Ad

வியாழன், 11 மார்ச், 2021

`புது முகத்துக்கு வாக்களிக்க மாட்டோம்’ - துரைக்கண்ணு மகனுக்கு ஆதரவாக எழும் கோரிக்கை

அ.தி.மு.கவில் சில இடங்களில் வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு மகன் அய்யப்பனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரின் ஆதரவாளர்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்து வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

துரைக்கண்ணு

அ.தி.மு.கவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சிட்டிங் அமைச்சர்கள் சிலருக்கும், எம்.எல்.ஏக்களும் வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது. சில இடங்களில் வேட்பாளரை மாற்ற வேண்டும்,கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய தொகுயில் அ.தி.மு.கவே போட்டியிட வேண்டும் என சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு கோபிநாதன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இவர் பாபநாசம் ஒன்றிய பெருந் தலைவராகவும் இருந்துள்ளார். வைத்திலிங்கத்தின் ஆதரவாளரான இவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

முகநூல் பதிவு

இந்நிலையில் துரைக்கண்ணு மகன் அய்யப்பன் சீட் கேட்டு, கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவர் பெயர் வேட்பாளர் லிஸ்டில் இல்லை என்பது துரைக்கண்ணு, அய்யப்பனின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதையடுத்து வேட்பாளர் மாற்றம் வேண்டும், புதியவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி, சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் பகிரப்பட்டு வருகிறது. இது பாபநாசம் அ.தி.மு.கவினர் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், புதிய வேட்பாளரான கோபிநாதனுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட பதிவு

இது குறித்து சிலரிடம் விசாரித்தோம், `காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த பாபநாசம் தொகுதியை அ.தி.மு.கவின் கோட்டையாக மாற்றி காட்டினார் துரைக்கண்ணு. கால் நூற்றாண்டுகள் பாபநாசம் ஒன்றிய செயலாளராக இருந்து கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் துரைக்கண்ணு.

இதனையறிந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மூன்று முறை துரைக்கண்ணு போட்டியிட வாய்ப்பளித்தார். அவரும் ஹாட்ரிக் வெற்றியை பதிந்து எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். வைத்திலிங்கம் 2016 தேர்தலில் அவருடைய சொந்த தொகுதியானா ஒரத்தநாட்டில் தோல்வியை தழுவிய நிலையில் துரைக்கண்ணுவிற்கு வேளாண்மை துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

வேட்பாளர் கோபிநாதன்

கடைசி வரை கட்சிக்கும், வைத்திலிங்கத்திற்கும் விசுவாசமாக இருந்தார். துரைக்கண்ணுக்கு இணையாக கட்சி பணிகளில் செயல்பட்டவர் அவரது இளைமகன் அய்யப்பன். அவ்வப்போது துறை ரீதியாக துரைக்கன்ணு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நேரங்களில் அய்யப்பனும் செல்வது வழக்கம்.

அதனால் தனிப்பட்ட முறையில் முதல்வர் அய்யப்பன் செயல்கள் குறித்து பாராட்டியிருக்கிறார். கட்சிக்கு விசுவாசமாக இருந்ததாலும், செயல்களில் வேகம் காட்டியதாலும் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் பதவியும் அய்யப்பனுக்கு கொடுக்கப்பட்டது.

வைத்திலிங்கம்

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துரைக்கண்ணு சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதன் பிறகு வேண்டாதவர்கள் சிலர் அய்யப்பன் வளர்ந்து விடக் கூடாது என கங்கணம் கட்டி கொண்டு செயல்பட்டனர். கும்பகோணத்தை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டபோது அவர்கள் துரைக் கண்ணுவின் பினாமி என்றும் கட்சி மற்றும் துரைக்கண்ணுவிடம் இருக்கும் பணத்தை கைபற்றவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பினர். அய்யப்பன் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறினர்.

கைது செய்யப்பட்டவர்களுடன் தான் தொடர்பு வைத்திருந்ததற்கான சின்ன ஆதாரத்தை காட்டுங்கள் என அய்யப்பன் அப்போது வெளிப்படையாகவே பேசி வந்தார். அதன் பிறகு இந்த பிரச்னைகள் ஓய்ந்தன. கட்சி பணிகளில் வழக்கம் போல் தன் வேகத்தை குறைக்காமல் செயல்பட்டார் அய்யப்பன்.

அய்யப்பன்

அத்துடன் பாபநாசம் தொகுதியில் போட்டியிடுவதற்கும் முயற்சி மேற்கொண்டார். முதல்வரும் வைத்திலிங்கமும் நம்பிக்கை வார்த்தைகளை அளித்திருந்தனர். அதனால் உற்சாகத்துடன் மனு தாக்கல் செய்து விட்டு தனக்கு சீட் கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால் கோபிநாதன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் சிலர் அய்யப்பன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் கட்சியில் அசைக்க முடியாத இடத்துக்கு சென்று விடுவார். துரைக்கண்ணு அனுதாப அலையை பயன்படுத்தி வெற்றி பெற்று விடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதால் அய்யப்பனுக்கு சீட் கிடைக்காத வகையில் காய்களை நகர்த்தினர்.

கோரிக்கை

வைத்திங்கத்திடம் அவ்வப்போது தவறான தகவல்களையும் கூறி வந்ததாக தெரிகிறது. வைத்திலிங்கத்தின் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது அவர் எனக்குத்தான் சிபாரிசு செய்வார் என அய்யப்பன் கூறி வந்தார். ஆனால் வேட்பாளார் லிஸ்டில் அவர் பெயர் அய்யப்பன் பெயர் இல்லை. இது அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை தந்தது.

இதனால், புதியவருக்கு வாக்களிக்க மாட்டோம், மீண்டும் பாபநாசம் அ.தி.மு.க கோட்டையாக நீடிக்க கோபிநாதனை மாற்றி விட்டு அய்யப்பனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக கோரிக்கை எழுப்பியுள்ளதுடன் முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். துரைக்கண்ணு மீது சில சர்ச்சைகள் இருந்தாலும் எளிமையான அவருடைய பழகும் குணத்தை உணர்ந்தவர்கள் அய்யப்பனை ஆதரிக்கின்றனர்.

ஜெயலலிதா

தலைமையும், பொறுப்பாளருமான வைத்திலிங்கமும் எங்களுடைய கோரிக்கையினை ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது’ என தெரிவித்தனர்.

வைத்திலிங்கம் தரப்பை சேர்ந்தவர்கள், ``துரைக்கண்ணு மறைவிற்கு பிறகு என்ன நடந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. முதல்வருடன் நெருக்கமாக இருப்பது போல் காட்டி கொண்டு அய்யப்பன் போட்டியிட சீட் கேட்டு வந்தார். ஆனால் அவரை பாபநாசத்தை சேர்ந்த கட்சிகாரர்களே ஏற்று கொள்ள மாட்டார்கள். அவருடைய நடவடிக்கையும் யாருக்கும் பிடிக்காது.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

இந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பெறும் வெற்றி என்பது மிக முக்கியமானது. எனவே தொடர்ச்சியாக அய்யப்பன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன. இது நிச்சயம் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் வேறு ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மற்றபடி அவர் வளர்ச்சியை தடுக்கவே வாய்ப்பு மறுக்கப்பட்டது என்பதை யாரும் ஏற்று கொள்ளமாட்டார்கள்” என தெரிவித்தனர்.

அய்யப்பன் தரப்பில் பேசினோம், ``தனக்கு சீட் கிடைக்கவில்லை என்பதில் எந்த வருத்தமும் இல்லை. கட்சி தலைமை அறிவித்துள்ள வேட்பாளருக்கு வேலை செய்வது கடமை. நிச்சயம் உண்மையாக முழு மனதுடன் தலைமையால் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு வேலை செய்வேன் என்பதே அவர் நிலைப்பாடு” என்றார்.



source https://www.vikatan.com/news/politics/admk-cadres-asking-seat-for-duraikannu-son-in-papanasam-constituency

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக