Ad

சனி, 7 மே, 2022

LSG v KKR: ஆவேஷ் கானின் அந்த ஒரு ஓவர்; டேபிள் டாப்பரான லக்னோ; முனைப்பே இல்லாமல் சொதப்பிய கொல்கத்தா!

இந்த ஐபிஎல் சீசனின் வெற்றிகரமான அணியாக வலம்வந்த குஜராத் டைட்டன்ஸ், டேபிள் டாப்பராகத் தொடர்ந்து நீடித்து வந்தது. யார் கண்பட்டதோ, எதிர்பாரா விதமாகக் கடைசி இரண்டு போட்டிகளைத் தோற்றுவிட்டது. இதனால் இரண்டாவது இடத்தில் டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்டிருந்த லக்னோ அணிக்கு இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவான் என்பதுபோல, இன்றைய போட்டியில் அவர்கள் வென்றால் டாப்பாக வரலாம். அதாவது டேபிள் டாப்பராக ஜொலிக்கலாம். எதிர்த்து நிற்கப்போவது யாரெனப் பார்த்தால், எப்படியேனும் இரண்டு இலக்கத்தில் பாயின்ட் கணக்கைக் கொண்டுவந்து ஒரு அடி மேலே போகலாம் எனக் கனவு காணும் கொல்கத்தா. கிட்டத்தட்டத் தெரிந்த முடிவுதான் என்றாலும், கொல்கத்தா நாம் நினைத்திராத வகையில் ஆடி அமர்க்களப்படுத்தியது. ஆம், நினைத்ததை விடவும் மோசமாக ஆடி ஈடன் கார்டன் திசையிலிருந்து ஒரு சின்ன விசில் சத்தம்கூட வராதவாறு செய்துவிட்டது.

LSG v KKR

டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் ஐயர், கொல்கத்தா பந்து வீசும் என்ற வழக்கமான மாவையே அரைத்தார். அவர்களின் நட்சத்திர ஆட்டக்காரர் உமேஷ் காயம்பட்டுவிட, ஹர்ஷித் ராணாவை எடுத்திருந்தனர். மறுபுறம் கே.எல்.ராகுல் கௌதமிற்கு பதில் ஆவேஷ் கானை அழைத்து வந்திருந்தார். ஒருவேளை கொல்கத்தா ரசிகர்களிடம் டைம் மெஷினைக் கொடுத்தால், ஆவேஷ் கானைதான் பிளேயிங் லெவனில் எடுக்காதவாறு செய்வார்கள். அப்படியான மேட்ச் வின்னராக அமர்க்களப்படுத்தி இருந்தார்.

கேப்டன் ராகுலும், டீ காக்கும் லக்னோவின் கணக்கைத் தொடங்கக் களமிறங்கினர். அனுபவசாலியான டிம் சவுத்தி, நியூபாலை எடுத்துவந்தார். ஐந்தாவது பந்திலேயே ஒரு சோக சம்பவம் அரங்கேறியது. டீ காக் மிஸ் டைம் செய்த டிரைவை நல்ல ஷாட் என நினைத்தாரோ என்னவோ, ராகுலை அவர் ரன்னுக்குஅழைக்க, ராகுலும் தன்னிச்சையாக ஓடிவர, ஸ்ரேயாஸ் பந்தை எடுத்து பௌலிங் எண்டில் வீசினார். 'அய்யோ ஆபத்து' என ராகுல் திரும்புவதற்குள் அங்கு ஸ்டம்புகள் சிதறடிக்கப்பட்டிருந்தன. ரன்கள் எதுவும் எடுக்காமல், ஒரு பந்தைக்கூடப் பிடிக்காமல் வெளியேறினார் ராகுல். உள்ளே வந்த தீபக் ஹூடா, விக்கெட் விழுந்த பிரஷரைக் குறைக்க ஷிவம் மவியின் அடுத்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார்.

டீ காக்கிற்குக் குற்றவுணர்வு போல! அடுத்த சவுத்தி ஓவரில் பழிவாங்குவதைப் போல, 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என விளாசினார். அதிலும் அந்த சிக்ஸர், டீப் மிட்விக்கெட்டில் ஆள் இருந்தால் என்ன, நான் கிரவுண்டுக்கு வெளியேதான் அடிக்கப்போகிறேன் என்று சொல்வது போலவே இருந்தது.

'என்ன அடிக்கிறாங்க' எனப் பயந்துபோய் ஸ்பின்னர் நரைனைக் கூட்டி வந்தார் ஸ்ரேயாஸ். அவர் ஓவரிலும் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ஹூடா. அடுத்து அனுகுல் ராயை ஸ்ரேயாஸ் அனுப்ப, அவர் ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் விளாசப்பட்டன. பவர்பிளேவின் கடைசி ஓவரை ஹர்ஷ்த் ராணாவிடம் கொடுத்தார் ஸ்ரேயாஸ். டீ காக் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் 17 ரன்கள். பவர்பிளே முடிவில் 66/1 என மிரட்டியது லக்னோ.

LSG v KKR

27 பந்துகளில் அரைசதம் கடந்தார் டீ காக். 8வது ஓவரை வீசவந்த நரைன், டீ காக்கிற்கு சற்றே வேகமான ஒரு டெலிவரியை வீச, லாங் ஆஃப்பில் கேட்ச் கொடுத்து தன் இன்னிங்ஸை 50 ரன்களில் முடித்துக்கொண்டார் டீ காக். உள்ளே வந்தார் க்ருணால் பாண்டியா. 12வது ஓவரை வழக்கம்போல ரஸலுக்கு என நேர்ந்துவிட, அவர் 41 ரன்களில் மிரட்டத் தொடங்கியிருந்த ஹூடாவை அனுப்பிவைத்தார். அதன்பிறகு ரொம்பவே மந்தமாக ஆடத் தொடங்கியது லக்னோ. க்ருணால் 27 பந்துகளில் 25 ரன்கள் எனத் தத்தளித்துக் கொண்டிருக்க, 'சிரமம் வேண்டாம்' என அவரையும் அனுப்பிவைத்தார் ரஸல்.

அப்படி, இப்படி என ரன்களை எங்கெங்கோ கடன் வாங்கி 18 ஓவரில் 142/4 என வந்து நின்றது லக்னோ. டீ காக், தீபக் ஹூடா அடித்த அடிக்கு 200 சாத்தியம் என்றே எல்லாரும் நினைக்க, அவர்களின் பிறகு மிடில் ஆர்டரில் வண்டி செல்ஃப் எடுக்கவே இல்லை. 'கழுத்துக்குக் கீழயே வயிறுதான்போல' என நண்பர்களை நாம் கிண்டல் செய்வதுபோல, லக்னோ லைன்அப்பில் நேராக டாப் ஆர்டருக்குப் பிறகு கீழே லோயர் மிடில் ஆர்டர் பக்கம் வந்துவிடலாம் போல!

'ஸ்டாய்னிஸ் எப்பங்க அடிப்பீங்க?' என யாரோ அவரை உசுப்பிவிட, 'ஓ 19வது ஓவராச்சா' என நினைவுக்கு வந்தவராய் அதிரடி காட்டத் தொடங்கினார். ஷிவம் மவிக்கு அப்போது தெரியாது இந்த ஓவரை தன் வாழ்நாளில் மறக்க மாட்டோம் என! முதல் பந்தில் பேக்வெர்ட் ஸ்கொயர் லெக் பக்கம் சிக்ஸ் அடித்தார் ஸ்டாய்னிஸ். அடுத்த பந்தே ஸ்லோயர் யார்க்கர் இறக்க வேண்டுமென என ஷிவம் மவி முயல, அது லோ ஃபுல் டாஸாக மாற, இந்த முறை டீப் மிட்விக்கெட் பக்கம் சிக்ஸர் பறந்தது. அடுத்த பந்து ஸ்டாய்னிஸ் எதிர்பார்த்தது போலவே ஹாஃப்கட்டர் வர, மீண்டும் அதே மிட்விக்கெட் பக்கம் சிக்ஸர். அடுத்த பந்திலும் அதே ஏரியாவை அவர் டார்கெட் செய்ய, பந்து சற்றே பிளாட்டாக பயணம் செய்து ஸ்ரேயாஸின் கைகளில் சிக்கியது.

LSG v KKR

'அப்பாடா' என ஷிவம் மவி இரண்டு நிமிடங்கள் மட்டுமே மூச்சுவிட முடிந்தது. அடுத்து வந்த ஹோல்டர், 'ஸ்டாய்னிஸ் ஆரம்பித்ததை நான் முடிக்கிறேன்' என இரண்டு சிக்ஸர்களை அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள். அணியின் ஸ்கோர் 172/5 என சடாரென முன்னேற்றம் அடைந்தது. கடைசி ஓவரை சவுத்தி எடுத்துக்கொண்டு ஷாட்டடிக்க முடியாத பந்துகளையே வீசினார். ஹோல்டர் அவரின் துல்லியத்தால் திணறி தன் விக்கெட்டை இழக்க, படோனி கடைசி பந்தில் ரன் அவுட்டாகி வெளியேறினார். கொல்கத்தாவிற்கு டார்கெட் 177. தொடக்கத்தில் எதிர்பார்த்ததைவிட 20 ரன்கள் குறைவுதான் என்றாலும், கடைசியில் அவர்கள் இருந்த நிலைமைக்கு இது 20 ரன்கள் அதிகம் எனலாம்.

LSG v KKR

கொல்கத்தா சார்பாக பாபா இந்திரஜித் - ஆரோன் ஃபின்ச் என்ற அனுபவம் - இளமை காம்போ இறங்க, மோசின் கான் பந்துவீச வந்தார். பவர்பிளேவிலேயே தங்களின் வலிமையான இருப்பை நிலைநாட்டினால்தான் கொல்கத்தா சேஸ் செய்ய முடியும் என்ற நிலை. ஆனால் மோசின் கான், இந்திரஜித்தைத் திணறடித்தார். ஐந்தே பந்துகள் தாக்குப்பிடித்தவர், கடைசி பந்தில் புல் ஷாட்டில் டாப் எட்ஜாகி படோனியிடன் கேட்ச் கொடுத்து வெளியேறினார். என்ன முதல் ஓவரே ரத்த காயமா எனக் கொல்கத்தா பக்கம் சலசலத்தது. ஃபின்ச் ஃபார்மில் இல்லை என்பது அறிந்த விஷயம்தான் என்பதால் பவர்பிளேயில் ஸ்கோர் செய்ய ஸ்ரேயாஸ்தான் அதிரடி காட்டவேண்டும் என்ற வழக்கமான நிலை வந்தது. 'இதுக்கு பேசாம எல்லா மேட்ச்சும் ஸ்ரேயாஸே ஓப்பனிங் இறங்கலாம்' என்பதே கொல்கத்தா ரசிகர்களின் மைண்ட்வாய்ஸாக இருந்திருக்கும்.

அந்த பிரஷரினாலோ என்னவோ, ஸ்ரேயாஸ் 4வது ஓவரிலேயே சமீரா பந்தில் அதே படோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆவேஷ் கான் வீசிய முதல் ஓவரில் 10 ரன்கள் வந்தன. 'சரி, இன்றைக்கு அவரின் நாள் இல்லை போலயே' என நினைத்தால், அதன் பிறகு நடந்தவை மிரட்டல் ரகம். திக்கித் திணறி ஆடிக்கொண்டிருந்த ஃபின்ச், ஹோல்டர் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு நடையைக் கட்ட, ஆவேஷ் கான் அடுத்த ஓவரில் தன் மைன்ட்கேமை தொடங்கினார். நித்திஷ் ராணா களத்தில் நிற்க, முதல் நான்கு பந்துகளைத் தொடர்ந்து குட் லென்த்தில் வீசிவிட்டு, சடாரென ஒரு யார்க்கரை 5வது பந்தாக இறக்கினார். ஸ்டம்புகள் தெறிக்க, ராணா அவுட். ஸ்கோர் 7 ஓவர்களுக்கு 25/4 என்று அப்போதே கொல்கத்தாவிற்கு முடிவுரை எழுதியது.

LSG v KKR

ஆன்ட்ரே ரஸல் களத்திற்கு வந்தாலும் ஒரு ஃபினிஷரிடம், பின்ச் ஹிட்டரிடம் 150 ரன்கள் பக்கம் எதிர்பார்ப்பது எல்லாம் 'பாவம் மை சன்' என்றே தோன்றியது. ஆனால் ரஸல் விடவில்லை. 'வந்தது வந்தாச்சு. சண்டை செஞ்சு பாத்துருவோம்' என்பதாக தன் டீம்மேட் ஹோல்டரைப் போட்டு அடிக்கத் தொடங்கினார். 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் 25 ரன்கள். ஸ்லோயர் பந்துகளை நன்றாகவே கணித்து பேட்டை வீசினார். மறுபுறம் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் கம்பெனி கொடுப்பார் என நினைத்தால், அவர் 6 ரன்களில் வெளியேறினார். இப்போது ரஸலுக்கு ஆதரவாக மற்றொரு மேற்கிந்திய வீரரான சுனில் நரைன் வந்தார். ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி என அவர் அடித்துவைக்க, 98 பந்துகளில் 48 ரன்கள் தேவை என்று வந்து நின்றது. கையில் ஐந்து விக்கெட்கள். ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் கிடைத்து, கொஞ்சம் தாக்குப் பிடித்து மேட்சை சுவாரஸ்யமாக்குவார்கள் என நாம் நிமிர்ந்து உட்கார்ந்தால், ஆவேஷ் கானின் அடுத்த அட்டாக்கில் சிலர் ஆட்டம் கண்டனர்.

ரஸல் அவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்ப, அடுத்த பந்தை கிராஸ் சீமில் ஷார்ட் பாலாக வீசினார் ஆவேஷ் கான். அது டாப் எட்ஜாகி தேர்ட் மேனில் கேட்ச்சாக கொல்கத்தாவின் கடைசி நம்பிக்கையான ரஸல் 19 பந்துகளில் 45 ரன்கள் அடித்து வெளியேறினார். உள்ளே வந்த அனுகுல் ராய், நகர்ந்து வந்து பேட்டை வீச, காட் பிஹைன்ட் என அவுட் கொடுக்கப்பட்டது. ரிவ்யூ செய்ததில் பந்து கிளவுஸில் பட்டது உறுதியானது. ஆவேஷ் கானுக்கு 3வது விக்கெட். நரைன் ஒருபக்கம் தனி ஒருவனாக பவுண்டரிகளை அடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அவர் கொடுத்த கேட்சை மூன்று பேர் பிடிக்கச் சென்று பின்னர் ஸ்டாய்னிஸ் அதைப் பிடிக்காமல் விட்டது எல்லாம் துயரத்திலும் துயரம். 14 ஓவர் முடிவில் கொல்கத்தா 99/7 என மீள முடியாத படுகுழியில் படுத்துக் கிடந்தது.

LSG v KKR

ரன்கள் குறைவாக வேண்டும் என்னும்போது பேட்டர்கள் அதிரடியாக ஆடி சீக்கிரம் ஆட்டத்தை முடிப்பதுபோல, இங்கே பௌலர் ஹோல்டர் மூன்று விக்கெட்களை வேகமாக எடுத்து ஆட்டத்தை முடிக்க வந்தார். அதற்காக அவர் எடுத்துக்கொண்டது மூன்றே பந்துகள்! முதல் பந்தில் 22 ரன்கள் அடித்திருந்த நரைன் க்ருணாலிடம் கேட்ச் கொடுத்து விடைபெற்றார். அடுத்த பந்தில் சவுத்தி புல் ஷாட்டுக்கு முயன்று ஆவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஐபிஎல்-லில் அடுத்த ஹாட்ரிக் போல என அனைவரும் நகத்தைக் கடிக்க, விக்கெட்டும் விழுந்தது. ஆனால், அது ஹோல்டர் கணக்கில் இல்லை. ரன் அவுட்! ஹர்ஷித் ராணா அடித்த பந்தில் இரண்டு ரன்கள் ஓடிவிட்டு, மூன்றாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு பேட்டர்கள் ஓட, 'ஓ ஓடியே ஜெயிக்கலாம்ன்னு பிளானா' என்பதுபோல, படோனி - ஹோல்டர் ஹர்ஷித்தை ரன் அவுட் செய்து அழகு பார்த்தனர்.

LSG v KKR
லக்னோ அடித்த ஸ்கோர் 10-15 ரன்கள் அதிகம், ஆனால் சேஸ் செய்யக்கூடிய இலக்கே என அனைவரும் நினைக்க, கொல்கத்தாவோ 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. அதுவும் 15வது ஓவரிலேயே! இதனால் அவர்களின் நெட் ரன்ரேட்டை பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. இது அவர்களின் பிளே ஆஃப் கனவுக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. 19 ரன்களே கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை சரித்த ஆவேஷ் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். லக்னோ ஆன் டாப்!


source https://sports.vikatan.com/ipl/ipl-2022-avesh-khan-stuns-kolkata-with-his-class-spell-and-lucknow-secures-the-top-position

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக