Ad

சனி, 16 ஜூலை, 2022

Doctor Vikatan: பல வருடங்களாகத் தொடரும் அரிசி தின்னும் பழக்கம்… ஆபத்தானதா?

என் வயது 27. எனக்கு பல வருடங்களாக அரிசி சாப்பிடும் பழக்கம் உள்ளது. தினமும் காலை, மாலை, இரவு என எப்போதும் பச்சையாக அரிசியை மெல்வது வழக்கமாக இருக்கிறது. இதை நிறுத்தச் சொல்லிப் பலரும் அறிவுரை செய்தும் என்னால் முடியவில்லை. அரிசி சாப்பிடுவது தவறான பழக்கமா? அது அனீமியாவை ஏற்படுத்துமா? இதை நிறுத்த என்ன வழி?

ரேச்சல் தீப்தி

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் ரேச்சல் தீப்தி.

உங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பழக்கம் பிகா (PICA ) எனப்படும். PICA என்பது கல், செங்கல், சாக்பீஸ், மண், பேப்பர் என உண்ணத்தகாத பொருட்களை உண்ணும் ஒரு பழக்கம். உங்களுக்கு இருக்கும் அரிசி சாப்பிடும் பழக்கமும் இந்த வகைதான்.

இப்படியொரு பழக்கம் உங்களுக்கு இருப்பது என்பது உடலில் ஏதோ சத்துக்குறைபாடு இருப்பதற்கான அடையாளம். இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் என ஏதோ ஒரு சத்துக் குறைபாட்டின் காரணமாகவே கண்ட பொருள்களையும் சாப்பிடத் தோன்றும். இந்தப் பழக்கம் ஆண்கள், பெண்கள் என யாருக்கும் வரலாம். குறிப்பாக ஆட்டிசம் குறைபாடும், அறிவாற்றல் சவாலும் உள்ள குழந்தைகளிடம் இது அதிகம் காணப்படும்.

Depression (Representational Image)

PICA என்பது தற்போது மனநல குறைபாடாகப் பார்க்கப்படுகிறது. ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்யும் ஓசிடி (obsessive-compulsive disorder) பாதிப்பு, ஸ்கீஸோபெர்னியா போன்ற பாதிப்புகள் PICA-வுக்கு காரணமாகலாம்.

பெற்றோரின் பிரிவு, புறக்கணிப்பு, குழந்தைப்பருவ வன்முறை, சிதறிய குடும்பச் சூழல், பெற்றோர்- குழந்தைகளுக்கு இடையில் சுமுக உறவின்மை போன்ற காரணங்களால் ஏற்படும் ஸ்ட்ரெஸ்கூட, PICA பாதிக்க காரணங்களாகலாம்.

உடலியல்ரீதியான காரணமும் இதற்கு இருக்கக்கூடும். அதாவது, கொக்கிப்புழு தொற்று இருப்பவர்களுக்கும் PICA பாதிக்கலாம். இவர்களுக்கு சருமம் நீல நிறத்தில், (குறிப்பாக வாயைச் சுற்றியுள்ள பகுதியில்) காணப்படும். உங்கள் விஷயத்தில் அது இல்லை என்று தெரிகிறது.

சிகிச்சைகள் உண்டா?

பாதிப்பப்பட்ட நபர் யார் என்பதைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும். உதாரணத்துக்கு... குழந்தையா, வளர்ச்சிக் குறைபாடுள்ளவரா, கர்ப்பிணியா, மனநல பாதிப்புள்ளவரா என்று பார்க்க வேண்டும். இவர்களுக்கு மனநல ரீதியாக, சூழல்ரீதியாக, குடும்ப உறுப்பினர்களின் அக்கறை உள்ளிட்ட பல வழிகளில் சிகிச்சை தேவைப்படும்.

Eating Disorder

முதல் வேலையாக சம்பந்தப்பட்ட நபர் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் அவரைப் பரிசோதித்து, தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, தாதுச்சத்துக் குறைபாடுகள் உள்ளனவா என்று உறுதிசெய்வார். அதற்கேற்ப சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார். உளவியல் அணுகுமுறையோடு, தெரபி, SSRIs (Selective Serotonin Reuptake Inhibitors) போன்ற மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.

உளவியல் ஆலோசகரை அணுகி, இந்தப் பழக்கம் குறித்து தெளிவு பெறலாம். இந்தப் பழக்கத்துக்கான மூல காரணம் தெரிந்தால் உங்களால் அதிலிருந்து விடுபட முடியும். தியானம் செய்வது, யோகா செய்வது, இசை கேட்பது, கூடவே உளவியல் சிகிச்சை போன்றவையும் உங்களுக்கு உதவலாம்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-does-eating-raw-rice-affect-health

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக