கடந்த 4 சீசன்களில், ஆர்சிபி 180 ரன்களை சேஸ் செய்ததே இல்லை என்கின்ற தரவுகளே போட்டியின் முடிவையும் முன்கூட்டியே சொல்லிவிட்டது. பேர்ஸ்டோ மூலம் வீசத் தொடங்கிய புயல், லிவிங்ஸ்டனால் சூறாவளியாக மாறி, ஆர்சிபியை சுழற்றி அடித்துவிட்டது.
டாஸ் ஜெயித்த டு ப்ளெஸ்ஸி மகிழ்ச்சியாக, "சேஸிங் செய்கிறோம்" என்று கூற பஞ்சாப் அணி பேட்டிங் ஆட இறங்கியது. தொடர் முழுவதும் நன்றாகப் பந்து வீசாத சிராஜ் பந்தில் அடி விழந்தது என்றால், பல போட்டிகளை தனது பக்கம் திருப்பிய ஹேசல்வுட் பந்தில் இடியே விழுந்தது என்றுதான் கூற வேண்டும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதாக ஜொலிக்காத பேர்ஸ்டோ, இப்போட்டியில் ருத்ரதாண்டவமே ஆடிவிட்டார். முதல் ஓவரில் மேக்ஸ்வெல் பந்தில் சிக்ஸர் அடித்து நடக்க இருக்கும் வாணவேடிக்கைக்கு ஒத்திகை பார்த்தார் என்றால், ஹேசல்வுட்டின் ஓவரில் 22 ரன்கள் அடித்து, 'பெரிய ஸ்கோர் அடிக்க வந்திருக்கிறோம்' என்று தனது பேட்டால் கூறினார். அடுத்தடுத்து வந்த ஓவர்களையும் வசமாகக் கவனிக்க, 4-வது ஓவரிலயே 50 ரன்கள் வந்து சேர்ந்துவிட்டன.
தவானை மேக்ஸ்வெல் போல்ட் ஆக்கி ரன்களை மட்டுப்படுத்தலாம் என்று நினைத்தால், மறு ஓவரில் சிராஜ் பந்தில் 3 சிக்ஸர்களை பேர்ஸ்டோ விளாசி தனது அரை சதத்தையும் பதிவு செய்ய, ஆர்சிபி ஆட்டம் காண ஆரம்பித்தது.
தவானைத் தொடர்ந்து வந்த ராஜபக்சேவை ஹசரங்கா வீழ்த்த, அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோவை சபாஸ் அகமது வெளியேற்றினார். ஆனால் அதற்குள் ஆர்சிபிக்கு எதிரான சேதாரத்தை அவர் செய்துவிட்டார். 9 ஓவரில் 100 ரன்களைக் கொண்டு வந்து 29 பந்துகளில் 7 சிக்ஸர்களையும் விளாசி 66 ரன்கள் எடுத்துவிட்டார்.
பேர்ஸ்டோ விட்டுச் சென்ற அதிரடிப் புள்ளியிலிருந்து லிவிங்ஸ்டோன் ஆரம்பித்தார். சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் பஞ்சமே இல்லை என்பதைப் போல வரிசையாக வரும் பௌலர்களை எல்லாம் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார். மறுபறும் விக்கெட் விழுந்து கொண்டே இருந்தாலும் ரன்குவிப்பில் எந்தவித சுணக்கமும் பஞ்சாப்புக்கு ஏற்படவில்லை.
19-வது ஓவரில் ஹேசில்வுட் பந்தில் 2 சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை லிவிங்ஸ்டோன் விளாச, 26 ரன்கள் வந்து சேர்ந்தது மட்டுமில்லாமல் பஞ்சாப் 200 ரன்களையும் தாண்டிவிட்டது. கடைசி ஓவரில் ஹர்சல் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் விழலுக்கு இறைத்த நீர் போல்தான் ஆனது அவரின் முயற்சியும்.
210 என்பது கடின இலக்கென்றாலும் நம்பிக்கையுடன் இறங்கினர் ஆர்.சி.பி-யின் பேட்டர்கள். கோலியின் இடது கை ஸ்பின் வீக்னஸைக் கருத்தில் கொண்டு அவருக்காகவே எடுக்கப்பட்ட பிராரை மயங்க் முதல் ஓவர் வீசவைக்க, அவரை லாகவமாகவே எதிர்கொண்டார் கோலி. அவரின் பந்தில் இறங்கி வந்து சிக்ஸ் அடித்தும் அர்ஷ்தீப்பின் பந்தில் பவுண்டரிகளை அடித்தும், சிறிது நம்பிக்கையை ஏற்படுத்திய அடுத்த நிமிடமே ரபாடா பந்தில் ஆட்டமிழந்து, பழைய கோலி திரும்புவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே நினைக்க வைத்து வெளியேறினார். "இருப்பா கோலி, நானும் வர்றேன்" என டு ப்ளெஸ்ஸியும் ரிஷி தவான் வீசிய அடுத்த ஓவரில் கிளம்பி விட்டார்.
அடுத்தடுத்த 2 பெரிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்திருக்க, உள்ளே வந்த லாம்ரோர் வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து, அடுத்த பந்தில் அவுட்டாகிச் செல்ல, "பிளே ஆஃப்பை நெருங்கும் வாய்ப்பு, எங்களுக்கு வேண்டாம் பாஸ்" என்று ஆர்சிபியே சொல்வதைப் போல் இருந்தது.
பெரிய இலக்குகளைத் துரத்தும் சமயத்தில் மொத்த கவனமும் ரன்ரேட்டில் வைக்கப்பட்டாலும் விக்கெட்டுகள் மீதும் ஒரு கண் இருப்பது அவசியம். கேமியோ பார்ட்னர்ஷிப்கள்தான் வெற்றிக்கான குறியீடு. ஆர்சிபி முதலில் சறுக்கிய இடம் அங்கேதான். மேக்ஸ்வெல் - பட்டிதர் தவிர்த்து, வேறு எந்தக் கூட்டணியும் தூணாகி அணியைத் தாங்கவில்லை. அதுவும் மூன்று விக்கெட்டுகள் பவர்பிளேவுக்குள் விழுவது லோ ஸ்கோரிங் கேமிலேயே அணிகளை ஆட்டங்காண வைக்குமென்றால், இப்படி ஒரு பிரஷர் கேமில் சொல்லவே தேவையில்லை.
ரஜத் பட்டிதரும் மேக்ஸ்வெல்லும் 60 ரன்கள் சேர்த்து நம்பிக்கை அளித்திருந்த நேரம், "அதெல்லாம் எப்படி நீங்கள் நினைக்கலாம், நாங்கள் தலைகீழாகத்தான் குதிப்போம்" என்று வரிசையாக அவுட்டாகத் தொடங்கினார்கள் ஆர்சிபி பேட்டர்கள். முதலில் பட்டிதர், பின்பு மேக்ஸ்வெல் என்று அவுட்டாக, அடுத்த இரண்டு இணையர்களான தினேஷ் கார்த்திக்கும் சபாஸ் அகமதும், அடுத்தடுத்து வெளியேற போட்டி அங்கேயே முடிந்துவிட்டது.
சேஸிங் போட்டிகளில் பெரிதும் நம்பிக்கை அளித்து வந்த தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப்பின் பந்தில் ஆட்டமிழந்தது போட்டிக்கு மட்டும் முடிவுரை எழுதப்படவில்லை, ஆர்சிபியின் பிளே ஆஃப் கனவுக்கும் கிட்டத்தட்ட முடிவுரை எழுதப்பட்டு விட்டது என்றே தோன்ற வைத்துவிட்டது.
இறுதியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி தோற்க நடப்பு ஐபிஎல் தொடரில் மீண்டும் ஒருமுறை பஞ்சாப் வெற்றி வாகை சூடியுள்ளது. மறுபுறம் ஆர்சிபி தங்களது 3 பெரிய தோல்விகளால் ரன்ரேட்டில் மிகவும் அடிவாங்கி நெகட்டிவ் பாயிண்டுகளுடன் உள்ளது. அடுத்த போட்டியில் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்தே, ஆர்சிபி பிளே ஆஃப் செல்வது நிர்ணயிக்கப்படும். பஞ்சாப் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெற்றிருந்தாலும் மற்ற 2 போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்; அதுபோக, மற்ற அணிகளின் இடங்களைப் பொறுத்தே அவர்களின் பிளே ஆஃப் வாய்ப்பும் அமையும்.
அடுத்து வரவிருக்கும் போட்டிகள் ஒவ்வொன்றின் முடிவிலும் ஒவ்வொரு பிளே ஆஃப் இடங்கள் நிரப்பப்படும் என்பதே சென்னை, மும்பை சாகசங்கள் செய்திடாத இந்த ஐபிஎல் சீசனின் சுவாரஸ்யத்தைக் கூட்டக் காத்திருக்கிறது.
source https://sports.vikatan.com/ipl/ipl-2022-chances-for-playoffs-diminishes-for-rcb-as-they-lose-against-pbks-by-54-runs
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக