Ad

வியாழன், 28 ஜூலை, 2022

இப்படியும் நடந்ததா? ஆந்த்ராக்ஸ் கிருமி தெரியும், வெடிகுண்டு தெரியும் - ஆந்த்ராக்ஸ் தீவு தெரியுமா?

சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்துவந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும். அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட சுவாரஸ்யமான அதிசயங்களையும் மர்மங்களையும் விநோதங்களையும் இந்தத் தொடர் விவரிக்கிறது.

இந்தத் தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க, இங்கே க்ளிக் செய்யவும்.

இப்படியும் நடந்ததா?

ஆந்த்ராக்ஸ் என்பது ஒரு வகை கொடூரமான பாக்டீரியா. அதைச் சுவாசித்தால் பெரும்பாலும் இறப்பு நிச்சயம். மருத்துவச் சிகிச்சை கூட கை கொடுப்பதில்லை. அப்படியிருக்க ஸ்காட்லாந்து நாட்டில் வடமேற்கு பகுதியிலுள்ள க்ரூயினார்ட் (Gruinard) என்ற தீவு ஆந்த்ராக்ஸ் தீவு என்று அழைக்கப்படுவது சிலருக்கு வியப்பைத் தரலாம். இரண்டு கிலோமீட்டர் நீளமும் ஒரு கிலோ மீட்டர் அகலமும் கொண்ட தீவு இது. அந்தப் பகுதிக்குச் செல்லக் கூடாது என்ற அச்சம் இப்போதும்கூட பொதுமக்களிடையே நிலவுகிறது.

Bacillus anthracis Gram | ஆந்த்ராக்ஸ் பாக்டீரியா
ரோஸ்ஷயர், க்ரோமார்டிஷயர் ஆகிய இரண்டு ஸ்காட்லாந்து மாகாணங்களுக்குச் சொந்தமாக இருந்தது இந்த தீவு. 1881ல் இதன் மக்கள்தொகை ஆறு (ஆம், வெறும் ஆறு பேர்). 1920-ல் இருந்து இங்கு யாருமே வசிக்கவில்லை. அப்படி என்ன நடந்தது இந்தத் தீவில்?

அது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம். எப்படியாவது எதிரியை வீழ்த்திவிட வேண்டும் என்பதுதான் இருதரப்பினருக்கும் எண்ணமாக இருந்தது. அதன் ஒரு பகுதியாக ‘கெடுதல் விளைவிக்கும் ஆந்த்ராக்ஸை’ எதிரி இருக்கும் பகுதிக்குள் செலுத்திவிட்டால் என்ன ஆகும்? இப்படி ஒரு நச்சு எண்ணம் போர்களை வடிவமைக்கும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குழுவுக்குத் தோன்றியது.

இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் ராணுவ விஞ்ஞானிகள், முக்கியமாக போர்டோன் டவுன் (Porton Down) என்ற அறிவியல் வளாகத்தில் இயங்கிய உயிரியல் துறையைச் சேர்ந்தவர்கள், இங்கு சில சோதனைகளை நடத்தினார்கள். அதாவது பாக்டீரியா, வைரஸ், பூச்சிகள் காளான் போன்றவற்றைப் பயன்படுத்தி எதிரிகளைக் கொல்வதும் அவர்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பதும் எந்த அளவு சாத்தியம் என்பது தொடர்பான சோதனைகள் இங்கு நடந்தன. அதிலும் இவர்கள் அதிகமாகக் கவனம் செலுத்தியது ஆந்த்ராக்ஸ் மீது!

இந்த பாக்டீரியா ஒரு பகுதிக்குள் நுழைந்தால் வெகு காலத்துக்கு அங்கேயே தங்கி நச்சு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் முக்கிய நகரங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ள யாரும் வசிக்காத ஒரு தீவு இந்த விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்குத் தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் மேற்படித் தீவு. 1942ல் இந்தத் தீவில் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியம் தொடர்பான பல சோதனைகள் செய்யப்பட்டன.

செம்மறி ஆடுகளும் ஆந்தராக்ஸும்
சர் ஆலிவர் கிரஹாம் சுட்டன் (Sir Oliver Graham Sutton) என்பவர் இந்தச் சோதனைக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். 50 பேர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு அது. உயிரி தொடர்பான வெடிகுண்டை உருவாக்கும் பொறுப்பு டேவிட் ஹெண்டர்சன் என்பவருக்கு அளிக்கப்பட்டது.

இதற்காக எண்பது செம்மறி ஆடுகளை அந்தத் தீவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவற்றைக் கட்டியிருந்த இடத்துக்கு அருகே ஆந்த்ராக்ஸ் அடங்கிய பொருள்கள் விடுவிக்கப்பட்டன. அந்த ஆடுகளின் உடலுக்குள் ஆந்த்ராக்ஸ் புகுந்தது. தொடர்ந்த சில நாள்களிலேயே அந்த ஆடுகள் இறந்து போயின. இந்தச் சோதனைகளின் ஒரு பகுதி 16 மிமீ வண்ணத் திரைப்படமாகப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் குண்டு வெடித்தவுடன் பழுப்பு வண்ண வாயு ஒன்று செம்மறி ஆடுகள் மீது பரவுவதும் பின்னர் இறந்த அந்த ஆடுகளின் உடல்கள் கொளுத்தப்படுவதும் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்தத் தீவு ஒருவருக்குச் சொந்தமாக இருந்தது. போர் குறித்த ராணுவத்தின் திட்டமிடலுக்குத் தேவை என்ற எண்ணத்தில்தான் அவர் தன் தீவைப் பிரிட்டிஷ் அரசுக்குத் தற்காலிகமாக அளித்திருந்தார். இப்படியான விஷமத்தனமான பின்னணி எல்லாம் அவருக்குத் தெரியாது.

1945இல் அந்தத் தீவை தனக்குத் திருப்பித் தரவேண்டும் என்று அவர் கேட்டபோது அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டது. ஏனென்றால் அந்தத் தீவு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்து கொண்ட பிறகுதான் அதைத் திருப்பித் தர முடியும். அதனால் அந்தத் தீவைச் சுத்தமாக்கி அளிப்பது தனது பொறுப்பு என்று அரசு ஏற்றுக் கொண்டது. அதன்படி அந்தத் தீவு, மனிதர்கள் வாழத் தகுதியானது என்று அரசு சான்று அளித்தால் பிறகு வெறும் 500 பவுண்டு தொகையை அரசிடம் செலுத்தி அதன் உரிமையாளரோ அல்லது அவரின் வாரிசுகளோ அரசிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஓர் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

1986ல் தொடங்கிய சுத்திகரிக்கும் பணிகள்
ஆனால் பல வருடங்களுக்கு அந்தத் தீவு மிக அபாயகரமானது என்றே கருதப்பட்டதால் அது அந்த உரிமையாளரின் பெயருக்கு மாற்றப்படவே இல்லை. பொதுமக்கள் அங்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. பாக்டீரியாவின் வீரியம் குறைந்து உள்ளதா என்பதை அங்கே சென்று கணிக்க விஞ்ஞானிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

அரசின் இந்தப் போக்கு பொது மக்களில் பலருக்கும் ஏற்புடையதாக இல்லை. உரிய நடவடிக்கை எடுத்து அந்தத் தீவைச் சரி செய்யவில்லை என்றால் அது நாளடைவில் ஒட்டுமொத்த ஸ்காட்லாந்துக்குமே விபரீதமான விளைவை ஏற்படுத்தலாம் என்று பயந்தார்கள். இதற்காக இரண்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் அடங்கிய குழு அந்தத் தீவுக்குச் சென்று 140 கிலோ மண்ணை சேகரித்து, அதைச் சிறுசிறு பொட்டலங்களாக்கி சில இடங்களில் வைக்கத் தொடங்கியது. முதல் நாள் ஒரு ராணுவ ஆராய்ச்சி நிலையத்துக்கு வெளியே வைத்தது. அதை உடனடியாக அரசு விஞ்ஞானிகள் பரிசோதிக்க அதில் ஆந்த்ராக்ஸ் கிருமிகள் இருப்பது தெரியவந்தது. இப்படி வேறு சில இடங்களிலும் அந்த மண் பொட்டலங்கள் வைக்கப்பட்டன.

1980ல் ஒரு விஞ்ஞானிகள் குழு அந்தத் தீவின் அப்போதைய தன்மையை அறிவதற்காக அங்குச் சென்றது. அவர்கள் அறிக்கை தர, 1986ல் தொடங்கி அந்தத் தீவைச் சுத்திகரிக்கும் முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. பாக்டீரியாவை அழிக்கக் கூடிய 280 டன் ஃபார்மால்டிஹைடு கடல் நீருடன் கலக்கப்பட்டு அந்தத் தீவின் மீது தெளிக்கப்பட்டது. தீவின் மண்ணின்மேல் சேர்ந்த படலம் பிறகு நீக்கப்பட்டது. அங்கு மீண்டும் சில செம்மறியாடுகள் அனுப்பப்பட, அவற்றின் உடல் நலம் பாதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

1990-ல் எச்சரிக்கை பலகைகளை அகற்றும் பாதுகாப்பு அமைச்சர் மைக்கேல் நியூபர்ட்

1990 ஏப்ரல் மாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் மைக்கேல் நியூபர்ட் அந்தத் தீவுக்கு விஜயம் செய்து, அந்தத் தீவு அபாயகரமானதில்லை என்று அறிவித்து அங்கு நடப்பட்டிருந்த எச்சரிக்கை பலகைகளை அகற்றினார். தொடர்ந்த மே மாதத்தில் தீவின் உரிமையாளரின் வாரிசுகள் அந்தத் தீவை மீண்டும் வாங்கிக் கொண்டார்கள் - அதே 500 பவுண்டு தொகையைக் கொடுத்துத்தான்!

அதன் பிறகு போரிலும் ஆந்திராக்ஸ் குண்டுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

- மர்மசரித்திரம் தொடரும்...



source https://www.vikatan.com/oddities/miscellaneous/oddly-strange-know-about-the-infamous-gruinard-island-aka-anthrax-island

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக