இந்த ஐபிஎல் சீசனின் ஒவ்வொரு ஆட்டமும் முடிய முடிய சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போகிறது. ஆட்டத்தில் அனல் பறக்கிறதோ இல்லையோ, புள்ளிப் பட்டியலில் முதல் நான்கைத் தவிர்த்து கீழே அணிகளின் இடங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இது கூடிய சீக்கிரமே டாப் 4 இடங்களிலும் பிரதிபலித்தால் படுத்துக் கிடக்கும் ஐபிஎல்லின் டிஆர்பி எகிறலாம். புதிதாக உள்ளே நுழைந்தாலும் தற்போதைய நிலவரப்படி, இந்த சீசனின் டாப் 2 இடங்களில் குஜராத்தும், லக்னோவும்தான் இருக்கின்றன. டாப்பில் இருக்கும் குஜராத் ஒவ்வொரு மேட்சை வெல்லும்போதும் எதோ ஒரு மேட்ச் வின்னர் புதிதாக உருவாகிறார். அப்படி பலம் வாய்ந்த டேபிள் டாப்பரும், டாப் 4-க்குள் ஒரு RAC டிக்கெட்டையாவது போட்டுவிடத் துடிக்கும் பஞ்சாப்பும் நேற்று மோதிக்கொண்டன.
எல்லா அணிகளும் வெற்றி பெறுவதற்கு என ஒரு பார்முலா வைத்திருந்தால் பஞ்சாப் அணி மட்டும் தோற்பதற்கு என ஒரு பார்முலா வைத்திருக்கும். ஒரு மேட்ச் ஜெயித்துவிட்டால் இரண்டு மேட்ச் தோற்பது, பின் மீண்டும் போராடி ஜெயிப்பது என அவர்கள் இந்த சீசனில் கடந்து வந்த பாதையைப் பார்த்தால் டிராபிக் சிக்னல் போல சிவப்பும் பச்சையும் மாறி மாறி இருக்கும். எப்படியும் இதுவும் ஒரு ஒருதலைபட்சமான ஆட்டமாகி விடுமோ என அனைவரும் எதிர்பார்க்க அப்படித்தான் ஆனது. ஆனால், இந்த முறை ஆப்பு குஜராத்திற்கு! டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா வித்தியாசமாக பேட்டிங் என்றார். 'சரி நீங்க டேபிள் டாப்பர், நீங்க என்ன வேணா ரிஸ்க் எடுக்கலாம். நாங்க அப்படியா?' என்பதே பஞ்சாப்பின் மைண்ட்வாய்ஸாக இருந்திருக்கும். இரண்டு அணிகளிலும் எந்த மாற்றங்களும் இல்லை.
பஞ்சாப்பின் சந்தீப் சர்மா நியூபாலை கையில் எடுக்க, சாஹாவும், கில்லும் குஜராத்துக்காகக் களமிறங்கினர். சாஹா முதல் ஓவரில் ஒரு பவுண்டரி, கில் அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள், மீண்டும் சாஹா ஒரு பவுண்டரி என மெல்ல கியரைப் போட்டு வண்டியை நகர்த்த, ரிஷி தவான் ஃப்ரண்ட் டயரின் காற்றைப் பிடுங்கினார். கில் அடித்த பந்தை அவர் பிடிக்க, பேட்டர்கள் இருவரும் ரன் ஓட எத்தனிக்க, ஒரு ஸ்டம்ப்பே கண்ணுக்குத் தெரிந்தாலும் கில்லியாக மாறி அதைத் துல்லியமாக அடித்தார் தவான். ஸ்டம்ப்பின் லைட்கள் பளீரென எறிய, கில் தன் பாதையில் சந்தீப் சர்மா வந்துவிட்டதாகக் கோபித்துக் கொண்டார். ஆனால், அது வேண்டுமென நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. கில் ரன் அவுட்!
கில் சென்றதும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என ஆசைக்கு அடித்துவிட்டு, 21 ரன்களில் ரபாடா ஓவரில் மயங்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சாஹா. ரபாடாவுக்குக் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ் சாஹாவின் இன்னிங்ஸுக்கு முடிவுரை எழுதியது. ஆனாலும் பவர்பிளே முடிவில் 42/2 என கொஞ்சம் கௌரவமான நிலையிலேயே குஜராத் இருந்தது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் வீசிய அந்த 6வது ஓவர், கிளாஸான பௌலிங் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் எனப் பாடம் எடுத்தது. சாய் சுதர்சனும், ஹர்திக் பாண்டியாவும் களத்திலிருந்தனர்.
அடுத்த ஓவரை வீச வந்தார் ரிஷி தவான். வழக்கம்போல, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூக்கைக் காத்துக்கொள்ள மாஸ்க் அணிந்து வந்தார். இரண்டாவது பந்தை அவர் லெந்த் பாலாக வீச, ஹர்திக் கவர் டிரைவ் ஆட முற்பட்டு, எட்ஜாகி கீப்பரிடம் பந்தை ஒப்படைத்தார். அப்போதே குஜராத் ரசிகர்களுக்குப் புரிந்திருக்கும் 'இன்னைக்கு சிரமம்தான் போலயே!'. மில்லர் களத்துக்கு வந்தும் குஜராத்துக்கு நம்பிக்கை வரவில்லை. ஏனென்றால் மில்லர் எப்போது அடிப்பார் என்பது அவருக்கே தெரியாது. இவ்வளவு ஏன், பல Permutation and Combination போட்டு ஆராய்ந்தாலும் எந்தக் கணிதக் கோட்பாட்டாலும் அந்த ரகசியத்தை மட்டும் கண்டறியவே முடியாது. சாய் சுதர்சனும், மில்லரும் டெஸ்ட் மேட்சே தோற்கும்படி, 'பொறுமையே பெருமை' என அனைவரையுமே சோதித்தனர்.
9வது ஓவரை வீச வந்தார் ராகுல் சஹார். 2வது பந்தில் 2 ரன்களை ஓட பேட்டர்கள் இருவரும் முயல, டைட்டான ரன் அவுட் வாய்ப்பு ஒன்று வந்தது. ஆனால், சஹார் ஸ்டம்பின் பின்னால் நிற்கவில்லை. பந்தை கலெக்ட் செய்தபோது அவர் கையிலும் காயம்பட்டது. பின்னர், அந்த ஓவரின் மூன்று பந்துகளை லியாம் லிவிங்ஸ்டோன் வந்து வீசினார். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் 62/3. தொடர்ந்து 12வது ஓவரை லிவிங்ஸ்டோன் வீச வரும்போது குஜராத் பவுண்டரி என்ற ஒன்றையே மறந்திருந்தது. அவர்கள் கடைசியாக அடித்த பவுண்டரி எப்போது என்று பார்ப்பது ஏதோ வரலாற்று ஆவணங்களைப் புரட்டுவதுபோல இருந்தது. ஆம், 44 பந்துகளுக்கு முன்னால்! போதாக்குறைக்கு மில்லரும் அந்த ஓவரில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஃபினிஷரான ராகுல் திவேதியா 12வது ஓவரிலேயே களமிறங்க வேண்டியதாயிற்று.
இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் சாய் சுதர்சன் அசராமல் இன்னிங்ஸை பில்ட் பண்ணிக்கொண்டு இருந்தார். அவர் ஆடியது 100 ஸ்ட்ரைக்ரேட்டுக்கும் குறைவான வேகத்தில்தான் என்றாலும், அதை ஆடக்கூட குஜராத்தில் எவரும் நிற்கவில்லை என்பதுதான் சோகமே! ஓவருக்கு ஒரு பவுண்டரி, அப்பறம் ஒரு 2, ஒரு சிங்கிள் என்பதுதான் அவரின் பார்முலாவாக இருந்தது 17வது ஓவர் வரை இந்த ஜோடி நீடித்தாலும் ரன்ரேட்டில் சொல்லிக்கொள்ளும்படி மாற்றங்கள் எதுவும் இல்லை. கூடுதல் சோகமாக 17வது ஓவர், 2வது பந்தில் திவேதியா அவுட். ஷார்டர் பவுண்டரி பக்கம் அடிக்க அவர் முற்பட, அது ஷார்ட் தேர்ட் மேனிடம் கேட்ச்சானது. ரபாடாவிற்கு இரண்டாவது விக்கெட்.
அடுத்து ரஷித் கான் உள்ளே வர, இனிமே ஆட்டம் பொறி பறக்கும் எனக் குஜராத் ரசிகர்கள் நம்பினர். ஆனால், 'எல்லா மேட்சும் அடிச்சா அப்பறம் நிரந்தர ஆல்ரவுண்டராக்கி, ரொம்ப எதிர்பார்க்க ஸ்டார்ட் பண்ணிடுவாங்க' என ரஷித் நினைத்தாரோ என்னவோ 'சர்ப்ரைஸ்' என கீப்பரிடம் பந்தைத் தட்டிவிட்டு நடையைக் கட்டினார். அந்த ஓவரில் ரபாடா ஹாட்ரிக் எடுக்கவில்லை என்பதுதான் குஜராத்துக்கு ஒரே ஆறுதல்! 4 ஓவர்களில் 33 ரன்கள் 4 விக்கெட்டுகள் என தன் ஸ்பெல்லை முடித்தார் ரபாடா.
பின்னர் அர்ஷ்தீப்பின் பந்தில் சிக்ஸ் அடித்து சாய் சுதர்சன் ஐபிஎல்லில் தன் முதல் அரை சதத்தை அடிக்க, அதைத் தவிர குஜராத் இன்னிங்ஸில் சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே இல்லை. இந்த ஐபிஎல்லில் அர்ஷ்தீப்பின் பந்தில் அடிக்கப்படும் 5வது சிக்ஸர்தான் அது என்பது ஆச்சரிய தகவல். 143/8 என தங்களின் 20 அவர்களைக் குஜராத் முடிக்க, பஞ்சாப் நிச்சயம் வென்றுவிடும் என அதிசயமாக பஞ்சாப் ரசிகர்களுக்கே நம்பிக்கை பிறந்தது. `ஆனா, ஆடுறது பஞ்சாப்ம்மா' என ஒரு சிறு பயமும் அவர்களுக்குள் நிச்சயம் இருந்திருக்கும்.
பேர்ஸ்டோ, ஷிகர் தவான் பேட்டர்களாக இறங்க, வழக்கம்போல ஷமி நியூபாலை எடுத்துக்கொண்டார். முதல் ஓவரில் இரண்டு ரன்கள். அடுத்து பிரதீப் சங்க்வான் ஓவரில் புல் ஃபார்மில் இருக்கும் தவான் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். இந்தப் பக்கம் ஷமி வீசிய நான்காவது ஸ்டம்ப் லைன் பந்தை விண்வெளிக்கு அனுப்பினார் பேர்ஸ்டோ. ஆனால், கீழே பேராசூட் மாட்டிக்கொண்டு பவுண்டரி லைனை ஒட்டி ரொம்ப தூரம் ஓடிக்கொண்டிருந்தார் பிரதீப் சங்க்வான். அட்டகாசமாக அவர் கேட்சையும் பிடித்துவிட, பேர்ஸ்டோ வீழ்ந்தது குஜராத்துக்குக் கொஞ்சம் நம்பிக்கையை வரவைத்தது. ஆனால், 'அப்படியெல்லாம் நடந்துவிட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை' என்று 'பேரன்பு' படத்தின் வாய்ஸ்ஓவர் அந்த ஓவரிலிருந்தே ஒலிக்கத் தொடங்கியது.
புதிதாக உள்ளே வந்த ராஜபக்சே அதே ஓவரில் ஏதோ விட்ட ஆட்டத்தைத் தொடர்வதைப் போல இரண்டு பவுண்டரிகளை அடிக்க, அடுத்த அல்சாரி ஜோசப் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என தவான் பவர்பிளே ஓவர்களை தங்கள் அணிக்கு பிளஸ்ஸாக மாற்ற முயன்றார். 6 ஓவர்கள் முடிவில் 43/1 என இருந்தது பஞ்சாப். 'உச்சபட்ச பார்மில் இருக்கும் இருவர்... பவர்பிளேவிலும் அடிக்கலாம், பவர்பிளே இல்லாமலும் அடிக்கலாம்' என்பதுபோல 7வது ஓவரில் மொத்தம் மூன்று பவுண்டரிகள் வந்தன. 'இது வேலைக்கு ஆகாது' என பேட்டிங்கில் சொதப்பி கோபமாக இருக்கும் ரஷித் கானை வரவைத்தார் ஹர்திக். அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள். அவர் வீசிய அடுத்த ஓவரிலும் 7 ரன்கள்தான். மற்றொரு பக்கம் எக்ஸ்ட்ராஸ் சென்றாலும் டைட்டாகவே ஓவர் வீசினார் ஜோசப். பஞ்சாப் பக்கம் பிரஷர் ஏறத் தொடங்க, ஹர்திக் அப்போது ஆசை ஆசையாகக் கொண்டு வந்த பௌலிங் மாற்றமே ஆட்டத்தையும் மாற்றியது.
லோகி ஃபெர்குசன் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து தன் அரைசதத்தைக் கடந்தார் தவான். அவர் ஆடுவது கிட்டத்தட்ட ஒருநாள் போட்டிக்கான ஸ்ட்ரைக் ரேட்டுடன்தான் என்றாலும் குஜராத் குறித்துக் கொடுத்த டார்கெட்டுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. லோகி அடுத்து ஒரு சிக்ஸரை ராஜபக்சேவுக்கு விட்டுக்கொடுத்து, அந்த ஓவரின் கடைசி பந்தை ஒரு ஸ்லோ கட்டராக மேஜிக்கல் டெலிவரியாக வீசினார். பந்து மிடில் அண்டு லெக் ஸ்டம்புக்கு முன்பாக ராஜபக்சேவின் பேடில் பட, அம்பயர் எல்பிடபிள்யூ கொடுக்கும் முன்னரே பெவிலியன் நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தார் ராஜபக்சே. அத்தனை துல்லியமான எல்பிடபிள்யூ அது. 28 பந்துகளில் 40 ரன்கள் என ராஜபக்சே ஆடியதும் ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்தான்.
இப்போது களத்தில் தவானும், லிவிங்ஸ்டோனும். 12 ஓவர் முடிவில் பஞ்சாப் 97/2. தேவைப்படுவது 48 பந்துகளில் 47 ரன்கள் எனச் சர்வசாதாரணமான ஈக்குவேஷன்தான். பஞ்சாப் செய்யவேண்டியது எல்லாம் விக்கெட்டுகளை இனி இழக்காமல் இருப்பதுதான். அதுவே அவர்களை வெற்றியை நோக்கி இழுத்துவிடும். மூன்று ஓவர்கள் இந்த ஜோடி பொறுமை காக்க, இப்போது வெற்றிக்குத் தேவை 27 ரன்கள். கையில் 5 ஓவர்கள் இருக்கின்றன. ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆடும்போது வீட்டிலிருந்து அழைப்பு வருகிறது, அல்லது சூரியன் மறையத் தொடங்குகிறது என்றால், ஊரில் திறமையாக ஹிட்டடிக்கும் ஒரு அண்ணன், வேக வேகமாக வந்து பவுண்டரிகள் அடித்து மேட்ச்சை முடிப்பதுபோல லிவிங்ஸ்டோன் செயல்பட்டார்.
`5 ஓவர்லாம் நிக்க முடியாது பங்கு. நெட் ரன்ரேட் பின்னாடி தேவைப்படும்' எனத் தவானிடம் சொல்லிவிட்டு டாப் கியருக்கு மாறினார் அவர். `16வது ஓவர் பௌலிங் போட வர்றது ஷமி பாஸ்' என பஞ்சாப் ரசிகர்களே பயந்தாலும் எடுத்த முடிவைக் கச்சிதமாக நிகழ்த்திக் காட்டினார் லிவிங்ஸ்டோன். ஹாட்ரிக் சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, 2 ரன்கள், பின்னர் மீண்டும் ஒரு பவுண்டரி என ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்து `வாங்கத் தூங்கப் போகலாம்' என நடக்கத் தொடங்கினார்.
குஜராத் என்ன நடந்தது என்று புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே எல்லாம் நடந்துவிட்டது. முதல் பந்து 117 மீட்டர் சிக்ஸ். விட்டால் ரூஃபையே கிளியர் செய்திருக்கும்போல! இரண்டாவது பந்து 96 மீட்டர் சிக்ஸ். அடுத்து மீண்டும் ஒரு சிக்ஸ். இந்த முறை ரிவர்ஸாக 69 மீட்டர் சிக்ஸ். டாப் எட்ஜ்தான் என்றாலும் வரப்போவது என்னமோ 6 ரன்கள்தானே! அப்போதே எல்லாம் முடிந்துவிட்டது. நியாயமாக குஜராத், வெற்றியாளர்களுடன் அப்போதே கைகளைக் குலுக்கத் தொடங்கியிருக்கலாம். வின்னிங் ஷாட்டை ஒரு பவுண்டரி அடித்துச் சாதித்தார் லிவிங்ஸ்டோன். அவர் அடித்த 30 ரன்கள் வெறும் பத்தே பந்துகளில் வந்திருந்தன.
4 விக்கெட்டுகளை எடுத்த ரபாடா ஆட்டநாயகன் விருதை வென்றார். பெங்களூரின் 5வது இடத்தை பஞ்சாப் இப்போது பிடித்துக்கொண்டிருக்கிறது. 10 போட்டிகள் ஆடியிருக்கும் அவர்கள் 5 வெற்றிகள், 5 தோல்விகள் என தங்களின் ரசிகர்கள், ஹேட்டர்கள் என இருவரையுமே திருப்திப்படுத்தி இருக்கின்றனர். இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் எல்லா அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கும். குறிப்பாக மும்பை உடனான ஆட்டங்கள். ஏனென்றால் `நான் போல, என்கூட பந்தயம் வெக்கற எவனும் போகக்கூடாது' என முடிந்தவரை எல்லோரையும் வீட்டுக்கு அனுப்ப மும்பை முயலும். உஷாரய்யா... உஷாரு!
source https://sports.vikatan.com/ipl/ipl-2022-punjab-kings-surprises-gujarat-titans-with-their-all-round-performance
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக