கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் கிராமத்தில் இருக்கும் தனியார்ப் பள்ளியில் +2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்த நிலையில், அது கொலை என்றும் அதற்கு நீதி வேண்டும் என்று கூறி கடந்த 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்த கலவரத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். அதையடுத்து அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு 19-ம் தேதி முதல் விசாரணையும் தொடங்கியிருக்கிறது.
அந்த கவலரத்தின் எதிரொலியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஸ்ரீதர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் இருவரையும் பணியிடை மாற்றம் செய்து உத்தரவிட்டது உள்துறை செயலகம். அதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஷர்வண்குமார் ஜடாவத் நியமிக்கப்பட்டார். அதேபோல புதிய காவல் கண்காணிப்பாளராக சென்னை திருவல்லிக்கேணியில் துணை ஆணையராக இருந்த பகலவன் நியமிக்கப்பட்டார். இருவரும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், புதிய ஆட்சியராக ஷர்வண்குமார் ஜடாவத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தற்போதுள்ள சூழலில் எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதன் மூலம் சரியான சூழ்நிலை அமைய என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். மாணவி மரணம் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் ஆய்வு செய்து வருகிறது. மாணவி மரணம் மற்றும் கலவரம் தொடர்பாக நியாயமான விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியான நடவடிக்கை நாங்கள் எடுப்போம். உயிரிழந்த மாணவியின் உடலை பெறுவதற்கு அவரின் பெற்றோருக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை உணர்த்துவோம், அதேசமயம் அவர்களுக்கான நியாயம் உறுதி செய்யப்படும். மாணவியின் பெற்றோர் அவரின் குழந்தையின் உடலை பெற்று கொள்ள எங்கள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்கிறோம். ஒருவரின் வீட்டில் குழந்தைகளோ அல்லது வீட்டில் ஒருவர் உயிரிழந்துவிட்டால் அதன் வலி எப்படி என்பது நமக்கு தெரியும். அதற்கு எதையும் மாற்றாக கொண்டுவர முடியாது. எவ்வளவு ஆறுதல் கூறினாலும் அவர்களது இழப்பை ஈடுகட்ட முடியாது. மேலும் தற்போதுள்ள சூழ்நிலையை மாணவியின் பெற்றோர் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன். மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவியின் பெற்றோரிடம் பேசி வருகிறோம்” என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/kallakurichi-new-collector-talks-about-the-situation-after-riot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக