உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, `தேர்தல் நேரத்து இலவசங்கள் ஆபத்தானவை' என்று பேசியிருந்தார். இதற்கு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பந்தேல்கண்ட் பகுதியில் நான்கு வழி விரைவுச் சாலையைக் கடந்த சனிக்கிழமை (ஜூலை 16) அன்று திறந்துவைத்தார் பிரதமர் மோடி. அப்போது பேசிய அவர், ``நமது நாட்டில், தேர்தல் நேரத்தில் இலவச அறிவிப்புகளை அள்ளிவீசும் ஒரு புதிய கலாசாரம் உருவாகியிருக்கிறது. இது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து. இதுபோன்ற அறிவிப்புகள் குறித்து இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'' என்று பேசியிருந்தார். இதையடுத்து, மோடியின் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
அந்த வீடியோவில், ``கெஜ்ரிவால் இலவசங்களை வழங்குகிறார் என்று என்னை விமர்சிக்கின்றனர். சிலர் கேலியும் செய்கின்றனர். டெல்லியிலுள்ள ஏழை, நடுத்தரக் குழந்தைகளுக்கு இலவசமாகத் தரமான கல்வியை வழங்கினேன். இது ஒன்றும் கிரிமினல் குற்றமில்லையே? நான் நாட்டு மக்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் இலவசங்களை வழங்குகிறேனா அல்லது நாட்டின் அடித்தளத்தை உருவாக்குகிறேனா? டெல்லி அரசுப் பள்ளிகளில் 18 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அவர்களின் எதிர்காலம் இருளில் மூழ்கியிருந்தது. இப்போது அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம். கடந்த 75 ஆண்டுகளில், முதன்முறையாக டெல்லியிலுள்ள அரசுப் பள்ளிகளில் 99 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த நிலை 1947 அல்லது 1950-லேயே ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
டெல்லி அரசு மருத்துவமனைகளைச் சிறப்பானதாக மாற்றியிருக்கிறோம். நாடு முழுவதும் பேசப்படும் மொஹல்லா க்ளினிக்குகளை திறந்திருக்கிறோம். உலகிலேயே டெல்லி நகரில் மட்டும்தான் இரண்டு கோடி பேர் இலவசமாக மருத்துவம் பெறும் வசதி இருக்கிறது. ரூ.50 லட்சம் வரையிலான அறுவை சிகிச்சைகள்கூட இலவசமாகச் செய்யப்படுகின்றன. டெல்லியில் விபத்தைச் சந்திப்பவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுவரை விபத்தில் சிக்கிய 13 லட்சம் பேரைக் காப்பாற்றியிருக்கிறோம். அவர்களிடம் கேளுங்கள், `கெஜ்ரிவால் வெறும் இலவசங்களை வழங்குகிறாரா... இல்லை உன்னதமான பணிகளைச் செய்கிறாரா?' என்று. டெல்லியில் 200 யூனிட்டும், பஞ்சாப்பில் 300 யூனிட்டும் இலவச மின்சாரம் வழங்குவதை விமர்சிப்பவர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். உங்கள் அமைச்சர்களுக்கு 4,000, 5,000 யூனிட்கள் இலவசமாக மின்சாரம் வழங்கினால் பிரச்னையில்லை... ஆனால் ஏழை மக்களுக்கு 200, 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கினால் உங்களுக்கு பிரச்னை... அப்படித்தானே?'' என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்.
மேலும் அந்த வீடியோவில், ``என்னை விமர்சிப்பவர்கள் கோடிக் கணக்கில் செலவு செய்து தனியாக விமானம் வாங்கிக் கொள்கிறார்கள். இந்த கெஜ்ரிவால் விமானங்கள் வாங்குவதில்லை. அந்தப் பணத்தில், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத்தை உறுதி செய்திருக்கிறேன். இவ்வளவு இலவசங்கள் வழங்கியும், டெல்லி பட்ஜெட்டில் எந்தவித பாதிப்புமில்லை. மாநில வருவாய் லாபத்தில்தான் இருக்கிறது. இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை சொல்கிறது.
பெரு நிறுவனங்கள் வங்கிகளில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிவிட்டுத் திரும்பச் செலுத்தாமல் விடுவதால், வங்கிகள் திவாலாகின்றன. அப்போது அந்த நிறுவனங்கள் அரசாங்கத்துப் பணம் கொடுத்துவிட்டு, தங்கள்மீது நடவடிக்கை பாயாமல் பார்த்துக் கொள்கின்றனர். இதற்குப் பெயர்தான் இலவசங்களைக் காட்டி ஏமாற்றுவது. உங்கள் நண்பர்களின் ஆயிரம் கோடி ரூபாய்க் கடன்களை ரத்து செய்வதும், வெளிநாட்டு அரசுகளின் ஒப்பந்தங்களை உங்கள் நண்பர்களின் நிறுவனங்களுக்கு வழங்குவதும்தான் இலவசங்களைக் காட்டி ஏமாற்றும் செயல். என்னை விமர்சிப்பவர்கள், தங்கள் அமைச்சர்களுக்கு அனைத்து வசதிகளும் கொடுக்கிறார்கள். அதுவே மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தினால், இலவசம் என்கிறார்கள்'' என்று பேசியிருந்தார்.
இதன் பின்னணி குறித்துப் பேசும் டெல்லி அரசியல் நோக்கர்கள் சிலர், ``வரும் நவம்பர் மாதத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த ஆம் ஆத்மி, `வெற்றிபெற்றால் மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம்' என்று அறிவித்திருக்கிறது. `டெல்லி மாடலை' முன்வைத்து பிரசாரம் செய்து பஞ்சாப்பைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி. தற்போது இமாச்சலப் பிரதேசத்திலும் முழு வீச்சில் களமிறங்கியிருக்கிறது. அங்கு ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க, எப்படியாவது எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற்றுவிட வேண்டுமென்ற முடிவிலிருக்கிறது. அதனால்தான், கெஜ்ரிவாலை சீண்டும் வகையில் இலவசங்கள் குறித்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.
மோடியின் விமர்சனத்தையே தனக்கும் மைலேஜாக மாற்றிக் கொள்ளும் வகையில்தான் பதில் வீடியோ வெளியிட்டிருக்கிறார் கெஜ்ரிவால். மோடி தனது உரையில் கெஜ்ரிவாலின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், தன்னைத்தான் பிரதமர் சுட்டிக்காட்டுகிறார் என்ற தொனியில் வீடியோ வெளியிட்டிருக்கிறார் கெஜ்ரிவால். காங்கிரஸுக்கு மாற்றாக, பா.ஜ.க-வுக்கு எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மியைக் காட்டிக் கொள்ளவே இப்படிச் செய்திருக்கிறார் அவர். அந்த வீடியோவில் புள்ளிவிவரங்களோடு ஆம் ஆத்மி அரசின் சாதனைகளை வெளியிட்டு, அதையே தனது கட்சிக்கான தேர்தல் பிரசாரமாக மாற்றியிருக்கிறார். இது இமாச்சலப் பிரதேசத்துக்கான பிரசார வீடியோவாக மட்டுமல்லாமல், குஜராத், ராஜஸ்தான் என அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மாநிலங்களுக்கான பிரசார வீடியோவாகவும் மாற்றியிருக்கிறார். சமூக வலைதளங்களில் இதனை வேகமாகப் பகிர்ந்துவருகிறார்கள் ஆம் ஆத்மி கட்சியினர். தேசிய அளவில் கட்சியை விரிவடையச் செய்யவே இதுபோன்ற நடவடிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டுவருகிறார்'' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/modi-vs-kejriwal-about-freebies-what-was-the-politics-behind-this
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக