Ad

சனி, 21 நவம்பர், 2020

பெரம்பலூர்: `போலி உரத்தால் கருகிய பயிர்கள்; பதறிய விவசாயிகள்!' - மூன்று பேர் மீது வழக்கு

பெரம்பலூர் விவசாயிகளுக்கு போலி உரங்களை விற்றதால், பயிர்கள் போதிய விளைச்சல் இல்லாமல் லட்சக்கணக்கில் அவர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய நபர்கள் மூடி மறைக்கும் வேலையில் இறங்கியிருப்பதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயி.

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட சிறுகுடல் கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மானாவாரிச் சாகுபடியாக மக்காச்சோளம் பயிரிட்டிருக்கிறார்கள். அதே ஊரிலுள்ள உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களின் மூலம் உர மூட்டைகளை வாங்கி, விவசாயிகள் மக்காச்சோள வயல்களில் தெளித்திருக்கிறார்கள்.

செழிப்புடன் நன்றாக வளர்ந்திருந்த மக்காச்சோளப் பயிர்கள், உரம் தெளித்த பிறகு திடீரெனக் கருகிப்போயின. சந்தேகமடைந்த விவசாயிகள் தாங்கள் தெளித்த உரத்தைப் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவை அனைத்தும் சுண்ணாம்புக்கற்கள் என்பது தெரிய வந்தது.

பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ்

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், உரம் விற்பனை செய்த கடை உரிமையாளர்களிடம் பயிரைக் காட்டி பிரச்னையில் ஈடுபட்டிருக்கிறார்கள். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் ஒருரிரு நாள்களில் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள். ஆனால், உறுதியளித்தபடி, பணத்தையும் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

சோளம்

இதைத் தொடர்ந்து, சிறுகுடல் கிராம விவசாயிகள் கருகிய மக்காச்சோளப் பயிர்களை கைகளில் ஏந்தி கடந்த 11- ந்தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மோசடி நபர்கள் மூவரைக் கைதுசெய்து, உர மூட்டைகளுக்குக் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருவதோடு, கருகிய மக்காச்சோளப் பயிருக்கு இழப்பீடும் வாங்கித் தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை விடுத்தனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், வேளாண்துறையின் மூலம் விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சோளப் பயிர்களை ஆய்வு செய்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரத்தைப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். திண்டுக்கல்லிலுள்ள அரசு பரிசோதனைக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அது போலி உரம்தான் என்பது உறுதியாகியிருக்கிறது.

விவசாயிகள்

இதையடுத்து மோசடி செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் பரிந்துரைத்திருப்பதாக வேளாண்மை இணை இயக்கநர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார். மோசடிக் கும்பல் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, காவல்துறைக்கு, வேளாண்துறை பரிந்துரை செய்தது. அதன்பேரில் சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், பேரளி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், சர்வேஸ்வரன் மூவர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரும் தலைமறைவாகியிருக்கிறார்கள். இவர்களைக் கைதுசெய்யக் கூடாது என்று அ.தி.மு.க-வினர் சிலர் போலீஸாரிடம் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள்.

ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா

இந்தநிலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், `தமிழகத்தின் சில இடங்களில் போலி உரம் விற்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் குறித்து பழனிசாமி அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய உர விற்பனையில் ஈடுபட்டிருப்பவர்களை பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆளுங்கட்சியினரே காப்பாற்ற முயல்வதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. போலி உரத்தைப் பயன்படுத்தியதால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் போலி உர விற்பனையை முற்றிலுமாகத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முதல்வர் எடுக்க வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/sale-of-fake-fertilizer-in-perambalur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக