தற்போதைய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. எனவே, புதிய குடியரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலும் நடைபெறவிருக்கிறது.
2017-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு, வெற்றிபெற்றவர் ராம்நாத் கோவிந்த். இரண்டாவது முறையாக அவருக்கு பா.ஜ.க வாய்ப்பு கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
காரணம், `75 வயதைக் கடந்தவர்களுக்கு அரசுப் பதவிகள் கிடையாது’ என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதனால், 75 வயதைக் கடந்துவிட்ட ராம்நாத் கோவிந்தை மீண்டும் நிறுத்த வாய்ப்பு இருக்காது. எனவே, புதிய ஒருவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி தன் வேட்பாளராக நிறுத்தும். அந்த வகையில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட ஏராளமான பெயர்கள் கிளப்பிவிடப்பட்டன. ஆனால், தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கய்ய நாயுடு வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
எதிர்க் கட்சிகளைப் பொறுத்தளவில், பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான திட்டத்துடன் காய்களை நகர்த்திவருகின்றன. முதலில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார் பெயர் அடிபட்டது.
சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். அவர்களை சந்தித்த கையோடு சரத் பவாரையும் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். அதையடுத்துத்தான், குடியரசுத்தலைவர் தேர்தலில் சரத் பவார் வேட்பாளராக நிறுத்தப்படவிருக்கிறார் என்று செய்திகள் பரபரத்தன.
ஆனால், அதில் தமக்கு விருப்பமில்லை சரத் பவார் கூறிவிட்டார். பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், ஆளும் கட்சியின் பலத்தை மீறி தம்மால் ஜெயிக்க முடியுமா என்று அவர் யோசித்திருக்கலாம்.
2017-ல் நடைபெற்ற குடியரசுத்தலைவர் தேர்தலில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரான ராம்நாத் கோவிந்தை பா.ஜ.க நிறுத்தியதால், மக்களவை முன்னாள் சபாநாயகரான பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மீராகுமாரை காங்கிரஸ் நிறுத்தியது. 65.65 சதவிகித வாக்குகளுடன் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார். மீரா குமார், 34.35 சதவிகித வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார்.
இந்த முறை, ஒருவேளை வெங்கய்ய நாயுடு குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், எதிர்க் கட்சிகளுக்கு அது மிகப்பெரிய சவலாக இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தலில் பா.ஜ.க-வின் பலம் சற்று குறைந்திருந்தாலும், வெங்கய்ய நாயுடுவை வேட்பாளராக நிறுத்தினால், அவர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.
இத்தகைய சூழலில், வெங்கய்ய நாயுடுவுக்கு டஃப் கொடுக்கக்கூடிய அளவுக்கு செல்வாக்கு மிகுந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கு இருக்கிறது. வேட்பாளராக ஆவதற்கு சரத் பவார் ஒப்புக்கொண்டிருந்தால், பலமான போட்டியை எதிர்க் கட்சிகளால் கொடுப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது முடிவுசெய்யப்பட்ட பிறகுதான், இத்தேர்தலில் எதிர்க் கட்சிகள் எந்தளவுக்கு போட்டியைக் கொடுக்கும் என்பது தெரியவரும்.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வாக்களித்துத்தான் குடியரசுத்தலைவரைத் தேர்வு செய்வார்கள். குடியரசுத்தலைவர் தேர்தலில், ஒவ்வொரு எம்.பி-யின், எம்.எல்.ஏ-வின் வாக்குகளுக்கும் ஒரு மதிப்பு உண்டு. ஒரு எம்.பி-யின் வாக்கு மதிப்பு 708. எம்.எல்.ஏ-வின் வாக்கு மதிப்பைப் பொறுத்தவரை, ஒரு மாநிலத்தின் மக்கள்தொகை மற்றும் அந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பு மாறுபடும். இந்தியாவின் ஒட்டுமொத்த எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 4,896.
எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட எலெக்டொரல் காலேஜின், மொத்த வாக்குகளின் மதிப்பு 10,98,903. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, நாடாளுமன்ற மக்களவையில் 326 எம்.பி-க்களும் மாநிலங்களவையில் 116 எம்.பி-க்களும் என மொத்தம் 442 எம்.பி-க்கள் இருக்கிறார்கள். எலெக்டொரல் காலேஜில் பா.ஜ.க 4,65,797 வாக்கு மதிப்புகளையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 71,329 வாக்கு மதிப்புகளையும் கொண்டுள்ளன. மொத்தத்தில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு மதிப்பு 537,126. இதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால், இன்னும் 9,194 வாக்குகள் தேவை என்று சொல்லப்படுகிறது.
நடைபெறவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஒடிஷாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. இவர்கள் இருவருமே மத்திய பா.ஜ.க அரசை பகைத்துக்கொள்ள தயாராக இல்லை என்றே தெரிகிறது. எனவே, பொது வேட்பாளரை நிறுத்தினால், ஜெகன் மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் போன்றவர்களின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்ற எதிர்க் கட்சிகளின் வியூகம் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கிறது என்பதே தற்போதைய நிலை!.
source https://www.vikatan.com/government-and-politics/politics/what-is-the-strategy-of-opposition-parties-in-presidential-election
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக