சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட 14,000 கத்திகளை டெல்லி போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும் இது சம்பந்தமாக 5 பேரை போலீஸார் கைதும் செய்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தடை செய்யப்பட்ட கத்திகளை தங்கள் இணையதளங்களில் விற்பனை செய்ததற்காக, ஈ-காமர்ஸ் தளங்களான ஃபிளிப்கார்ட், மீஷோ நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பாகாகவும் போலீஸ் தெரிவித்திருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து பேசிய டெல்லியின் தெற்கு மாவட்ட போலீஸ் அதிகாரி பெனிடா மேரி ஜெய்கர், ``சி.ஆர் பூங்காவில் உரிமை கோரப்படாத ஒரு பார்சலிலிருந்து, ராம்புரி கத்திகள் எனப்படும் 50 தடைசெய்யப்பட்ட, பட்டன்-ஆசிட்டிவேடட் கத்திகள் மீட்கப்பட்டன. பார்சலிலிருந்த பெயர் மற்றும் முகவரியை வைத்து, மாளவியா நகரில் முகமது சாஹல் என்பவருக்குச் சொந்தமான துணிக்கடைக்கு வந்த போலீஸார் 500க்கும் மேற்பட்ட சட்டவிரோத கத்திகளை கண்டெடுத்தனர். அதைத்தொடர்ந்து முகமது சாஹல், அவரின் ஊழியர் வாசிம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அதன்பின்னர் முகமது சாஹல் கொடுத்த தகவலின்படி முகமது யூசுப் என்பவருடன், சீனாவுக்கு கத்திகளுக்கு ஆர்டர் கொடுப்பவரான ஆஷிஷ் சாவ்லாவிடம் விசாரணை நடத்திய போலீஸார், அவரின் குடோனிலிருந்து 13,000க்கும் மேற்பட்ட கத்திகளை பறிமுதல் செய்தனர்.
இறுதியாக இதில் இறக்குமதியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்களின் உரிமையாளர் மயங்க் பப்பரை போலீஸ் கைது செய்தது. இதில் கைதான மயங்க் பப்பர், கடந்த ஆண்டில் 19,000 கத்திகளுக்கு ஆர்டர் செய்ததாகக் கூறினார்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில், சுங்க அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், எப்படி விற்பனை செய்தார்கள் என்பது குறித்து மீஷோ, ஃபிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகவும் போலீஸ் கூறியிருக்கிறது.
source https://www.vikatan.com/government-and-politics/crime/delhi-police-seize-14000-prohibited-knives-imported-from-china
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக