Ad

புதன், 17 மார்ச், 2021

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: உதயநிதிக்கு எதிராக எதிர்க்கட்சியினரின் வியூகம் என்ன?

தி.மு.க-வுக்கு செல்வாக்கான தொகுதிகளில் ஒன்று, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி. மூன்று முறை சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று, அதன் மூலமாக இரண்டு முறை முதல்வர் அரியணையில் அமர்ந்திருக்கிறார் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி. 2011-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருவல்லிக்கேணி தொகுதியின் சில பகுதிகளை இணைத்துக்கொண்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியாக மாறிய பிறகும், தொகுதியைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. இங்கு வென்று எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் மறைந்துவிட்ட நிலையில், தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் களம்காண்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணிசட்ட மன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்தார்.

தொகுதியில் உதயநிதி ஸ்டாலினின் பலம் பலவீனம் என்ன என்பது குறித்து உடன்பிறப்புகளிடம் பேசினோம்... “ஸ்டாலினின் மகன் என்பதே உதயநிதிக்கு பெரிய பலம் தான். சேப்பாக்கத்தில் உதயநிதி போட்டியிடுவது இங்கிருக்கும் மக்களுக்கு பெரிய பலம். உதயநிதி இங்கு வந்து பிரசாரம் செய்ய வேண்டியதெல்லாம் இல்லை. நிச்சயம் வெற்றி உதயநிதிக்குத்தான். அந்த அளவிற்கு தொகுதியில் தி.மு.க கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது” என்றார்கள்.

Also Read: ஸ்டார் தொகுதிகள்: சேப்பாக்கத்தில் சிக்ஸர் அடிப்பாரா உதயநிதி?

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் உதயநிதிக்கு எதிராக களம் காணும் பா.ம.க வேட்பாளரான கஸ்ஸாலியிடம் பேசினோம். “தி.மு.க வேட்பாளர் உதயநிதி தாத்தா, அதன் பின் மகன், அதன் பின் பேரன் அடுத்து என்ன கொள்ளுப்பேரன் வருவான என இங்கிருக்கும் மக்களுக்கு பெரிய வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதுவே எங்களுக்கு பெரிய பலம் தான். கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியாத உதயநிதிக்கு மக்கள் படும் கஷ்டம் எப்படிப் புரிய போகிறது. நான் அப்படியல்ல. அடித்தளத்தில் இருந்து மேலே வந்தவன். இங்கிருக்கும் மக்களைப் போலவே நானும் ஒரு சாதாரண மனிதன். அதுமட்டுமல்ல கடந்த 2016-ல் பா.ம.க தனித்துப் போட்டியிட்டபோதே நான் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக நின்றிருக்கிறேன். அப்போது ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டிப் பிரசாரம் செய்திருப்பதால், மக்களுக்கு என் முகம் நன்கு பரிச்சயம். மீண்டும் இப்போது பிரசாரம் செய்கிறபோது மக்கள் சரியாக நினைவு வைத்து நலம் விசாரிக்கிறார்கள்.

ஏ.வி.ஏ.கஸ்ஸாலி

பா.ம.க, அ.தி.மு.க தேர்தல் அறிக்கைகளில் உள்ளவற்றைச் சொல்லி வாக்கு சேகரிக்கிறேன். இதற்கு முன்பு இங்கு எம்.எல்.ஏ-வாக இருந்த கருணாநிதி, ரகுமான்கான், பதர்சயீத், ஜெ.அன்பழகன் என அத்தனை பேரும் மேல்மட்டத் தலைவர்கள். ஜெயித்ததும் தொகுதிப் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. நான் மக்களோடு மக்களாக என்றும் பழகுபவன்.

இடநெருக்கடி, குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவது என பல வாழ்வாதார பிரச்னைகள் இத்தொகுதியில் உள்ளது. உதயநிதி போன்றோரெல்லாம் எம்.எல்.ஏ ஆனால், இதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள். தொகுதியில் இருக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் சுழன்று வருகிறேன். கருணாநிதி மு.க.முத்துவைக் கொண்டு வந்ததுபோல, ஸ்டாலின் உதயநிதியைக் கொண்டு வந்துள்ளார். இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் இருப்பினும், அவர்கள் கூட்டணி யாருடன் என்று பார்க்கவில்லை, மாறாக வேட்பாளர் யார் என்றுதான் பார்க்கிறார்கள்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சிஎஸ்ஐ சகல பரிசுத்த ஆலயத்தில் ஆசி பெற்று அங்கிருந்தவர்களிடம் ஆதரவு திரட்டினார்

அ.தி.மு.க-வினரின் ஒத்துழைப்பும் நன்கு கிடைக்கிறது. இஸ்லாமியருக்காக நாங்கள் வாக்கு சேகரிக்கச் செல்கிறோம் என பா.ஜ.க-வினரும் களத்தில் குதித்துள்ளனர். அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீருக்குக் கிடைக்க வேண்டிய தொகுதி எனக்குக் கிட்டியுள்ளது. பஷீரும் தலைமைக்குக் கட்டுப்பட்டு தொகுதியில் உள்ள மசூதிகள், தர்காக்கள் நிர்வாகிகளிடம் எனக்காக வாக்கு சேகரித்து வருகிறார். வென்று வரலாறு படைப்பேன் என்ற நம்பிக்கையுள்ளது” என்றார்.

அ.ம.மு.க சார்பாக இங்கு போட்டியிடும் எல்.ராஜேந்திரனிடம் பேசினோம் “உதயநிதி உட்பட மற்ற கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தலுக்காக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பக்கம் ஒதுங்கியவர்கள் நான் அப்படியல்ல. இந்தத் தொகுதியிலேயே பிறந்து வழந்த மண்ணின் மைந்தன். கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் அரசியலில் இருந்திருக்கிறேன். அ.தி.மு.க - தி.மு.க உள்ளிட்ட கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். அதனால் அவர்கள் எந்த மாதிரியான பொய்களை எல்லாம் மக்கள் மத்தியில் கூறி வாக்கு சேகரிப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களின் பொய்ப் பிரசாரங்களையும் மக்களுக்கு அ.ம.மு.க இங்கு செய்த நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு புரியவைப்பேன். பா.ம.க என்ற ஒரு கட்சி இருப்பதாகவே இங்கிருக்கும் மக்களுக்கு தெரியாது. அதேபோல தி.மு.க-வும் இங்கே வலுவாக இருக்குன்னு பொய்யான நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனா, கொரோனா காலத்தில் அ.ம.மு.க சார்பில் செய்யப்பட்ட உதவிகளும், லோக்கல் ஆள் என்ற முறையில் எனக்கு மக்களிடம் இருக்கும் பரிச்சியமும் எனக்கு மிகப்பெரிய பலமாக நான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு கொரோனா காலத்தில் 60-க்கும் மேற்பட்ட முறை தொகுதியின் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளேன்.

அ.ம.மு.க எல்.ராஜேந்திரன்

கஜா புயல் பாதிப்புகளின் போதும் இங்குள்ள மக்களின் தேவைகளை தனி ஆளாக நின்று பூர்த்தி செய்துள்ளேன். சிந்தாரிப்பேட்டையில் கொட்டப்பட்ட சாயப்பட்டறை கழிவுகளை போராட்டங்கள் மூலம் வேறு இடத்தில் கொண்டு கொட்டச் செய்துள்ளேன். தெருவில் இருக்கும் மீன் மார்க்கெட்டை மாற்றி நவீன வசதிகளுடன் கூடிய மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் அதை உணர்ந்து எனக்கு மிகப்பெரிய ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

தீர்ப்பு, மக்கள் கையில்...!



source https://www.vikatan.com/government-and-politics/politics/what-are-the-strategy-opposition-party-candidates-have-against-udhanidhi-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக