``நான் வெச்சிருந்த 4 ஏக்கர் நிலமும், இந்த ONGC-ஆல பாழாப்போயிட்டு. இப்போ எங்க குடும்பமே பிச்சைதான் எடுக்கணும்..!! கொஞ்சம் கருண காட்டுங்க!!" என்று கதறி அழுத அந்த விவசாயியின் குரல், அங்கு கூடியிருந்த அரசு அதிகாரிகளின் மனசாட்சியை உலுக்கிவிட்டது என்றே சொல்லலாம்.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது மேலப்பனையூர் கிராமம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்பவர்கள் அனைவரும் விவசாயத்தையே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டிருக்கிறார்கள். மேலும், அந்த கிராமத்தில் சுமார் 10 ஆண்டு காலமாக ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு ஒன்றும் அங்கு இயங்கி வருகிறது. தற்போது அந்த நிறுவனத்தின் எண்ணெய்க் கழிவுகள் அனைத்தும் நிரம்பி, அருகில் இருக்கும் விவசாய விளைநிலங்களுக்குச் சென்றதால், நிலங்கலெல்லாம் பாழடைந்துள்ளன.
மேலும், அந்த ஊரில் வாழும் அனைத்து மக்களுக்கும், இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் தோல் பிரச்னை, நுரையீரல் பிரச்னை ஏற்படுவதாகவும்.
அந்தப் பகுதி மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
உடனடியாக இந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை மூட வேண்டும் என்று கூறி, நேற்று அந்த கிராம பகுதி விவசாயிகள் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நம்மிடம் பேசிய மேலப்பனையூர் கிராம விவசாயிகள், ``நாங்க தலைமுறை தலைமுறையா, இந்த கிராமத்துலதான் விவசாயம் செஞ்சு வாழ்ந்துட்டு வர்றோம்.
பத்து வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊர்ல கச்சா எண்ணெய், இருக்கிறதா சொல்லி ஒ.என்.ஜி.சி நிறுவனத்தோட எண்ணெய் கிணற இங்க கொண்டு வந்தாங்க. அப்பயெல்லாம் எங்க ஊருக்கு இந்த மாதிரி பிரச்னையெல்லாம் வரும்னு நாங்க யாருமே கனவுல கூட நினைக்கல.
சின்னப் புள்ளைய மிட்டாய காமிச்சி ஏமாத்துற மாதிரி, `உங்களுக்கு பாத்ரூம் கட்டிதர்றோம்..!', `ஊர்ல இருக்குற எல்லாருக்கும், எங்க நிறுவனத்துல வேலை போட்டு தர்றோம்..!'ன்னு சொல்லிதான், எங்கள ஏமாத்தி, இந்த ஒ.என்.ஜி.சி நிறுவனத்தையே ஆரம்பிச்சாங்க.. ஆனா, இப்போ எங்க மேலப்பனையூர் கிராமமே அழிஞ்சு போற அளவுக்கு இருக்கு. அதுக்கு காரணம் இந்த எண்ணெய் கிணறுதான்!
இதுக்கு முன்னாடியெல்லாம் எங்க ஊரு தண்ணி இளநீர் மாதிரி ரொம்ப அருமையா இருக்கும். ஆனா இப்போ, எங்க ஊரு நிலத்தடி தண்ணிய குடிக்கவே முடியாத அளவுக்கு நாத்தமா அடிக்குது. வேற வழி இல்லாமேதான் நாங்க இந்த தண்ணிய குடிச்சிட்டு இருக்கோம். இந்த தண்ணிய குடிச்சிட்டு எங்க ஊர்ல பாதிப்பேருக்கு கிட்னி பிரச்னை உருவாகி இருக்கு.
இந்த ONGC-ல இருந்து வெளியே வர்ற நச்சு காத்தால,
எங்க ஊர்ல பல பேருக்கு நுரையீரல் பிரச்னை, சளி பிரச்னையெல்லாம் இருக்கு. ஒ.என்.ஜி.சி எங்க ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி முப்போகமும் விளையுற எங்க ஊர்ல,
இப்போ ஒரு போகம் விளைய வைக்கவே நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம். இந்த ஒ.என்.ஜி.சி நிறுவனத்துலயிருந்து
வெளியேர்ற கச்சா எண்ணெய் கழிவுயெல்லாம் எங்களோட விவசாய நிலத்துல வந்து கலந்துடுச்சு. கிட்டதட்ட 10 வருஷத்துக்கு
இந்த நிலத்துல எந்த விவசாயமும் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க.
இப்படி இருக்குறப்போ நாங்க எப்படித்தான் இங்க வாழ்றது?
அதனாலதான் இந்த எண்ணெய் கிணற உடனே மூட சொல்லி நாங்க போராட்டம் பண்ணுறோம்" என்று ஆதங்கப்பட்டு பேசினார்கள் மேலப்பனையூர் விவசாயிகள்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ONGC அதிகாரிகளிடம் நேரில் சென்று கேட்டபோது, ``விளை நிலங்களில் கொட்டிய எண்ணெய் கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு எங்கள் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்கும்” என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனிடம் தொடர்பு கொண்டுபேசியபோது, ``திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள, மேலப்பனையூர் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் எண்ணெய் கழிவுகள் நிரம்பி விவசாய நிலத்தை மாசுப்படுத்தி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழக அரசின் சார்பில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் நேரில் சென்று ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இப்பிரச்னையானதுகொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது வெறும் வெற்று அறிவிப்பாகவே உள்ளது. அதை உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
source https://www.vikatan.com/news/agriculture/thiruvarur-farmers-protested-against-ongc-and-requested-tn-govt-to-take-action
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக