Ad

ஞாயிறு, 31 ஜூலை, 2022

அன்பு வணக்கம்!

பண்டிகைக் காலம் வருவதற்கு இன்னும் சற்று காலம் இருக்கிறது. ஆனால், கார்/பைக் ஏரியாவில் இப்போதே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. தொடர்ச்சியாக கார்/பைக்ஸ் அறிமுகங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. மஹிந்திரா ஸ்கார்ப்பியோN, மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, ஹூண்டாய் டூஸான், ஆடி A8 L என பலதரப்பட்ட விலைகளில் பலதரப்பட்ட கார்கள் அறிமுகமாகியிருக்கின்றன. கார்களுக்குச் சற்றும் குறைவில்லாது டிவிஎஸ் ரோனின், பஜாஜ் பல்ஸர் N160, BMW S1000RR HP4 என 2 வீலர்களும் வரிசையாக அறிமுகமாகின.

இந்தக் கொண்டாட்டங்களோடு இன்னொரு கொண்டாட்டமும் நடந்தது. அது பள்ளி மாணவ - மாணவிகளுக்காக மோட்டார் விகடன் நடத்திய கார் டிசைனிங் பயிலரங்கம். நம் நாட்டில் கல்லூரிகளிலேயே, ஏன் பொறியியல் கல்லூரிகளில்கூட பயிற்றுவிக்கப்படாத Clay Modelling என்ற கலையைப் பள்ளி மாணவர்களுக்கு ஆயா டிசைன் அகாடமியின் தலைவரும், அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் தலைவருமான க.சத்தியசீலன் தலைமையிலான வல்லுநர்கள் நடத்தினார்கள். இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளின் கைவண்ணத்தில் காகிதத்தில் பிறந்த கார், களிமண் சிற்பமாக இடம் மாறி உயிர் பெற்றதைப் பார்ப்பது என்பது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. கலையின் மீதும் காரின் மீதும் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்குத் தன்னால் இயன்ற அளவு மோட்டார் விகடன் நிச்சயம் தொடர்ந்து வழிகாட்டும்.

கார் டிசைன் மீது மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பற்றியும், அந்த ஆர்வத்தை எப்படி வளர்த்தெடுப்பது என்பது பற்றியும் மோட்டார் விகடனுக்கு இருக்கும் எண்ணங்களை ஆட்டோமோட்டிவ் துறையில் முன்னணியில் இருக்கும் ஜாம்பவான்களோடும் நிபுணர்களோடும் பகிர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பும் மோட்டார் விகடனுக்குக் கிடைத்தது. CII எனப்படும் இந்தியத் தொழில்துறையினரின் கூட்டமைப்பு நடத்திய Automotive Innovation Summit என்ற மாபெரும் சந்திப்பில், Future Trends in Automotive Design - Consumer Perspective என்ற பொருளில் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், கலந்துரையாடவும் கிடைத்த வாய்ப்பு அது.

பொறியியல் கல்லூரிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் இடையே பாலம் அமைக்க மோட்டார் விகடன் முன்னெடுக்கும் முயற்சிகளை இந்த அமர்வில் பகிர்ந்து கொண்டபோது கிடைத்த பெரும் வரவேற்பு, உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

ஆசிரியர்



source https://www.vikatan.com/news/editorial/editor-page-9

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக