Ad

ஞாயிறு, 13 மார்ச், 2022

சேலம் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம், நகைகளுடன் சிக்கிய நபர்கள்! - வருமான வரித்துறை விசாரணை

ரயில்வே பாதுக்காப்பு படையினர் சேலம் ரயில் நிலையத்தில், கடந்த 8-ம் தேதி, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ரயில் நிலைய சுரங்கப் பாதையில் சந்தேகம்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த 3 நபர்களை அழைத்து விசாரித்துள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ரூ.20 லட்சம் இருந்தது தெரியவந்தது. போலீஸார் இதுகுறித்த சம்பந்தப்பட்ட 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டபோது, சேலத்தில் இரும்பு பொருள்கள் வாங்க வந்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், பணத்திற்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், வருமானவரித்துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணத்துடன் 3 பேரையும் ஒப்படைத்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த மார்ச், 10-ம் தேதி இரவு சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர், அணில்குமார் ரெட்டி தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒவ்வொரு பைகளை சோதனை செய்துக்கொண்டே வரும்போது, ஒரு நபரின் பேக்கில் கட்டுக்கட்டாக 11 லட்சத்து, 61ஆயிரத்து, 430 ரூபாய் பணமும், 880 கிராம் தங்க நகையும் இருந்து கண்டெடுத்துள்ளனர்.

சேலம் ரயில் நிலையம்

அதைத்தொடர்ந்து ரயில்வே பாதுக்காப்பு படையினர் விசாரணை செய்ததில் இதனைக் கொண்டு வந்தவர் கோவை களம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் விக்னேஸ்வர மூர்த்தி என்றும், இவர் கோவையில் நகை உற்பத்தி செய்பவர்களிடம் நகை வாங்கி விற்று வருகிறார் என்பதும் தெரிய வந்தது. பின்னர் பணத்திற்கும், நகைகளுக்கும் உரிய ஆவணம் இல்லாததால் ரயில்வே காவல்துறை மூலம் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரயில்களில் வழக்கமாக சோதனையின்போது மதுப்பாட்டில்கள் பிடிப்பட்டுவந்த நிலையில், தற்போது கட்டுக்கட்டாக பணம், நகைகள் அடுத்தடுத்து சிக்குவது சேலம் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.



source https://www.vikatan.com/news/crime/two-person-trapped-at-salem-railway-station-with-cash-and-jewelery

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக