Ad

ஞாயிறு, 10 ஜூலை, 2022

ஊட்டி மருத்துவக் கல்லூரி: பயிற்சி மாணவிக்குப் பாலியல் தொல்லை; ஆண் செவிலியர் சஸ்பெண்ட்!

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் செவிலியராகப் பணியாற்றிவந்தவர் கே.சுரேஷ். இதே மருத்துவக் கல்லூரியில் செவிலியருக்கான பயிற்சி பெற்றுவரும் மாணவி ஒருவரிடம் பணியின்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சி செய்திருக்கிறார். பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடிய அந்த மாணவி உடனடியாகக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார்.

மாணவியின் புகாரின் அடிப்படையில் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். அதில் கே.சுரேஷ், அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கே.சுரேஷை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது மருத்துவக் கல்லூரி நிர்வாகம்.

பாலியல் தொல்லை (Representational Image)

இந்த விவகாரம் குறித்து தெரிவித்த மருத்துவக் கல்லூரி அதிகாரி ஒருவர், "மருத்துவமனை டீன் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது. செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியிடம் ஆண் செவிலியர் சுரேஷ் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றிருக்கிறார் என்பதை உறுதி செய்தோம். அவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவிக்கு 17 வயது என்பதால் கே.சுரேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட வாய்ப்பு இருக்கிறது" என்றார்.

ஊட்டி - பாலியல் தொல்லை

ஊட்டி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிவரும் பெண்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், "இந்த சுரேஷும், இவரின் நண்பர்கள் சிலரும் பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்துகொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் இவர் ஈடுபட்டிருக்கிறார். இவர்மீது ஏகப்பட்ட பெண்கள் புகார் கூறுகிறார்கள். அதிகாரிகள் இவரைக் காப்பாற்றிவந்தனர். இவரிடம் முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/sexual-harassment-in-ooty-medical-collage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக