Ad

வெள்ளி, 22 ஜூலை, 2022

அரசுப் பள்ளிக்கு பின் வாசல் வழியாக சர்ப்ரைஸ் விசிட் அடித்த அன்பில் மகேஸ்! - நடந்தது என்ன?

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வழியில் ஆர்.எஸ்.மடையில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியின் முன்பக்க நுழைவாயில் வழியாக செல்லாமல், பின்பக்கம் வழியாக நுழைந்து வகுப்பறைக்குள் சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். அமைச்சர் வருவதை சற்றும் எதிர்பார்க்காத வகுப்பு ஆசிரியர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். பின்னர், `நீங்கள் வழக்கம் போல் வகுப்பை நடத்துங்கள்’ என கூறி மாணவர்களோடு, மாணவர்களாக அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனித்தார்.

பள்ளி குழந்தைகளுடன் அமைச்சர்

பள்ளி கல்வித் துறை அமைச்சர் வந்திருந்ததை அறிந்து அனைத்து ஆசிரியர்களும் வகுப்பறையில் பாடம் நடத்துவதை விடுத்து அமைச்சரை வரவேற்க வந்தனர். அப்போது `நீங்கள் பாடம் நடத்திக் கொண்டிருங்கள். நான் வகுப்பறைக்கு வந்து விசாரித்துக் கொள்கிறேன்’ என கூறி ஆசிரியர்களை அவரவர் வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வகுப்புகளுக்காக சென்று, மாணவர்களுடன் உரையாடினார். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பில் பாடம் நடத்தப்படுவதை ஆய்வு செய்த அவர், மாணவர்களிடம் ஸ்மார்ட் கிளாஸில் நடத்தப்பட்ட பாடம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அப்போது மாணவ மாணவிகளிடம் உங்களின் எதிர்கால கனவு என்ன என அவர் கேட்டபோது, பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்களாக ஆக வேண்டும் என தெரிவித்தனர்.

பள்ளி குழந்தைகளுடன் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பில் அமைச்சர்

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வகுப்பறைகளில் மாணவர்கள் அமர டேபிள் இல்லை அதற்கு ஏற்பாடு செய்து தரும்படி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக எம்.எல்‌.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்திடம் பள்ளிக்கு அடிப்படை தேவைகளை செய்து தரும்படி உத்தரவிட்டு அங்கிருந்து கிளம்ப தயாராகினர். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் அபிராமி, 'சார் சார் உங்களோட எங்க பள்ளி ஆசிரியர்கள் எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுக்கணும் ப்ளீஸ் நில்லுங்க சார் என கூறி, அனைத்து வகுப்புகளுக்கும் ஓடி ஓடி சென்று ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து வந்து அமைச்சருடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன்பின்னர் கீழக்கரையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அபிராமி நம்மிடம் பேசும்போது, ``பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எங்க ஸ்கூலுக்கு வருவாங்கனு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை சார், அதுவும் ஸ்கூல் மெயின் கேட் வழியா வராமல், பின்கேட் வழியா வந்திருக்காங்க. ஒவ்வொரு வகுப்புக்கு நேர்ல போய் மாணவர்கள் அனைவரையும் நல்ல என்கரேஜ் பண்ணாங்க. அதுமட்டுமில்லாமல் மாணவர்களோடு ஒண்ணா அமர்ந்து, அவங்க கிட்ட உற்சாகமா பேசி, ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கவனிச்சாங்க. ஆசிரியர்கள் எல்லார்கிட்டயும், `பள்ளிக்கு தேவை இருக்கா, உங்களுக்கு ஏதாவது பிரச்னை இருந்தா தைரியமா சொல்லுங்க’ என கனிவாக கேட்டாங்க. எங்களுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு” என உற்சாகம் பொங்கியபடி தெரிவித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/education/minister-of-school-education-inspection-of-government-school

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக