இல்லம் தேடி கல்வி:
கொரோனா பேரிடர் காரணமாகப் பள்ளி மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டது. பேரிடருக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், மாணவர்களின் இல்லம் இருக்கும் பகுதிகளுக்கே சென்று அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். பள்ளி முடிந்த பிறகு மாலை 5 மணி முதல் ஏழு மணிவரை மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு மிகாமல் வகுப்பு நடத்தப்படும்.
20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர் என்ற விகிதத்தில், 1.7 லட்சம் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தனியார்ப் பள்ளி மாணவர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தன்னார்வலர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகின்றது.
மக்களைத் தேடி மருத்துவம்:
மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 05-ம் தேதி கிருஷ்ணகிரியில் தொடங்கிவைத்தார். அரசின் மருத்துவ சேவைகள் பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று வழங்குவது இந்த திட்டத்தின் பிரதான நோக்கம். இந்த திட்டத்தில், தொற்று இல்லாத நோய்களைக் கட்டுப்படுத்துவது பிரதான திட்டமாகும். மேலும், சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் போன்ற பலரின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக இந்த திட்டம் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் ஆரம்பிக்கப்பட்டு ஒருகோடி பேரைச் சென்றடையும் வகையில் விரிவாக்கப்படும். மேலும், ஆண்டுக்கு 257 கோடி ரூபாய் செலவின் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக, நடமாடும் மருத்துவ சேவை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில், ஒரு நடமாடும் மருத்துவ வாகனத்தில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஊழியர் மற்றும் வாகன ஓட்டுநர் இடம்பெறுவார்கள். இந்த வாகனங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று அங்கு மருத்துவ முகாம்களை நடத்தும். இதன் மூலம், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிராமங்களுக்கு மருத்துவ சேவை கிடைப்பது உறுதிசெய்யப்படும். முதற்கட்டமாக 380-க்கும் மேற்பட்ட மருத்துவ வாகனங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்னுயிர் காப்போம் திட்டம்:
சாலை பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளைக் குறைப்பது தொடர்பாகவும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. பல்வேறு துறை சார் வல்லுநர்களை அடக்கிய சாலைப் பாதுகாப்பு ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கான செலவை அரசு மேற்கொள்ளும் வகையில், ``இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48" என்ற திட்டத்தின் மூலம், முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம், விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 81 வகையான தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறை செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக, சாலையோரங்களில் உள்ள தனியார், அரசுத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று மொத்தம் 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலமாக, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இருப்பவர்கள் மட்டுமின்றி, இல்லாதவர்களும், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என்று அனைவர்க்கும் வருமான வரம்பு எதுவும் கணக்கில் கொள்ளாமல், தமிழக எல்லைப் பகுதிக்குள் நடக்கும் சாலை விபத்துகளில் சிக்குவோருக்கு முதல் 48 மணி நேரத்துக்குக் கட்டணமில்லாது மருத்துவச் சிகிச்சை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் :
அரசுப் பள்ளிகளில் 6-12-ம் வகுப்பு வரை கல்வி கற்ற மாணவிகளில், உயர் கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்', `மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என்று மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் உயர்கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் கல்லூரியில் சேர்ந்து அவர்களின் கல்வி காலம் முடியும் வரை அவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு என்று இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை அரசு மாதம் 1,000 ரூபாய் வழங்கும். ஏற்கனவே அந்த மாணவிகள் மற்ற கல்வி உதவித்தொகை பெற்றுவந்தாலும், இந்த உதவித்தொகையும் வழங்கப்படும். இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு ஆறு லட்சம் மாணவிகள் பயனடைய வாய்ப்புள்ளது. மேலும், இந்த திட்டத்துக்காக 698 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து பயணம்:
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பெற்றதுமே, நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து மகளிருக்கும் எந்த கட்டணமும் இல்லாது பயணம் செய்யலாம். கடந்தாண்டு மே 8-ம் தேதி முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அறிவிப்பும் வெளியானது.
நான் முதல்வன்:
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறம் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டும் விதமாக ‘நான் முதல்வன்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். பல்வேறு மொழிகளும் கற்றுத்தரப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அவர்களுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்:
தேர்தல் பிரசாரத்தின் போது, `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்த ஸ்டாலின், மக்களின் தீர்க்கப்படாத பிரச்னை எதுவாக இருந்தாலும், அதுகுறித்து மனு அளித்தால் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற 100 நாள்களில் அந்த பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்' என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், முதல்வர் பொறுப்புக்கு வந்ததுமே `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. அந்த துறையின் சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். `முதலமைச்சரின் தனிப்பிரிவு’, `முதலமைச்சரின் உதவி மையம்’, `ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு’, `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ ஆகிய துறைகள் அனைத்தும் `முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறையாக மாற்றப்பட்டது.
நம் பள்ளி நம் பெருமை:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்யும் `நம் பள்ளி நம் பெருமை' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, அரசுப் பள்ளிகளில் செயல்பட்டுவரும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இதன் மூலமாக, 37,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக புதிய மேலாண்மை குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஓராண்டு ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் உங்களுக்குப் பிடித்த திட்டம் என்ன என்பதை கமெண்ட் செய்யுங்கள்...!
source https://www.vikatan.com/government-and-politics/politics/some-of-the-schemes-in-cm-stalin-government-has-brought-in-the-last-one-year
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக