Ad

ஞாயிறு, 17 ஜூலை, 2022

இந்திய ஜனாதிபதி தேர்தல் கதைகள்: அதிகாரப்பூர்வ வேட்பாளரை தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர்! | ரீவைண்ட்

இந்தியாவின் இப்போதைய டாப் ட்ரெண்டிங் ஜனாதிபதி தேர்தல் தான். ஆம்! ஜூலை 18-ம் தேதியை இந்தியா மட்டுமில்லாமல் உலகமே உற்றுநோக்கி வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரெளபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் தான் இந்த தேர்தலில் மோதிக்கொள்ள போகிறார்கள்.

இன்று, அதாவது ஜூலை 18-ம் தேதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலின் முடிவு ஜூலை 21-ம் தேதி தெரிந்துவிடும். ஆனால் இதுவரை நடந்த ஜனாதிபதியின் தேர்தல் பற்றி தெரியுமா?

சுதந்திர இந்தியாவில் இதுவரை 14 ஜனாதிபதி தேர்தல்கள் நடந்துள்ளது. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத்(1952,1957), சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(1962), பக்ருதின் அலி அகமது(1974), நீலம் சஞ்சீவ ரெட்டி(1977), ஜெயில் சிங்(1982), ராமசாமி வெங்கட்ராமன்(1987), கே.ஆர். நாராயணன்(1997), ஏ.பி.ஜே அப்துல் கலாம்(2002) ஆகியோர் போட்டியின்றி ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர்.

இதில் ராஜேந்திர பிரசாத், கே.ஆர். நாராயணன், பக்ருதின் அலி அகமது, ஜெயில் சிங், ராமசாமி வெங்கட்ராமன் ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆவர். நீலம் சஞ்சீவ ரெட்டி ஜனதா கட்சியால் நிறுத்தப்பட்டவர் ஆவார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சுயேச்சை வேட்பாளர்களாக தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

சுதந்திர இந்தியாவில் 1969-ம் ஆண்டு நடந்த நான்காவது ஜனாதிபதி தேர்தல் சர்ச்சைக்குரிய தேர்தலாக அமைந்தது. 1969-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜாகீர் உசேன் திடீரென்று காலமானார். அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி ஜனாதிபதியாக பதவியேற்ற சில நாள்களிலேயா துணை ஜனாதிபதி மற்றும் செயல் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு பிறகு முகம்மது இதயத்துல்லா செயல் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றார்.

ஜாகீர் உசேன்

இந்த குழப்பங்களுக்கு மத்தியில் இந்திய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தலை நடத்தியது. அதுவரை யாரும் அசைக்க முடியாத கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி அணி என்றும் சிண்டிகேட் அணி என்றும் இரண்டாக பிரிந்து போட்டியிட்டது.

காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ வேட்பாளராக நீலம் சஞ்சீவ ரெட்டியை தேர்தலில் நிறுத்தியது. இந்திரா காந்தி சுயேச்சை வேட்பாளராக வி.வி.கிரியை களத்தில் நிறுத்தினார். மேலும் இந்திரா காந்தி கட்சியினரை மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வி.வி.கிரி

இதன்பின்னர் அதிகாரப்பூர்வ வேட்பாளரான நீலம் சஞ்சீவ ரெட்டியை(3,13,548 வாக்குகள்) சுயேச்சை வேட்பாளரான வி.வி.கிரி(4,01,515 வாக்குகள்) தோற்கடித்தார். இதனால் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் நிஜலிங்கப்பா இந்திரா காந்தியை கட்சியில் இருந்து நீக்கினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுப்பட்டது. மேலும் இந்த தேர்தலுக்கு பிறகு தேர்தல் சட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1987-ம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய துணை ஜனாதிபதி ஆர். வெங்கடராமனும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயரும் போட்டியிட்டனர். இதில் ஆர். வெங்கடராமன் 7,40,148 வாக்குகள் பெற்று வி.ஆர். கிருஷ்ண ஐயரை(2,81,550 வாக்குகள்) எளிதாக வென்றார்.

இந்த தேர்தலில் 1982-ம் ஆண்டு இந்தியாவின் ஏழாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயில் சிங் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனித்து போட்டியிட்டு தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர் தயாள் சர்மா

ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக சங்கர் தயாள் சர்மாவும் எதிர்க்கட்சிகள் சார்பாக ஜார்ஜ் கில்பர்ட் ஸ்வெல்லும் போட்டியிட்டனர். 1992-ம் ஆண்டு நடந்த இந்த தேர்தலில் சங்கர் தயாள் சர்மா(6,75,804 வாக்குகள்) வென்று ஜனாதிபதியாக பதவியேற்றார். எதிர்க்கட்சி சார்பாக போட்டியிட்ட ஸ்வெல், மேகாலயா மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினர் என்பதும் அவரை பாஜக ஆதரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதீபா பாட்டீல்

2007-ம் ஆண்டு நடந்த பன்னிரெண்டாவது ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக ஒரு பெண் இந்திய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட பிரதீபா பாட்டீல் மொத்தம் 9,69,422 வாக்குகளில் 6,38,116 வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பைரோன் சிங் ஷெகாவத் 3,06,810 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

2012-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி முன்னிறுத்திய வேட்பாளரான பிரணாப் முகர்ஜி 7,13,763 வாக்குகள் பெற்று பதிமூன்றாவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு எதிராக பாஜக வேட்பாளர் பி ஏ சங்மா(3,15,987 வாக்குகள்) போட்டியிட்டார்.

ராம்நாத் கோவிந்த்

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜக தனது வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை நிறுத்தியது. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியது. இந்த தேர்தலில் 7,02,044 வாக்குகள் பெற்று ராம்நாத் கோவிந் பதினான்காவது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2012-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பாக நிறுத்திய வேட்பாளர் 30.7% வாக்குகளை பெற்றிருந்தார். ஆனால் 2017-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந் 65.65% வாக்குகள் உயர்ந்து வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-president-of-india-elections-a-rewind

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக