Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2020

`அழுக்கா இருந்ததால யாரும் உதவலைன்றதுதான் வருத்தம்!' - தொழிலாளி உயிரைக் காப்பாற்றிய பெண் போலீஸ்

காக்கிச்சட்டைக்குள் ஈர மனதுக்காரர்களைச் சந்திக்கும்போது மட்டும்தான், காவல்துறை, மக்களின் நண்பன்தான் என்பது உறுதி செய்யப்படும். நேற்றுமுன் தினம் (21.10.2020), கோயம்பேட்டில் மயங்கி விழுந்த கூலித் தொழிலாளி ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய பெண் காவலர் முத்து கிருஷ்ணவேணியும் அப்படிப்பட்ட ஈர மனதுக்காரர்களில் ஒருவர்தான். அவரிடம் பேசினோம்.

முத்து கிருஷ்ணவேணி உதவிய போது

``நான் வில்லிவாக்கம் வி 1 ஸ்டேஷன்ல காவலரா வேலைபார்க்கிறேன். நேத்திக்கு வேலை விஷயமா கோயம்பேடு மார்க்கெட் போயிருந்தப்போதான் அந்தச் சம்பவம் நடந்துச்சு. சுமை தூக்கிட்டு வந்த தொழிலாளி ஒருத்தர் வலிப்பு வந்து கீழே விழுந்துட்டாரு. வாயெல்லாம் நுரைதள்ளி, நாக்கைக் கடிச்சுக்கிட்டதால ரத்தம் வடியத் துடிச்சுக்கிட்டு இருந்தவருக்கு முதலுதவி செஞ்சுகிட்டே, மத்தவங்களை உதவிக்குக் கூப்பிட்டேன். மார்க்கெட்டுக்கு வந்தவங்க செல்போன்ல வீடியோ எடுக்கிறாங்களே தவிர, அந்த மனுஷனுக்கு உதவி செய்றதுக்கு யாருமே முன் வரலை. கொரோனா பரிசோதனை செய்யறதுக்காக அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள் அந்தக் கூலித் தொழிலாளியைப் பரிசோதிச்சுப் பார்த்துட்டு, `பல்ஸ் ரேட் இறங்கிடுச்சுங்க. இனி ஒண்ணும் செய்ய முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. என்னால அதை ஏத்துக்கவே முடியலை. ஏன்னா, அந்த நிமிஷம் அவர் உயிரோடதான் இருந்தாரு. எப்படியாவது அவரைக் காப்பாத்திடணும்னு 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செஞ்சேன்.

போலீஸ் டிபார்ட்மென்ட்ல முதலுதவி செய்றதுக்கு சொல்லித் தந்திருக்காங்க. அதனால, ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம், அந்தத் தொழிலாளியோட நெஞ்சுப்பகுதியில பம்ப்பிங் பண்ணிவிட்டு, ஜில்லிட்டுப்போன கை காலையெல்லாம் சூடு பறக்கத் தேய்ச்சுவிட்டுக்கிட்டு இருந்தேன். கூடவே `உங்களுக்கு ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல’ன்னு பாசிட்டிவ்வா சொல்லிட்டே இருந்தேன். அவருக்கு லேசா நினைவு வந்ததும் கையைத் தூக்கச் சொன்னேன். கையைத் தூக்கினதும் டீ வாங்கிக்கொடுத்து குடிக்க வெச்சேன். அப்புறம் ஆம்புலன்ஸ்ல ஏத்தி அனுப்பி வெச்சேன்.

முத்து கிருஷ்ணவேணி உதவிய போது

அந்தத் தொழிலாளி அழுக்கா இருந்ததால யாருமே அவரைத் தொட்டுத் தூக்க முன் வரலை. அதுதான் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த நேரத்துல என்னைப் பத்தி ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்க விரும்புறேன். ரொம்ப நாளா உடல் வெயிட்டைக் குறைச்சு மெலியணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். வேலை நெருக்கடியில அதெல்லாம் செய்ய முடியலை. உடம்பு மெலியாம ஸ்டாமினாவோட இருந்ததாலதான், ஒத்த ஆளா ஓர் ஆம்பளையைத் தூக்கிக் கோணியில போட்டு முதலுதவி கொடுக்க முடிஞ்சது’’ என்று நிறைவாகச் சிரிக்கிற முத்து கிருஷ்ணவேணிக்குப் பூர்வீகம் திருநெல்வேலியை அடுத்த சங்கரன்கோவில். காவல்துறையில் வேலைபார்க்க வேண்டும் என்ற தீராத அவாவுடன், திருமணத்துக்குப் பிறகும் விடாமல் முயற்சி செய்து, 2005 பேட்சில் தேர்வாகியிருக்கிறார்.

முத்து கிருஷ்ணவேணி உதவிய போது

``அந்தத் தொழிலாளி பேரு லட்சுமணன். இப்போ நல்லா இருக்காரு. ஓர் உயிரைக் காப்பாத்தினது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்குது. மக்களோட வரிப்பணத்துல சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். அந்த மக்கள்ல ஒருத்தரோட உயிருக்கு ஆபத்துன்னா போலீஸ் வராம வேற யாரு வருவாங்க’’ என்பவரின் குரலில், அவருடைய வேலையின் மீதான பக்தி தெரிகிறது.



source https://www.vikatan.com/news/women/woman-police-officer-muthu-krishnaveni-speaks-about-how-she-saved-koyambedu-mans-life

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக