Ad

வியாழன், 28 ஜூலை, 2022

Doctor Vikatan: தினமும் இரவில் இருமல் மருந்து... பல வருடப் பழக்கத்தில் இருந்து மீள வழி உண்டா?

என் தோழிக்கு 50 வயதாகிறது. அவருக்கு பல வருடங்களாக தினமும் இரவில் இருமல் மருந்து குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இருமலே இல்லாதநிலையிலும் தினமும் மருந்து குடிக்கிறார். அப்போதுதான் நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்கிறார். இந்தப் பழக்கம் ஆபத்தானதா... இதிலிருந்து அவரை மீட்க முடியுமா?

டாக்டர் சுபா சார்லஸ்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்...

தேவையின்றி தினமும் இருமல் மருந்தைப் பயன்படுத்தும் பழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. இது நிச்சயம் ஆபத்தான பழக்கம்தான். அந்த மருந்தில் உள்ள ஆன்டி அலர்ஜி தன்மை மற்றும் மூளையை அமைதிப்படுத்தி தூக்கத்தைத் தரும் தன்மையால், அதைப் பயன்படுத்தும் பழக்கம் பல வயதினரிடமும் இருப்பதைப் பார்க்கிறோம்.

இந்தப் பழக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று பிசிகல் டிபெண்டன்ஸ் (physical dependence) எனப்படும் உடல்ரீதியான சார்புநிலை. மற்றொன்று சைக்கலாஜிகல் டிபெண்டன்ஸ் (psychological dependence) எனப்படும் மனரீதியான சார்புநிலை. மதுப்பழக்கம் உள்ளவர்களை பிசிகல் டிபெண்டன்ஸ் வகைக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இருமல் மருந்து

அதாவது பல வருடங்களாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு கட்டத்தில் அது இல்லாமல் இயல்பாக இருக்க முடியாத நிலை ஏற்படும். அதாவது காலையில் எழுந்ததுமே மது குடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்வார்கள். அது இல்லாவிட்டால் கை.கால்கள் நடுங்குவது போலவும் இயல்பாக இருக்க முடியாதபடி உணர்வதாகவும் சொல்வார்கள்.

இருமல் மருந்து குடிக்கும் பழக்கத்திலும் இப்படித்தான் நடக்கும். அதாவது தினமும் இருமல் மருந்தைக் குடித்துப் பழகிவிட்ட நிலையில் ஒரு கட்டத்தில் அது இல்லாவிட்டால் தூங்கவே முடியாது அல்லது தூக்கம் தாமதமாவது போன்ற பிரச்னைகளை சந்திப்பார்கள்.

சைக்கலாஜிகல் டிபெண்டன்ஸ் என்பது ஒரு விஷயத்தை மனரீதியாக சார்ந்திருக்கும் நிலை. உதாரணத்திற்கு சிலருக்கு அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று, சத்து ஊசி போட்டுக் கொள்ளத் தோன்றும். உண்மையில் அவர்களுக்கு உடலில் சத்துக்குறைபாடே இருக்காது. ஆனாலும் வலியச் சென்று மருத்துவரிடம் அதைக் கேட்டுப் போட்டுக் கொள்வார்கள். இவர்களை பற்றி தெரிந்த மருத்துவர்கள் மருந்து ஏதும் இல்லாமல் வெறும் டிஸ்டில்டு வாட்டர் ஏற்றிய ஊசியை அவர்களுக்குச் செலுத்துவார்கள். அதிலேயே சம்பந்தப்பட்ட நபர் திருப்தி அடைந்து விடுவார். இருமல் மருந்துக்கு பதில் சுவையான வேறு திரவத்தை பாட்டிலில் நிரப்பிவைத்தாலும் அதை உணராமல் குடித்து திருப்தியடைபவர்கள் இந்த ரகம்தான்.

வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு அடுப்பை அணைப்பது, வீட்டைப் பூட்டுவது போன்ற வழக்கமான விஷயங்களைச் செய்வது போலவே இருமல் மருந்தைக் குடித்துவிட்டுத் தூங்குவதும் பலருக்கும் வாடிக்கையாகவே இருக்கும்.

இருமல் மருந்து

ஆரம்பத்தில் அரை மூடி, ஒரு மூடி மருந்தில் தொடங்கி போகப்போக அதன் அளவு கூடிக் கொண்டே போகும். ஒரு கட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் மருந்தைக் குடித்தாலும் தூக்கம் வரவில்லை என்ற நிலைக்கு சிலர் செல்வார்கள். அதைதான் பிசிகல் டிபெண்டன்ஸ் என்று குறிப்பிடுகிறோம். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் இத்தகைய பிசிகல் டிபெண்டன்ஸுக்ள் சிக்குவதில்லை. உளவியல் ரீதியான சைக்கலாஜிகல் டிபெண்டன்ஸால் பாதிக்கப்படுபவர்கள்தான் அதிகம்.

வெளியூர்களுக்கெல்லாம் செல்லும்போது இருமல் மருந்து எடுத்துச் செல்ல மறந்து விட்டால், சிறிது நேரம் அது குறித்து கவலைப்படுவார்கள். பிறகு அந்த எண்ணமே இல்லாமல் அதன் தேவையும் இல்லாமல் தூங்கி விடுவார்கள். அதுவே வீட்டுக்குத் திரும்பியதும் மருந்தை வைக்கும் வழக்கமான அந்த இடத்தைப் பார்க்கும்போது உளவியல் ரீதியாக ஏற்படும் உந்துதலில், மீண்டும் அதை எடுத்துக் குடிக்க ஆரம்பிப்பார்கள்.

இந்தg; பழக்கத்துக்கு அடிமையானவர்கள் எந்த விதமான ஆளுமை உள்ளவர்கள் என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கு ஏற்ப அவர்களை இந்தப் பழக்கத்தில் இருந்து விடுவிக்க முடியும். உதாரணத்துக்கு `இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்துதாம். அதனால இப்பல்லாம் கிடைக்கறதில்லை. இதை தடை செய்திருக்காங்க' என்கிற மாதிரி பயத்தை ஏற்படுத்தி அவர்களை அந்த மருந்தைக் குடிப்பதிலிருந்து மீட்கலாம்.

அவர்கள் வழக்கமாக இருமல் மருந்தை வைக்கும் இடத்தில் இருந்து மருந்து பாட்டில்களை இடம் மாற்றி வைக்கலாம். மருந்து பாட்டில் இருந்த இடத்தில் அவர்களின் மனதுக்கு இதம் அளிக்கக்கூடிய, அவர்களுக்குப் பிடித்த வேறு ஏதேனும் பொருள்களை வைத்து திசைத்திருப்ப முயலலாம்.

இருமல் மருந்து

உண்மையிலேயே தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறார்கள் என்றால் மருத்துவரை சந்தித்து அதற்கான முறையான சிகிச்சையை மேற்கொள்ளச் செய்யலாம். மனரீதியான பிரச்னையால் இந்தப் பழக்கத்துக்கு ஆளானவர்கள் என்றால் மனநல மருத்துவரிடமோ, உளவியல் ஆலோசகரிடமோ கவுன்சிலிங் அழைத்துச் செல்லலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/healthy/doctor-vikatan-daily-cough-syrup-dose-is-there-a-way-to-recover-from-this-habit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக