையும் வரும்.
நோபல் பரிசு
இதுமாதிரி சென்ற வருடம் கெபடிடிஸ் (Hepatitis) பற்றிய ஆராய்ச்சிக்கு 2020 -ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த துறையிலும் நம் பாரம்பரிய மருத்துவமுறை தான் இன்றும் உலகைக் காத்து வருகிறது.
கெபடிடிஸ் (Hepatitis) என்பது கல்லீரலில் வரும் ஒருவகை வைரஸ்களால் ஏற்படும் நோய்யாகும். இவற்றை கெபடிடிஸ் A, B, C, மற்றும் D (Hepatitis A, B, C, and D) என மொத்தம் நான்கு வகைகள் உள்ளன.
கெபடிடிஸ் A வைரசின் மரபணு ஒரு இழை நேர்முக RNA துண்டால் ஆனது. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு சில வகை உடலுறவுகள் மூலம் வீரியத்துடன் பரவக்கூடியது. இந்த நோயைத் தடுக்க நல்ல தடுப்பூசி உள்ளது.
கெபடிடிஸ் B வைரசின் மரபணு இரண்டிழை வட்டவடிவ DNAவால் ஆனது. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இரத்தம், விந்து, போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவக்கூடியது. இந்த நோயைத் தடுக்கவும் நல்ல தடுப்பூசி உள்ளது.
கெபடிடிஸ் C வைரசின் மரபணு ஒரு இழை நேர்முக RNA துண்டாலானது. இது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இரத்தம் மூலம் பரவக்கூடியது தான் மற்றும் பயன்படுத்திய ஊசி, மற்ற மருத்துவ உபகரணங்களால் பரவக்கூடியது. இந்த நோயைத் தடுக்க தடுப்பூசி இல்லை.
கெபடிடிஸ் D வைரசின் மரபணு ஒரு எதிர் முக வட்டவடிவ RNAவால் ஆனது. இதுவும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு இரத்தம் மூலம் பரவக்கூடியது தான் மற்றும் பயன்படுத்திய ஊசி, மற்ற மருத்துவ உபகரணங்களால் பரவக்கூடியது தான். இந்த நோயைத் தடுக்கவும் தடுப்பூசி இல்லை.
மஞ்சள் காமாலை
1. ஹர்வி ஆல்டர் (Harvey J. Alter) ஒரு அமெரிக்கர். செப்டம்பர் 12, 1935ல் பிறந்தவர். இரத்தம் பிறரிடமிருந்து பெற்று உடலில் ஏற்றிக் கொள்ளுவதால் ஒரு வகை மஞ்சட்காமாலை பரவுவதை இவர் கண்டறிந்தார். இந்த சோதனைக்காக 1988ல் இவர் மனிதக் குரங்குகளைப் பயன்படுத்தினார். மேலும் இந்த நோய் ஒரு வகை வைரசால் வருகிறது என நிரூபித்தார்.
2. மைக்கேல் ஹவுன்டன் (Michael Houghton) 1949ல் இங்கிலாந்தில் பிறந்தவர். இவர் மஞ்சள் காமாலை நோயாளிகளின் உடலிலிருந்து இரத்த மாதிரிகளைச் சேகரித்து அதில் இருக்கும் வைரசைப் பிரித்து கண்டறிந்த ஆராய்ச்சியாளர்களில் மூத்தவர். இந்த வைரசை கெபடிடிஸ் C (Hepatitis C) வைரஸ் என அழைப்பார்கள். இவர்கள் மேலும் இந்த வைரசின் மரபணுவின் தகவல்களைக் கண்டறிந்தனர்.
3. சார்லஸ் ரயிஸ் (Charles Moen Rice) ஆகஸ்ட் 25, 1952ல் அமெரிக்காவில் பிறந்தார். இவர் மனித கல்லீரலின் ஒரு துண்டை எலியின் கல்லீரலுடன் இணைத்தார். இந்த எலியில் கெபடிடிஸ் C வைரசைச் செலுத்தி சோதனை செய்தார். இந்த சோதனை வைரஸ்க்கு மருந்து கண்டறிய மற்றும் இந்த வைரசின் பண்புகளைக் கண்டறியப் பயன்பட்டது.
இந்த கண்டுபிடிப்புகளுக்காக இவர்களுக்கு 2020-ம் ஆணாடுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மஞ்சட்காமாலை நோய்க்குச் சிறந்த மருந்து கீழாநெல்லி ஆகும். நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த மருந்தைப் பல நூற்றாண்டுகளாக மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகத் தமிழகத்தில் பயன்படுத்தி வருகின்றோம். கீழாநெல்லியின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலிருக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது இதைத்தவிர இந்த நோயிக்கு சிறந்த மருந்து எதுவுமில்லை.
நோய்க்கு மருந்து..
நம் நீண்ட வரலாறு சிறப்பு மிக்க மருத்துவ அறிவு நோபல் பரிசை விடவும் பெருமை வாய்ந்தது. இதன் வாயிலாக சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் S P தியாகராஜன் கீழாநெல்லியில் ஆய்வு செய்து இதன் நோய் முறிக்கும் பண்புகளைக் உறுதி செய்தார் மற்றும் மாத்திரை வடிவில் ஒரு மருந்தை உருவாக்கினார். இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமையும் பெற்றார் !
ஆனால் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை. இது என்ன நியாயம் எனவும் தெரியவில்லை. மேலே விளக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய்யின் காரணத்தைக் கண்டறிந்தனர். ஆனால் நம் பாரம்பரிய மருத்துவ முறையும் மற்றும் S P தியாகராஜன் அவர்களும் இந்த கொடிய நோயிலிருந்து உலக மக்களை காப்பாற்றியுள்ளனர். ஆனால் நோபல் பரிசு வழங்கப்பட்டவில்லை.
நோயை கண்டறிவதைவிட அதை குணப்படுத்தும் கண்டுபிடிப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என பாமரனுக்குக் கூட தெரியும். அதனால் நம் கீழா நெல்லியின் மருத்தவ அறிவு நோபல் பரிசை விடவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். சமாதானத்திற்கான நோபல் காந்திக்கு கொடுத்திருக்க வேண்டும். கிடைத்ததா? இல்லையே.. காந்தி நோபல் பரிசையும் விட மேன்மை பொருந்தியவர் என்பதுவும் உண்மை..
பேராசிரியர் SP தியாகராஜன் அவர்கள் தற்போது கோவையில் இயங்கிவரும் அவினாசிலிங்க பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றிவருகிறார்.
நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களும், நிறைய மருத்துவ ஆராய்ச்சி மையங்களும், அதிக அளவில் மருந்து பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும் உள்ளன. இருந்தும் புதுவிதமான மருந்துகள் கண்டுபிடிப்புகள் நம் நாட்டில் குதிரைக் கொம்புதான். இதற்கு காரணம் பல்கலைக்கழகங்களும், மருத்துவ ஆராய்ச்சி மையங்களுடன் இணைந்து பணியாற்றுவதில்லை, மருந்து பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் மருத்துவ ஆராய்ச்சி மையங்களுடனும் பல்கலைக் கழகங்களுடனும் இணைந்து பணியாற்றுவதில்லை. இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து செயல்பட்டாலே புது மருந்துகள் கண்டுபிடிப்புக்கள் நம் தாய் மண்ணில் சாத்தியமாகும்.
மேலும் ஒரு நாட்டின் தொழில் நுட்ப வலிமையே அந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என உணர்ந்து பேராசிரியர்களும், பல்கலைக்கழகங்களும், மருந்துவ நிறுவனங்களும், மருந்து பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகளும் பாரம்பரிய மருத்துவ அறிவை முறைப்படி ஆவணப்படுத்த ஒன்றுக்கொன்று இணைந்து வேலை பார்தல் மிகவும் இன்றியமையாதது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து முனைப்புடன் செயல்பட்டால் மருத்துவத்துறை மட்டுமின்றி பொருளாதாரத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
source https://www.vikatan.com/news/environment/food-medicine-and-other-countries-are-usurping-patents-what-should-be-done-properly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக