அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் நெல் கொள்முதல் செய்யப்படும்!’
-இப்படி ஓர் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுக் கால விவசாயிகளின் கோரிக்கையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதமும் இதற்கு அடிப்படைக் காரணம்.
இந்தியாவிலேயே, தமிழகம் முன் மாதிரியாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு வாழ்த்துகள். இந்த ஆண்டு, மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதிக்கு முன்பே தண்ணீர் திறக்கப்பட்டதால், சாகுபடி பணியையும் முன்னதாகவே விவசாயிகள் தொடங்கிவிட்டனர். ஆகையால், அறுவடையும் முன்கூட்டியே வரும். இதைக் கருத்தில் கொண்டுதான் தமிழக அரசு, மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைத்தது. அது தற்போது நல்ல அறிவிப்பாக வந்துள்ளது.
இதுபோல, இன்னும் சில அறிவிப்புகளையும் தமிழக விவசாயிகள் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.
நெல்லுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,000, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக விவசாயிகள் கேட்டு வருகிறார்கள். இரண்டு முறை வேளாண்மைக்குத் தனிபட்ஜெட் தாக்கல் செய்தும், இந்தக் கோரிக்கைகள் மட்டும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கின்றன.
ஆனால், பின்தங்கிய மாநிலம் என்று பார்க்கப்படும் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு குவிண்டல் நெல் ரூ.2,540, ஒரு டன் கரும்பு ரூ.3,550 என்று உரிய விலையைக் கொடுத்து விவசாயிகளை மகிழ்வித்து வருகிறார்கள். இதோடு மட்டும் நிற்கவில்லை; இயற்கை உரத் தயாரிப்புக்காக மாட்டுச் சாணத்தை அரசே கொள்முதல் செய்து நாட்டையே ஆச்சர்யப்படுத்தியது. இப்போது, மாட்டுச் சிறுநீரையும் விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது.
‘மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயி’ என்று தொலைநோக்கு கொள்கையை அறிவித்துள்ள தமிழக அரசாலும் இதை விட அதிகமாகச் சாதனைகள் படைக்க முடியும்; அதைத்தான் விவசாயிகளும் எதிர்பார்க்கிறார்கள்.
-ஆசிரியர்
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/analysis-about-paddy-procurement-started-coming-september-month
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக