Ad

சனி, 21 நவம்பர், 2020

``ஸ்டாலின் எங்களைப் பார்த்து ஊழல்வாதிகள் என்று சொல்வது வேடிக்கை’’ - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!

ஆளும் அ.தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்கள் அனைத்துக்கும் ஒற்றை ஆளாக பதிலடி தருபவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். பரபரக்கும் அரசியல் சூழலில், அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...

``2021 சட்டமன்றத் தேர்தலில், தமிழக பா.ஜ.க கேட்கும் சீட் எண்ணிக்கை அ.தி.மு.க-வுக்குமே பயத்தை ஏற்படுத்தியிருக்கிறதுதானே?''

``இது ஓர் அனுமானமான கேள்விதான். எனவே, இந்தக் கேள்விக்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் மூன்று, நான்கு மாதங்கள் இருக்கின்றன. தொகுதிப் பங்கீட்டுக்குழு, கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுக்கள்தான் இது குறித்துப் பேசி முடிவெடுக்கும்.''

எடப்பாடி பழனிசாமி - எல்.முருகன்

`` `தமிழ்நாட்டில், 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க மிக வலுவாக இருக்கிறது’ என்று எல்.முருகன் சொல்கிறார். குறிப்பிட்ட 25 தொகுதிகளில் தமிழக பா.ஜ.க தலைவர்கள் இப்போதே பிரசாரத்தையும் ஆரம்பித்துவிட்டனரே?''

``1972-ல் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க இயக்கம் எத்தனையோ சோதனைகளைத் தாண்டி சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கிறது. கூட்டணிக் கட்சியினர் அவர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளைக் கேட்பார்கள்தான். அது அவர்களது உரிமை. ஆனால், அதைப் பரிசீலித்து, கொடுப்பதையும் கொடுக்காததையும் மேற்கண்ட இரண்டு குழுக்கள்தான் முடிவு செய்யும். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மெகா கூட்டணியை அமைத்து எந்தவிதப் பிரச்னையும் இன்றி தேர்தலைச் சந்தித்தோம். அதேபோல், இப்போதும் கூட்டணிக் கட்சிகளுடன் சுமுகமாகப் பேசி, முடிவெடுத்து தேர்தலைச் சந்திப்போம்.''

``வேல் யாத்திரை விஷயத்தில், தமிழக அரசு உறுதியான ஒரு நடவடிக்கையை எடுக்கத் தயங்குவது ஏன்?’’

``கொரோனா நோய்த்தொற்றுக் காலகட்டத்தில், தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் பற்றி அரசு ஏற்கெனவே தெளிவாகச் சொல்லிவிட்டது. எனவே, ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவை தற்போதைய சூழ்நிலைக்குத் தேவையில்லை என்பதுதான் அரசின் நிலை. இது தமிழக பா.ஜ.க-வுக்கு மட்டுமல்ல. அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். அதனால்தான் நாங்கள்கூட எந்தவோர் ஊர்வலத்தையும் நடத்தவில்லை.’’'

வேல் யாத்திரை

``ஆளுங்கட்சியான நீங்கள் யாரை எதிர்த்து ஊர்வலம் போகப்போகிறீர்கள்?’’

``ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். மாவட்டச் செயலாளர் என்கிற அடிப்படையில் தமிழக அரசின் சாதனையை விளக்கி நான்கூடத்தான் நடைப்பயணம் செல்லலாம். வழிநெடுக மக்களிடம் சாதனைத் துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தவாறே நடைப்பயணம் செல்ல எங்களால் முடியாதா என்ன... ஆனால், இன்றைய சூழலில் மக்களின் நலன் கருதி, சைலன்ட்டாக இருப்போம் என்று கட்சி முடிவெடுத்திருக்கிறது. இது மாதிரி எல்லாக் கட்சிகளும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவ்வளவுதான்!''

``அனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்த ஶ்ரீதர், தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து வன்முறையான, தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிக்கிறார்... ஆனாலும் நடவடிக்கை ஏதும் இல்லையே?''

``கட்சியில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து, பெரிய ஆளாகுவதற்காக சில நாலாந்தரப் பேச்சாளர்கள் இது போன்று நாகரிகமின்றி பேசத்தான் செய்வார்கள். கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் யாரேனும் நாகரிகமற்ற வார்த்தைகளில் விமர்சித்தார்களென்றால், பதில் கொடுக்கலாம். மற்றபடி, குரைக்கிறவர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்துகொண்டிருந்தால், அது ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குகிற கதையாகிவிடும்!''

எடப்பாடி பழனிசாமி

``அ.தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியின் பெயரை தமிழக பா.ஜ.க இதுவரை முன்மொழியவில்லையே?''

``தற்போதைய முதல்வர் தலைமையில்தான் தேர்தலை எதிர்கொள்ளப்போகிறோம் என்ற எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். எங்கள் கூட்டணியிலுள்ள தோழமைக் கட்சிகள், தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதை கருத்தில்கொண்டு இது குறித்து முடிவுகளை அறிவிக்காமல் இருக்கலாம். மற்றபடி கூட்டணியில் தொடர்கிற அவர்கள் தேர்தல் நெருக்கத்தில், எங்கள் முடிவுக்குத்தான் வந்தாக வேண்டிய சூழல் நிச்சயம் உருவாகும்!''

``அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கின்றனவே.?''

'``குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதும், நடைபெற்ற குற்றங்களுக்கு சட்டரீதியிலான தண்டனையைப் பெற்றுத்தருவதும் ஆளுங்கட்சியின் கடமை. அந்தவகையில், `இந்திய அளவில், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு’ என்று மத்திய அரசே அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக, தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு இருந்துவருகிறது. மற்ற மாநிலங்களைவிட இங்கு முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.''

அன்புமணி

``ஆனால், `இந்தியாவிலேயே ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடுதான்’ என்று உங்கள் கூட்டணிக் கட்சியான பா.ம.க குற்றம்சாட்டுவதாக தி.மு.க தலைவர் சொல்கிறாரே..?''

``எப்போது சொன்னார்கள்? பொத்தாம் பொதுவாக அப்படி ஒரு குற்றச்சாட்டை பா.ம.க சொன்னதுதான். ஆனால், அதன் பிறகு `இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை' என்று உணர்ந்ததால்தானே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எங்களோடு கூட்டணியிலேயே வந்து இணைந்தது பா.ம.க...

விஞ்ஞான ஊழல், பூச்சி மருந்து ஊழல், வீராணம் ஊழல், 2ஜி ஊழல் என வரலாற்றில் ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக நிற்பது தி.மு.க-தான். ஊழலுக்காகவே கலைக்கப்பட்ட ஓர் ஆட்சி என்றால், அது உலகத்திலேயே தி.மு.க மட்டும்தான். இப்படிப்பட்ட மலைமுழுங்கி மகாதேவனான ஸ்டாலின் எங்களைப் பார்த்து ஊழல்வாதிகள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.''

Also Read: `எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கட்சிக்கே ஆதரவு!’ - தமிழக விவசாயிகள் சங்கம்

``எதிர்க்கட்சி அறிக்கைக்குப் பின்னர், தமிழக அரசு தனது முடிவுகளை மாற்றிக்கொள்வதென்பது அ.தி.மு.க அரசின் நிர்வாகத் திறமையின்மையைத்தானே காட்டுகிறது?''

``எதிர்க்கட்சித் தலைவர் அப்படித்தான் சொல்வார். மக்களின் எண்ணத்துக்கு மதிப்பளித்தே நாங்கள் ஆட்சி செய்துவருகிறோம். 'பூனை கண்ணை மூடினால், உலகமே இருண்டுவிட்டது' என்று நினைப்பதுபோல் தங்கள் அறிக்கையால்தான் மாற்றங்கள் உண்டானதாக எதிர்க்கட்சியினர் சொல்லிக்கொள்கிறார்கள். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக அவர்கள் செய்யும் வேலை இது. `அடுத்த வீட்டில் உலை கொதிப்பதும்கூட தன்னால்தான்' என்று சொல்லிக்கொள்கிற டைப் ஸ்டாலின்.''

சசிகலா

``சசிகலாவுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் இடம் இல்லை என்று உங்களைப் போன்று காத்திரமாக முதல்வரோ, துணை முதல்வரோ கூற மறுக்கின்றனரே... என்ன காரணம்?''

``சசிகலா குடும்பத்தின் தலையீடு, கட்சியிலும் ஆட்சியிலும் இருக்கக் கூடாது என்று கட்சி எடுத்த முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். எனக்கும் சசிகலாவுக்கும் தனிப்பட்ட பகை என்று ஒன்றுமே இல்லை. எனவே, கட்சியின் கருத்தைத்தான் ஜெயக்குமார் சொல்ல முடியும். மற்றபடி, ஜெயக்குமாருக்கு என்று தனிப்பட்ட கருத்து எதுவும் கிடையாது. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் கட்சியில் அனைவரது கருத்தையும்தான் நான் பிரதிபலிக்கிறேன். கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றால் திரும்பி வருவோமா, மாட்டோமா என்றே தெரியாது. ஆனாலும், தினம் தினம் உயிரைப் பணயம்வைத்து மீன்பிடித் தொழிலுக்குச் சென்று வந்த துணிச்சலான ரத்தம் என் உடலிலும் ஓடுகிறது. அதனால் எதைப் பற்றியும் எனக்குக் கவலை கிடையாது!''

Also Read: நெல்லை: சரக்கு ரயில் மீது ஏறி செல்ஃபி; மின்கம்பியில் உரசிய கை! - தந்தை கண்முன்னே நடந்த சோகம்

``மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தினருக்கு அரசுத் தரப்பிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவருகின்றனவே?’’

``ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல எதிர்க்கட்சிகளுக்கு எதுவும் இல்லை. அதனால், `எதையாவது ஒன்றைச் சொல்லிக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்; குழம்பிய அந்தக் குட்டையில் மீன் பிடிக்க வேண்டும்' என்ற நோக்கில், இது போன்ற இட்டுக்கட்டிய செய்திகளைப் பரப்பிவருகின்றனர்.

துரைக்கண்ணு

`எதைச் சொன்னால், மக்களிடையே போய்ச் சேரும்; எது அ.தி.மு.க அரசுக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தித் தரும்' என்பதையெல்லாம் பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் யோசித்து டிரெண்டிங் செய்துவருகிறது. ஆனாலும், முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சரும் இது குறித்து விளக்கமாக தெளிவுபடுத்திவிட்டார்கள். எனவே, தி.மு.க-வின் எண்ணம் இங்கே நடக்காது.''

ஜூனியர் விகடன் இதழில், இது போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு அதிரடியாக பதிலளித்திருக்கிறார் அமைச்சர்... அதனை கீழே உள்ள லிங்கில் படிக்கலாம்...!

Also Read: “பயம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது!”



source https://www.vikatan.com/news/politics/it-is-funny-that-stalin-says-we-are-corrupt-minister-jayakumar-teases

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக