Ad

வியாழன், 22 அக்டோபர், 2020

`எல்லைப் போக்குவரத்தை பலப்படுத்திய அரசு; மிரட்டும் இந்தியா, மிரளும் சீனா’ - ஜெ.பி.நட்டா பேச்சு

ஹிமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. வின் ஆறு அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டிய ஜெ.பி.நட்டா, "முன்னதாக சிறிய பாலங்கள் இருந்தபோது, இராணுவ லாரிகள் அவற்றைக் கடக்கும் போதெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும், 6 ஆண்டுகளில் மோடி அரசு 4,700 கி.மீ. நான்கு வழிச்சாலை அமைத்து எல்லைப் போக்குவரத்தை பலப்படுத்தியுள்ளது என்றார்.

ஹிமாச்சல பிரதேசத்தில் அமையவுள்ள பாரதிய ஜனதா கட்சியின் ஆறு அலுவலகங்களுக்கு தலைநகர் டெல்லியிலிருந்து காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா எல்லைப் போக்குவரத்தில் மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.

ஜம்மு - காஷ்மீர்

ஜெ.பி.நட்டா, ``பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த ஆறு ஆண்டுகளில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு முதல் அருணாச்சல் வரையிலான எல்லையில் 4,700 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலையை அமைத்துள்ளது.

இதேபோல், பெரிய அளவிலான இராணுவ பீரங்கிகள் கடந்து செல்லும் அளவிற்கு, எல்லையில் 14.7 கி.மீ நீளமுள்ள இரட்டை வழி பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. இது இந்தியாவின் எல்லைப் போக்குவரத்தை வலுப்படுத்தி, சீனாவை அச்சுறுத்தியுள்ளது” என்று கூறினார்.

மேலும், முன்னதாக சிறிய பாலங்கள் இருந்ததாகவும், இராணுவ லாரிகள் அவற்றைக் கடக்கும் போதெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் தற்போது புதிய பாலங்கள் மூலம் பா.ஜ.க அரசு அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாகவும் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் எல்லைப் பகுதிச் சாலைகளுக்கான ஆணையம் (Border Roads Organisation) கட்டியுள்ள, உலகின் மிகநீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்த திறப்பு விழாவின் போது, ஜெ.பி.நட்டா ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு வர விரும்பியதாகவும், ஆனால் பீகார் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்பாடுகளில் இருந்ததால் வர இயலவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அடல் சுரங்கப்பாதை நாட்டின் பாதுகாப்பிற்கு பெருமளவு பயனளிக்கும் என்று ஜெ.பி.நட்டா கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/modi-govts-focus-on-building-border-roads-to-secure-boundaries-says-bjp-president

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக