தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையப் போகிறது. இப்போது அமைந்திருக்கும் 16-வது சட்டப்பேரவையானது, கடந்த 15-வது சட்டப் பேரவையைப்போல் அல்லாமல், தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ஜ.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சி பாரதம், கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட 13 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்குபெறும் கலர்ஃபுல் சட்டமன்றமாகக் காட்சியளிக்கிறது. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக 66 உறுப்பினர்களுடன் அதிமுக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
அதிமுகவைத் தவிர்த்து, பாஜக, பாமக, ஆளும் கட்சியின் கூட்டணியில் இருந்தாலும் அரசில் பங்கேற்காத காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் எதிர்க்கட்சி அந்தஸ்தில்தான் இருக்கின்றன. இதைத்தவிர்த்து சட்டமன்றத்தில் பங்குபெறாத டி.டி.வி.தினகரனின் அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்தநிலையில், கடந்த ஓராண்டில் தமிழக எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசினோம்.
தராசு ஷ்யாம்
``சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் சமீபகால நடவடிக்கைகள் குறிப்பாக கடந்த ஒரு வார காலச் செயல்பாடுகள் சரியாக இருக்கின்றன. ஆனால், வெளிநடப்பு அரசியல் மட்டுமே செய்வது அவ்வளவு சிறப்பான செயல்பாடு இல்லை. அதனால், மக்கள் பிரச்னைகளை அவையில் விவாதிக்க முடியாமலே போய்விடும். கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்புச் செய்வது இந்த சட்டமன்றத்தின் சிறப்பு. மக்களும் அவையின் நடவடிக்கைகளைப் பார்த்து வருகிறார்கள். தங்கள் எம்.எல்.ஏ, தங்களின் பிரச்னைகளை சட்டமன்றத்தில் பேசவேண்டும் என்பதே ஒவ்வொரு தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், இவர்கள் தொடர்ந்து வெளிநடப்பு மட்டுமே செய்துகொண்டிருந்தால், அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிருப்தியடைத்தான் செய்வார்கள்.
அந்தவகையில் அதிமுக தவறு செய்கிறது என்றே நான் நினைக்கிறேன். அதேவேளை, பாஜகவினர் சட்டமன்றத்தில் நான்கு உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், சட்டமன்றத்துக்கு வெளியேயும் அவர்கள் எதிர்க்கட்சியாக செயல்படுவதால், ஒட்டுமொத்தமாக அவர்களின் பிம்பம் உயரத்தான் செய்திருக்கிறது.
பாமக பாதி ஆளும் கட்சியாகவும் பாதி எதிர்க்கட்சியாகவும் செயல்படுகிறது. தவிர, திமுகவின் கூட்டணிக் கட்சியினரும் எதிர்க்கட்சி அந்தஸ்தில்தான் வருவார்கள். ஆனால், அவர்களுக்குப் பெரிய ரோலே இல்லாமல் போய்விட்டது. சட்டமன்றத்துக்கு வெளியே டி.டி.வி.தினகரன் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். அந்தவகையில், அமமுகவின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில்தான் இருக்கிறது. அல்டிமேட்டாக தேர்தல் வெற்றியை வைத்துதான் நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும். அந்தவகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கணிசமான வெற்றியையும் பதிவு செய்திருக்கிறது. ஆனால், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் அதிலும் வெற்றியும் பெறவில்லை, அவர்களின் வாக்குவங்கியும் குறைந்துவிட்டது. அதனால் அவர்களுக்கான ரோல் என்பது பெரியளவில் இல்லை என்பதே எதார்த்தம்''
ராதாகிருஷ்ணன்
``என்னைப் பொறுத்தளவில், ஆளும் கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளான, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள்தான் சிறப்பாக இருக்கின்றன. ஆனால், மீடியாவின்மூலம் எதிர்க்கட்சியாக நமக்கு தோற்றமளிப்பது பாஜகதான். ஆனால், பாஜகவினர் கடந்த ஓராண்டுகளாக, கோவில் இடிப்பு, பூஜை இல்லை, பூசாரிகள் இல்லை உள்ளிட்ட மக்கள் நலன் சாராத விஷயங்களைத்தான் கையிலெடுத்தார்கள். இன்னும் சொல்லப்போனால், மக்களைப் பிளவுபடுத்துகிற அரசியலைத்தான் செய்தார்கள்.
அதேபோல, பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக தங்களின் கடமையைச் செய்யவில்லை என்றே நான் பார்க்கிறேன். அமைச்சர்கள் மீது ரெய்டுக்கு வந்த நேரங்களைத்தவிர தெருவில் இறங்கி அவர்கள் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. மக்கள் பிரச்னைகளுக்காக பெரியளவில் குரல்கொடுக்கவில்லை. பல இடங்களில் பாஜகவுக்கு வழிவிடுகிற வேலையைத்தான் அதிமுகவினர் செய்திருக்கின்றனர். ஆனால், 66 எம்.எல்.ஏக்களை உடைய கட்சி, நான்கு எம்.எல்.ஏக்கள் கொண்ட கட்சி வழிவிடும் வேலை எல்லாம் நடைமுறையில் ஒத்துவராது.
அதேபோல, அதிமுகவுக்கு 50 லட்சம் தொண்டர்களாவது தமிழகத்தில் இன்னமும் இருப்பார்கள். அதனால், பாஜகவின் தொண்டர் பலத்தை அதனுடன் ஒப்பிடவே முடியாது. ஆனால், செயற்கைத்தனமாக பாஜக தங்களை எதிர்க்கட்சியாக முன்னிறுத்திக்கொள்ளப் பார்க்கிறது. அதிமுக அதற்கான இடத்தை கொடுப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம். நிச்சயமாக அவர்கள் மாறவேண்டும், எதிர்க்கட்சியாக சிறப்பாகச் செயல்படவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும். நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை தேர்தலுக்கான கட்சிகளாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. கீழ்மட்ட அளவில் பெரிய போராட்டங்கள் எதையும் அவர்கள் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை.
தவிர, மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசாங்கத்தின் தனித்துவமாக நான் பார்ப்பது, ஆளும் கட்சியின் தவறுகளை அவர்களே முன்வந்து திருத்திக்கொள்கிறார்கள். பல இடங்களில் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லாத சூழல் ஏற்படுகிறது. ஆனால், இந்த அரசுக்கு கவர்னர்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். தன்னிச்சையாகப் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் பேசுவது பேசுபொருளாக, விவாதமாக மாறுகிறது.''
source https://www.vikatan.com/government-and-politics/politics/how-did-the-opposition-function-during-the-one-year-dmk-rule
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக