ஹரியானாவில் நுஹ் மாவட்டத்தில் டிஎஸ்பியாக இருந்தவர் சுரேந்தர் சிங் பிஸ்னோய். இம்மாவட்டத்தில் உள்ள பச்காவ் மலைப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாக சுரேந்தர் சிங்கிற்கு தகவல் கிடைத்தது. உடனே சுரேந்தர் சிங் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவருடன் 4 போலீஸாரும் சென்றனர். சட்டவிரோதமாக மணல் எடுத்து வந்த லாரியை நிறுத்தும்படி சுரேந்தர் சிங் சிக்னல் கொடுத்தார். ஆனால் லாரியை ஓட்டியவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சுரேந்தர் சிங் மீது லாரியை ஏற்றிவிட்டு சென்றுவிட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சுரேந்தர் சிங் உயிரிழந்தார். இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இச்சம்பவத்திற்கு பிறகு லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு அனைத்து இடத்திலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதில் குற்றவாளி பிடிபட்டான். பச்காவ் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் இக்கார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகுதான் இக்கார் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ``இக்கார் உண்மையில் லாரி டிரைவர் கிடையாது. லாரி கிளீனர் ஆவார். போலீஸ் அதிகாரி வண்டியில் வருவதை பார்த்தவுடன் மணல் ஏற்றிக்கொண்டிருந்த லாரி கிளீனர் வண்டியை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றார். வண்டியை நிறுத்தும்படி சுரேந்தர் சிங் சொல்லிப்பார்த்தார். ஆனால் அதை கேட்காமல் சுரேந்தர் சிங் மீது லாரியை ஏற்றிவிட்டு சென்றுவிட்டார்” எனக் கூடுதல் டிஜிபி சந்தீப் கிர்வார் தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரியை மணல் மாஃபியாக்கள் லாரி ஏற்றி கொலை செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரியானா முதல்வர் மனோகர் லால், ``மணல் மாஃபியாவால் படுகொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். அதோடு குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்கப்படும். மேலும் கொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி தியாகியாக கருதப்படுவார்” என்றும் தெரிவித்தார்.
மணல் மாஃபியாக்களால் கொலை செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சுரேந்தர் சிங் அடுத்த சில மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். ஹிசார் மாவட்டத்தில் உள்ள சரங்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் சிங் 1994-ம் ஆண்டு உதவி போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். 2014-ம் ஆண்டு வரை குருஷேத்ராவில் பணியாற்றிய சுரேந்தர் சிங் 2019-ம் ஆண்டுதான் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று சஹாபாத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த மாதம் தான் அங்கிருந்து நுஹ் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பணியிடமாற்றம் கிடைத்த ஒரு மாதத்திற்குள் மணல் மாஃபியாக்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை சம்பவத்தை தொடர்ந்து மணல் கடத்தலை தடுக்க மாநில போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/just-a-few-months-before-retirement-a-police-officer-who-went-to-catch-the-sand-mafia-was-murdered-by-a-lorry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக