தமிழ்த்திரை இசையுலகில் குறுகிய காலத்தில் மிகப் பிரபலமாகிவிட்ட சித்ராவை திருவனந்தபுரம் நகரின் கிழக்குப் பகுதியான கரமனையில், ஜட்ஜ் ரோட்டின் இறுதியிலுள்ள அவருடைய எளிமையான வீட்டில் சந்தித்தோம்.
சிவப்பான வட்ட முகம், அதில் தவழும் புன்னகை, எளிமையான தோற்றம் - இவைதான் 22 வயது சித்ரா. நாம் சந்தித்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
''கழிஞ்ச வருஷத்துச் சிறந்த பாடகியாக கேரள கவர்ன்மென்ட் என்னை செலக்ட் பண்ணியிருக்கு. காலையில பேப்பரைப் பார்த்து விஷயத்தைத் தெரிந்துகொண்டேன்'' என்று பூரித்தார். சித்ரா முதன்முறையாக வாங்கப்போகும் பெரிய அவார்டு இதுதான்!
சித்ராவின் குடும்பம் அவர்கள் வசிக்கும் வீட்டைப் போலவே சின்னதுதான். அப்பா கிருஷ்ணன் திருவனந்தபுரம் பள்ளியன்றில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா சாந்தாவும் ஆசிரியை. அக்கா மீனா, கணவருடன் அமெரிக்காவில்! தம்பி மகேஷ், கல்லூரியில் படிக்கிறார். குடும்பமே இசையில் ஈடுபாடு உடையது. அப்பா ரேடியோவில் நிறைய இசை நிகழ்ச்சிகளும் அம்மா வீணைக் கச்சேரிகளும் நடத்தியிருக்கிறார்கள். அக்கா, கல்லூரியில் படிக்கும்போது லைட் மியூசிக் போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்.
சித்ரா 9-ம் வகுப்பில் படித்தபோது கேரள மாநில அனைத்துப் பள்ளிகளின் யூத் ஃபெஸ்டிவலில் பாடியதற்காக முதற்பரிசு கிடைக்கவே, அதன்பிறகு இசைமீது தீவிர ஈடுபாடு கொண்டார்.
பி.ஏ. பயில கல்லூரியில் சேர்ந்தவுடன், மத்திய அரசின் இசைப்படிப்புக்கான உதவித்தொகை இவருக்குக் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி ஓய்வு நேரங்களில் தனது பேராசிரியர் ஓமனக்குட்டி என்பவர் நடத்திவரும் இசைப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து இசை பயில ஆரம்பித்தார்.
ஓமனக்குட்டியின் இசைப்பயிற்சிப் பள்ளிக்கு அவ்வபோது வந்துபோகும் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான எம்.ஜி.கோபாலகிருஷ்ணனுக்கு சித்ராவின் குரலினிமை நம்பிக்கையைத் தரவே, தனது படத்தில் இரண்டு பாடல்களைப் பாடும் வாய்ப்பை சித்ராவுக்கு வழங்கினார். அதில் ஒன்று, ஜேசுதாஸூடன் டூயட்! ஜேசுதாஸூக்கும் சித்ராவின் ஆர்வமும் குரல் வளமும் பிடித்துப் போயிற்று. அவ்வளவுதான்! சித்ரா ஜேசுதாஸின் இசைக்குழுவில் சேர்க்கப்பட்டார். சினிமா வாய்ப்புகள் குவிந்தன. மலையாளத் திரை இசையுலகில் பிரகாசிக்கத் துவங்கினார்.
'பூவே பூச்சூட வா' மலையாளப் படத்தை டைரக்டர் பாசில் தமிழில் எடுத்தபோது, மலையாளப் படத்துக்காக சித்ரா பாடிய பாடல்கள் இளையராஜாவுக்குப் போட்டுக்காட்டப் பட்டன. மகிழ்ச்சியுடன் புருவத்தை உயர்த்திய இளையராஜா சித்ராவைத் தமிழில் அறிமுகப்படுத்த விரும்பினார். இப்போது சித்ராவின் பாடல்கள் 'செந்தமிழ் நாட்டின்' மூலைமுடுக்கெல்லாம் ஒலிப்பது தெரிந்த விஷயம்.
கேரள இசையுலகில் சித்ராவுக்குக் கிடைத்த வரவேற்பைவிட, தமிழ்ப் படவுலகில் சித்ராவுக்கு எக்கச்சக்க வரவேற்பு! மூன்று ஆண்டுகளில் 53 மலையாளப் படங்களில் பாடியிருந்த சித்ரா, 'பூவே பூச்சூட வா' மூலம் தமிழில் அறிமுகமான பிறகு, மிகக் குறுகிய பத்து மாத கால இடைவெளியில் 63 படங்களில் 86 பாடல்களைப் பாடி முடித்துள்ளார்.
நாவல்கள், பத்திரிகைகள் படிப்பது, பாடல்கள் கேட்பது இவைதான் சித்ராவின் பிரதான பொழுதுபோக்குகள்! தினசரி தூங்கப் போகிறபோது இரவு 11 மணி வரை ஆகிவிடும். இருந்தாலும், அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து சுறுசுறுப்பாகி, ஆறு மணி முதல் ஏழு மணி வரை பாடுவதற்கு உட்கார்ந்து விடுவாராம்.
ஐஸ்கிரீம், ஐஸ் வாட்டர்... மூச்! சித்ரா தொடுவதில்லை. 'சின்னக்குயில்' பாடல் ஹிட் ஆன பிறகு தமிழ் ரசிகர்கள் தன்னை 'சின்னக் குயில் சித்ரா' என்று அடைமொழி போட்டு அழைப்பதில், சித்ராவுக்குக் கொள்ளை மகிழ்ச்சி!
- டி.அருள்செழியன்
(16.03.1986 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
source https://www.vikatan.com/government-and-politics/cinema/playback-singer-chitras-exclusive
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக