Ad

வியாழன், 21 ஜூலை, 2022

சோம்பலே அறியாத சோ! #AppExclusive

மார்கழி மாதக்குளிரிலும் அதிகாலையில் எழுந்துவிடுகிறார் இவர். பத்திரிகையை ஒரு வரி கூட விடாமல் படிக்கிறார். அரசியலில் அத்தனை ஆர்வம் இவருக்கு. ஆனால், செய்திகளைப் படிப்பதோடு சரி. அரசியல் பற்று, தந்தை ஶ்ரீனிவாச ஐயரிடமிருந்து வந்திருந்தாலும், அரசியலில் நேரடியாக ஈடுபடுவது இவருக்குப் பிடிக்காது!

பத்திரிகையைப் படித்து முடித்ததும், ஆபீஸ் வேலையைக் கொஞ்சம் கவனிக்கலாம் என்றால் டெலிபோன் அடித்துக்கொண்டேயிருக்கிறது. சபா காரிய தரிசி, அல்லது விவேகா ஃபைனார்ட்ஸ் நடிகர், அல்லது படத்தயாரிப்பாளர், அல்லது ஒரு விசிறி! இதற்குள் ஒன்பது மணி ஆகிவிடுகிறது. உடனே ஆபீசுக்கு கிளம்பிச் சென்று அங்கு சட்ட ஆலோசகராக மாறி விடுகிறார். படப்பிடிப்பு இருந்தால், வீவு போட்டு விட்டு ஸ்டுடியோவுக்குப் பறந்து விடுகிறார். ஆனால், அநேகமாகப் பகலில் ஷூட்டிங் வைத்துக் கொள்வதில்லை. மாலை ஆபீசிலிருந்து நேரே நாடகத்தில் நடிக்கப் போய் விடுகிறார். சில நாட்கள் அங்கிருந்து நேரே படப்பிடிப்புக்கும் போகிறார். வீட்டுக்கு வருவதற்கு ஒரு மணியோ, இரண்டு மணியோ ஆகிவிடுகிறது. இரவு எத்தனை மணிக்கு வந்தாலும் விடியற் காலையில் எழுந்து விடுகிறார். இது சோ-வின் அன்றாட அலுவல்கள்.

இடையில் நேரம் கிடைத்த போதெல்லாம் அரட்டை அடிக்கிறார். சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறார். சந்திப்பவர்களிடமெல்லாம் சிரித்துக் கொண்டே பேசுகிறார்! பத்து வருடங்களில் பத்து நகைச்சுவை நாடகங்களை எழுதியுள்ளதோடு, அமெச்சூர் நாடகத் துறையில் ஒரு பெரும் புரட்சியை செய்திருப்பவர் சோ.

அமெச்சூர் நாடகம் ஒன்று, குறைந்த காலத்தில் 101 முறை நடிக்கப்பட்டிருக்கிறதென்றால் அந்தப்பெருமை சோவின் ' மனம் ஒரு குரங்கு’க்கு தான் உண்டு, (சோ வின் மனமும் ஒரு குரங்குதான், ஆனால் அதில் விஷமம் இருக்கும்; வேதனை இருக்காது. விளையாட்டு இருக்கும்; வினை இருக்காது.)

An Exclusive Interview With Cho - 1967

முதன் முதலில் காஃபி வேளையில் நாடகம் போட்டு தனிச் சிறப்பைத் தட்டிக் கொண்டு போனவரும் சோ தான். அது மட்டுமா? பகலில் ஒரு நாடகம், மாலையில் ஒரு நாடகம் என்று போட்டவரும் இவர்தான். மக்கள் பார்க்கத் தயார் என்றால் தினமும் நைட் ஷோ போடுவதற்கும் இவர் தயார்!

அப்பப்பா!

விவேகா ஃபைனார்ட்ஸ் கிளப் நடிகர்கள் அதிசயப் பிறவிகள்தான்! சந்தேகமேயில்லை. தனி நடிகர்கள் கொண்டாடுவது சினிமா வாரம் போல் நாடக வாரம் நடத்தி மற்றொரு பெருமையையும் நிலை நாட்டி வருகிறார் இவர். முப்பத்திரண்டு வயதில் பிரமிக்கத் தக்க சாதனைதான் இது!

An Exclusive Interview With Cho - 1967

''நகைச்சுவை நாடகங்கள் எழுத வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?" என்று அவரை ஒரு நாள் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது கேட்டேன். அப்போது அவர் பிளாஸ்டிக் ஊதுகுழலைக் கையில் வைத்துத் தட்டி 'கொய் வொய்' என்று சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தார். நான் அதைக் கவனித்தவுடன் அதை வாயில் வைத்துக் கொண்டு ஊத ஆரம்பித்து விட்டார் இந்தத் தீராத விளையாட்டுப் பிள்ளை! அகன்ற விழிகளை ஓர் உருட்டு உருட்டி, சிறு உதடுகளைக் குவித்து புன்னகைத்து விட்டு, "கல்லூரி படிக்கும் நாட்களிலிருந்தே எனக்கு 'பர்னாட்ஷா' , 'ஓடவுஸ்' புஸ்தகங்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர்கள் கற்பனை செய்யும் வினோத நிகழ்ச்சிகளைக் கண்டு எனக்குள்ளேயே சிரித்துக் கொள்வேன். பிறகு 'பட்டு' வின் (ஒய்.ஜி.பி. நாடகக் குழுவிலிருந்து பிரிந்தவர்) It happened at Midnight (நள்ளிரவில் நடந்தது) போன்ற நாடகங்களைப் பார்த்த பிறகே தமிழில் நகைச்சுவை நாடகங்கள் எழுதவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. என் நாடகங்களுக்கு இங்கிலீஷ்லே டைட்டில் வைக்கிறேனே, அது கூட அவரிடமிருந்து கற்றுக் கொண்டது தான்" என்றார் சோ.

சமீபத்தில் விகடன் அட்டைப் படத்தில், தமிழ் நாடகங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பது பற்றி வெளியான துணுக்கை வெகுவாக ரசித்ததாகக் கூறினார் சோ. "இந்த ஹை கிளாஸ் ஜோக்கை நான் மிகவும் ரசித்தேன். அதில் வந்த (Why was l born?) என்ற டைட்டிலை வைத்துக் கொண்டு ஒரு நாடகம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றார் இவர்.

'சோ'வை 'ஓஹோ' என்று புகழ்பவர்கள் இருப்பது போலவே 'இது ஹூயூமரா? எல்லாரையும் கிண்டல் பண்ணிக் கொண்டிருப்பது நாடகம் ஆகுமா?' என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். இப்படியொரு அபிப்பிராயம் இருப்பதை இவரே அறிந்திருக்கிறார். அதைப் பற்றி இவருக்கு கோபமோ வருத்தமோ கிடையாது. பிறரைச் சிரிக்க வைக்கத் தெரிந்தவருக்கு சிரிக்கவும் தெரிய வேண்டுமே! தன்னைப் பற்றிச் சிரிக்கத் தெரிந்த வருக்கு கோபம் எப்படி வரும்?"ஸார். நான் ஒரு சீர்திருத்த வாதியல்ல. ஜனங்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். எதைக் கிண்டல் செய்தாலும் ஜனங்கள் சிரிக்கிறார்கள். எனவே, கிண்டலுக்கு எது கிடைக்கிறதோ அதை ஸப்ஜெக்டா எடுத்துக்கொள்றேன். என் நாடகங்களைப் பார்த்து விட்டு மக்கள் திருந்தி விடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இரண்டு மணி நேரம் மனம் விட்டுச் சிரிக்கிறார்கள். பிறகு அதைப்பற்றி மறந்து விடுகிறார்கள்" என்பதே சோ தந்த விளக்கம்.

''சர்க்காரையோ தனிப்பட்ட தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களையோ நாடகங்களில் நீங்கள் தாக்குவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?"

'' எனக்கு யார் மீதும் வெறுப்போ கோபமோ கிடையாது. யார் மனத்தையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. மந்திரி ஓ.வி. அளகேசன் என் நாடகங்களையெல்லாம் பார்த்து விட்டு பிரமாதமாகப் புகழ்ந்திருக்கிறார். தி.மு.க. தலைவர்கள் 'கோ வாடிஸ்' பார்த்து விட்டு என்னைப் பாராட்டிச் சென்றிருக்கிறார்கள். சில டாக்டர்கள், இறைவன் இறந்துவிட்டானா? பார்த்து விட்டு வாய் விட்டுச் சிரித்தார்கள்.

An Exclusive Interview With Cho - 1967

எனவே, நகைச்சுவையை ரசிப்பது அவரவர்களுடைய ரசனையையும் மனோபாவங்களையும் பொறுத்த விஷயம் என்றே நான் நினைக்கிறேன்." அப்போது அங்கு ஒரு வெண்ணிற பொமரேனியன் நாய் வந்து 'சோ' வின் காலுடன் உராய்ந்தது.

''இதுக்கு 'டைனி'ன்னு பேரு. எனக்கு நாய்களைக் கண்டாலே பிடிக்காது. ஆனால், வீட்டிலிருக்கும் எல்லோரையும் விட்டுவிட்டு இது ஏனோ என் காலையே சுற்றிக் கொண்டிருக்கிறது" என்றார் சிரித்துக் கொண்டே. இது நகைச்சுவையுள்ள நாயாக இருக்குமோ என்று எனக்குள் நினைத்துக் கொண்டேன். சினிமாத் துறையில் தனக்கு சுதந்திரம் இருக்காது என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார் 'சோ'.

"நாடகங்களைப் போல சினிமாவில் கேலியோ, கிண்டலோ செய்ய முடியாது. சென்ஸார் விட மாட்டார்கள் என்று கூறிய அவர், மேஜர் சுந்தர ராஜனைப் போலவே, 'பணத்துக்காகவும் புகழுக்காகவும் நான் சினிமாவிலே நடிக்கிறேன். கலைக்காகவோ, பட உலகைச் சீர்திருத்துவதற்காகவோ இல்லை' என்று ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக அடித்துக் கூறினார்.''

உங்கள் கிளப்பின் நடிகர்கள் அநேகமாக தினமும் வெவ்வேறு நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்களே சொல்ல வேண்டிய வசனங்களை மாற்றிச் சொல்லி விடமாட்டார்களா?" என்று கேட்டேன் நான். அதற்கு 'சோ' ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியைச் சொன்னார். எங்கள் நாடகங்களில் எத்தனையோ விதமான 'தமாஸ்கள்' நடப்பதுண்டு. ஒரு சமயம் 'ஸம்பவாமி யுகே யுகே’ என்ற நாடகத்தில் ஒரு பாத்திரம், 'யாரை என்று திருத்தப் போகிறாய் மாதவா?' என்ற வசனத்திற்குப்பதில் யாரை என்று திருப்பத்தூர் போகிறாய் மாதவா?’ என்று கூறிவிட்டார். எங்களால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை"

An Exclusive Interview With Cho - 1967

நாடகத்தில் தாங்கள் பேசும் வசனத்தைக் கேட்டு ரசிகர்கள் வயிறு புடைக்கச் சிரித்து மகிழ்வதை நேரில் காணும்போது உண்டாகும் நிறைவுக்கு எதுவுமே ஈடில்லை என்கிறார் சோ." ரசிகர்களின் சிரிப்பு அடங்குவதற்காகக் காத்திருந்து மற்றொரு ஹாஸ்யத்தைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் அது 'க்ளிக்’ ஆகும். இதை அமெச்சூர் நடிகர்கள் எல்லோரும் முக்கியமாகக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறிய சோ, பம்பாயில் தமது நாடகங்களுக்குக் கிடைத்த அமோகமான வரவேற்பைப் பற்றி பெருமிதத்தோடு கூறினார். அங்க ரசிகர்களின் சிரிப்பு அடங்குவதற்குப் பத்து நிமிடங்கள் ஆயிற்றாம். அது வரையில் நடிகர்கள் மேடையில் மரம் மாதிரி நின்று கொண்டிருந்தார்களாம்!

ஆரம்ப காலத்தில் ஒரு சமயம் அண்ணாமலை மன்றத்தில் இவர் நாடகத்துக்கு நாற்பது பேர்தான் கூடியிருந்தார்களாம். அவர்கள் நாடகத்தைக் கவனிக்காமல் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்களாம்... நடிகர்களும் தங்களுக்குள் வசனங்களைப் பேசி தாங்களே சிரித்துக் கொண்டிருந்தார்களாம்! "அண்ணாமலை மன்றத்தில் நாடகம் போட மாட்டோமா என்று ஒரு காலத்தில் ஏங்கிய நாங்கள் இன்று அங்கேயே குடியிருக்கிறோம்'' என்று கூறிய போது அவர் முகத்தில் வெற்றிப் புன்னகை படர்ந்தது. சோவின் மேஜையின் மீது நான் கண்ட சில நூல்கள்; நீங்களும் உங்கள் மோட்டாரும், வியாசர் விருந்து, குரான், Stage craft, கலிங்கத்து பரணி, தமிழர் பண்பாடும் வரலாறும், கோழி வளர்ப்பு, கம்பராமாயணம்...

An Exclusive Interview With Cho - 1967

'தேன் மழை' யில் ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கிவிட்ட 'சோ' வுக்கு சினிமா சான்ஸ் வந்து கொண்டேயிருக்கிறது. எம்.வி.எம். படம் ஒன்றை டைரக்ட் கூட செய்யப் போகிறார் இவர். ராமசாமிக்கு சோ என்பது வீட்டில் வைக்கப்பட்ட செல்லப் பெயர். பிறகு அதையே ஒய். ஜி. பி. நாடகத்தில் ஒரு பாத்திரத்தின் பெயராக வைத்துக் கொண்டார். 'சோ' வின் தம்பியான அம்பி (ராஜ கோபால்) ஒரு சிறந்த அமெச்சூர் நடிகர். 'சோ' நடிகராவதற்கு முன்பிருந்தே இவர் நடிகராகயிருந்து வருகிறார். 'விவேகா ஃபைனார்ட்ஸ்' கிளப்பினர் தேவனின் 'கல்யாணி' நாடகம் போட்ட போது சோ அதில் நடிக்க விரும்பினார்.

ஆனால் அம்பியும் ஓரிருவரும் சேர்ந்து 'உனக்கு நடிப்பு வராது, சான்ஸ் கொடுக்க முடியாது' என்று சொல்லி விட்டார்களாம்! முதன் முதலில் சோவுக்கு நடிக்க சான்ஸ் கொடுத்தவர் ஒய்.ஜி.பி.தான். சின்ன வயதிலிருந்தே பிறரைப் போலவே பேசி நடிப்பதென்றால் சோவுக்குப் பிடிக்குமாம். பொதுக் கூட்டத்திற்குப் போய், மேடையில் பேசுபவர்களைக் கவனித்து விட்டு. வீட்டுக்கு வந்து அவர்களைப் போலவே 'கோணங்கி' செய்து காட்டுவார்.

பள்ளியில் படிக்கும் போது அறுபத்து மூவர் உற்சவத்தில் 'காஸ் பலூன்'களை அறுத்து மேலே பறக்க விட்டுக் கொண்டிருந்தவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ரிக்ஷாவில் போய்க் கொண்டிருந்த ஒருவரைச் சுட்டிக் காட்டி, 'டேய். நான் அவரைப் போய் குத்துகிறேன், என்ன பந்தயம் கட்டறே?' என்று தோழர்களிடம் சவால் விட்டார்.

'உன்னாலே முடியாது டா' என்று அவர்கள் கூறவே "பாருடா'' என்று வெற்றிச் சிரிப்பு...... சொல்லி ரிக்ஷாவை மறித்து நிறுத்தி அதில் உட்கார்ந்திருந்தவரின் முதுகில் குத்தி விட்டு ஓடி விட்டார். அதைக் கண்டு நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். சிறு வயதில் நடந்த இந்த நிகழ்ச்சி சோவின் குண சித்திரத்தை நன்கு விளக்குகிறது. பிறர் சிரிப்பதற்காக 'சோ' என்ன வேண்டுமானாலும் செய்வார். செய்வதைத் துணிந்து செய்வார். விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்.

- ஶ்ரீ

(08.01.1967 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து...)


source https://www.vikatan.com/government-and-politics/cinema/an-exclusive-interview-with-cho-1967

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக